Wednesday, May 1, 2019

அந்த ஆறு நாட்கள்- தமிழில் இப்படிப்பட்ட கதைக்களங்கள் அரிது

சிங்கப்பூர் நண்பரும் எழுத்தாளருமான சித்தூராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) முகநூலில் "அந்த ஆறு நாட்கள்" குறித்து எழுதிய கதை விமர்சனம். நன்றி  சித்துராஜ் !!

                                       ******************
ஆரூர் பாஸ்கரின் - அந்த ஆறு நாட்கள் - 4 1/2 பாரா வாசிப்பனுபவம்
Gripping tale என்பார்கள். தொடக்கத்திலிருந்தே வாசகனை அங்கும் இங்கும் அசையாதபடி கட்டிப் போடும் கதை. ஆரூர் பாஸ்கர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை 2017ல் அடித்து நொறுக்கிய மிக உக்கிரமான இர்மா புயலைச் சுற்றி அப்படிப்பட்ட ஒரு நாவலைப் பின்னியிருக்கிறார்.
சகல வல்லமைகளும் வசதிகளும் பொருந்திய வல்லரசு இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் நிற்கும் நிதர்சனத்தைப் பரணி என்ற மின்சாரக் கம்பெனியில் வேலை பார்க்கும் இந்திய ஊழியரின் கண்களின் வழியே காட்டியிருக்கிறார். அதே இயலாமையைக் காட்டும் விதத்தில் பரணியின் கையில் பணமிருந்தும் புயலுக்கு முந்திய நாள்களில் அவருக்குச் சேமித்து வைப்பதற்காக குடிநீர் வாங்குவதும் பெட்ரோல் வாங்குவதும்கூட சிரமமாக இருக்கிறது. வழக்கமாக மிகுந்த ஒழுங்கோடும், பரஸ்பர மரியாதையோடும் காரியங்களைச் செய்யும் அமெரிக்கர்களிடையே இந்த இயலாமை ஏற்படுத்தும் நுணுக்கமான மாறுதல்கள். ஆரூர் பாஸ்கர் அற்புதம் செய்து இருக்கிறார்.

இயற்கை பேரிடர் போருக்கு ஒப்பானதுதான். இர்மா புயல் தாக்கத்தை மட்டும் சொல்லாமல் அது வரும் முன்பான நாள்களில் நாவலை பாஸ்கர் தொடங்கியது சிறப்பானது. போரும் பேரிடரும் வரும் முன்பு மனிதர்களிடையே ஏற்படும் வெற்று நம்பிக்கைகளையும், ஆயத்தங்களையும், மனப் போராட்டங்களையும் எடுத்துக் காட்ட இது உதவி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த விவரிப்புகளின் மூலமும், அமெரிக்காவை முன்னர் தாக்கிய புயல்களைப் பற்றி இடையிடையே சொல்லியும் பாஸ்கர் அமெரிக்க வாழ்வின் சவால்களை, அரசியலை, கறுப்பர்களுக்கு இழைத்த அநீதியை, அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களின் சந்தோஷங்களை, மன சஞ்சலங்களை, நட்பை ஒரு சேர அள்ளித் தந்திருக்கிறார். இதற்கு மிக உதவியாய் இருப்பவை நாவல் முழுவதும் பரவிக் கிடக்கும் தினசரி அமெரிக்க வாழ்வைப் பற்றிய மிக இயல்பான விவரங்கள். இதில் புயலால் அதிகம் பாதிப்படையக் கூடிய மின்சாரக் கட்டமைப்பு ஊழியரைக் கதாநாயகன் ஆக்கியிருப்பது புத்திசாலித்தனம் - அதிக தகவல்களைப் போகிற போக்கில் கொடுக்க முடிகிறது. புயலைப் படிக்கத் தொடங்கித் தற்கால அமெரிக்காவைப் பற்றி முழுமையாக படித்த அனுபவம்.
அழகான நடை. ஆனால் சில இடங்களில் தகவல்களைச் சொல்ல வந்த கட்டுரை போன்ற பாராக்கள் அசதி ஏற்படுத்தின. அது போல் இன்னமும் அழுத்தமாக சில வெள்ளை, லத்தீனோ, கறுப்பு அமெரிக்க கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கலாமோ என்றும் தோன்றியது. பாஸ்கர் முயலவில்லை என்றில்லை. ஆனால் நாவலில் இருக்கும் அத்தகைய கதாபாத்திரங்கள் கொஞ்சம் மேம்போக்கானவையாகவே எனக்குத் தோன்றின. அதே நேரத்தில் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டிருக்கும் சில நீளமான வாக்கியங்களைத் தமிழில் எழுதியிருந்திருக்கலாமோ?
தமிழில் இப்படிப்பட்ட கதைக்களங்கள் அரிது. நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்.

****************
நூலை வாங்க USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி- 

2 comments: