Monday, January 11, 2021

வெளிநாடு வாழ் பெற்றோர்களுக்கு

அமெரிக்கவாழ் பிள்ளைகளுக்கு வாரந்தோறும் தமிழ்வகுப்பு- எனும் பயணத்தில் நாங்கள் நான்காம் ஆண்டு எடுத்து வைத்திருக்கிறோம். "", ""என அச்சாரத்தில் தொடங்கிய இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக  இன்று பிள்ளைகள் தமிழில் எழுதுவது, படிப்பது, பேசுவது மகிழ்ச்சியும், உற்சாகம் தருகிறது.

வெளிநாடு வாழ் பெற்றோர்களாகிய நாம் பேசி,பழகி, சிந்திக்கும் நமது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு  "இந்தா பிடி"- என நம்மால் சடாரென எடுத்துக் கொடுத்துவிட முடியாது. அப்படியே கொடுத்தாலும் அவர்கள் பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை.

ஏனென்றால், ஒரு மொழியைக் கடத்துவதில் பிள்ளைகள்  வளரும் சூழலுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.  குறிப்பாக முற்றிலும் ஆங்கில மயமான மேற்கு நாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்குத் தாய்மொழியைத் தருவது என்பது மிகச் சவாலான ஒன்றுதான்.

அந்தச் சவாலான வேலையை நாம் சிரமப்பட்டு செய்துதான் ஆக வேண்டுமா என்ன ? ஆமாம், நமது மொழியை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவது என்பது நமது பண்பாட்டின் தொடர்ச்சி, நமது சிந்தனை மரபின் தொடர்ச்சி, அது நமது வாழ்வியல் மதிப்பீடுகளின் தொடர்ச்சி.... கூடவே, தமிழை நம்மிடம் கற்க்கும் பிள்ளைகள் தங்களுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு அதை அடுத்தத் தலைமுறைக்கும் கடத்துவார்கள் என்றும் நாம் நம்புகிறோம்.

அது மட்டுமல்லாமல், தமிழ் போன்ற ஒரு மொழியைப் பிள்ளைகள் கற்று சரளமாகப் பேசுவது, எழுதுவது, வாசிப்பது என்பது கண்டிப்பாக ஒரு திறமை தான். அந்தத் திறமை பிள்ளைகளின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும், ஞாபகசக்தியை அதிகரிக்கும், சிக்கல்களைத் தீர்க்கும் குணாதியங்கள் (problem solving skills) வளர்க்கும் என்கிறார்கள். "The limits of my language are the limits of my world"  என்றார் Ludwig (லுட்விக்) எனும் ஆஸ்திரிய மெய்யியலாளர். அதனால், அவர்கள் அறிவு விரிவடைய வேணும் நம் பிள்ளைகளுக்குத் தாய்மொழியைக் கற்பிப்போம். 

இவையெல்லாம், நம் பிள்ளைகளைக் கண்டிப்பாக மற்ற வெளிநாட்டுப் பிள்ளைகளிடம் இருந்து தனித்துக் காட்டும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

No comments:

Post a Comment