Wednesday, February 24, 2021

சென்னை புத்தகத் திருவிழாவில்...

 சென்னை புத்தகத் திருவிழாவில் எனது புத்தகங்கள் கிடைக்கும் அரங்குகள்;


*) வனநாயகன் (கிழக்கு பதிப்பகம்)-ரூ.275, அரங்கு எண் F-7

*) இர்மா-அந்த ஆறு நாட்கள் (ஸீரோ டிகிரி) - ரூ.180, அரங்கு எண்கள் 10, 11

*) பங்களா கொட்டா (அகநாழிகை)- ரூ.130,  டிஸ்கவரி புக் பேலஸ், அரங்கு எண் F-19



வழக்கம் போல புத்தக விற்பனை மூழம் வரும் இராயல்டி தொகை அனைத்தையும்   சிறகுகள் கல்வி அறக்கட்டளை நிதியில் சேர்த்துவிடுவோம். நன்றி !

Wednesday, February 17, 2021

டெக்சாஸில் வரலாறு காணாத பனிப்புயல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத கடுங்குளிர். உறைய வைக்கும் குளிரோடு கூடவே தொடர்ச்சியான பனிப் பொழிவால் ஏராளமான சாலை விபத்துகள், உயிர் இழப்புகள் என அங்கு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. 


இரயில், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறன. கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.  அவசர நிலைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள். உதவிக்கு இராணுவமும் களத்தில் இறக்கியிருக்கிறது.

தொடர்ச்சியாக உறைய வைக்கும் குளிர் காற்று வீசிக்கொண்டிருப்பதால் வீடுகளின் மின்சாரத் தேவை அதிகரித்திருக்கிறதாம்.  அதனால் வந்த மின்தட்டுப்பாட்டால் மின்வெட்டு வேறு. ஓரிரு நாட்களுக்குச் சுழல் தான் முறையில் மின்சாரம் என்கிறார்கள். இங்கே சகலமும் மின்சாரத்தில் இயங்குவதால்,  மின்சாரம் இல்லாத அமெரிக்க வாழ்வை நினைத்துப் பார்க்கவே முடியாது. 

ஹூஸ்டனில் இருக்கும் ஒரு நண்பரிடம் பேசினேன். மின்சாரம் இல்லாததால் இரண்டு நாட்களாக சமைக்க அடுப்பு பற்றவைக்க முடியவில்லை. வெளியில் போய் சாப்பிடவும் வழியில்லை. வெப்பம் உறைநிலைக்குக் கீழே சென்றதால் வீட்டுக்குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. வெளியே சாலைகளில் போக்குவரத்து விளக்குகள் எரிவதில்லை.... என மிக நீண்ட கஷ்டப்பட்டியல் வைத்திருக்கிறார்.

இயற்கை என்ற ஒன்று இருப்பதும். அதனோடு மனிதன் இயைந்து வாழ்வது அவசியம் என்பதையும் இதுமாதிரியான நெருக்கடி காலங்களில் கண்டிப்பாக உணரமுடியும் என்பது நிதர்சனம்.  

கடுங்குளிர், பனிப்பொழிவோடு கடுமையான மின்வெட்டையும் எதிர்கொள்ளும் டெக்சாஸ் மாநில அன்பர்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விழைகிறேன்.

இது குறித்த ஒரு காணொளி https://youtu.be/qMivwXOfOmM

Monday, February 15, 2021

2-ஆம் ஆண்டில் தமிழ்ச்சரம் - இரண்டு புதிய அம்சங்களுடன்

தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச்சரம் (www.tamilcharam.com) எழுத்தாளர் பக்கம், தேர்ந்தெடுக்கப்பட்டவை எனும் இரண்டு புதிய அம்சங்களைத் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இனி, தளத்தின் முகப்புப் பக்கத்தில் வரும் இந்தப் புதிய வசதிகளைக் கொண்டு தேடுதல் அவசியமின்றி  வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான  எழுத்தாளர்களின் பதிவுகளையும் , நிர்வாகக்குழு தேர்ந்தேடுக்கும் பதிவுகளையும் நேரடியாக  வாசித்து மகிழலாம்.


#தமிழ்ச்சரம்.காம்

Tuesday, February 9, 2021

தமிழ்ச்சரம்.காம் - முன்னணி 25

தமிழ்ச்சரம்.காம் தளத்தில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட முதல் 25 பதிவுகளை 'முன்னணி 25' என்ற பிரிவில் தருகிறோம். அந்தப் பிரிவில் பெரும்பாலும் நகைச்சுவையான பதிவுகளே முதல் மூன்று இடங்களில் இருக்கும்.

ஆனால், அதிசயமாக இந்தவாரம் மாஸ்டர் படம் குறித்த ஒரு பதிவு முதல் இடத்தில். அந்தப் பதிவை "லோகேஷ் என்கிற பரோட்டா மாஸ்டர்" என்ற தலைப்பில் நண்பர் சுரேஷ் கண்ணன் (பிச்சைப்பாத்திரம்) தான் எழுதியிருக்கிறார். இல்லை இல்லை கொத்துகறி போட்டிருக்கிறார். அந்தப் பதிவு

http://pitchaipathiram.blogspot.com/2021/01/blog-post.html

மற்ற முன்னணிப் பதிவுகளைத்  தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com)  தளத்தில் நீங்கள் நேரடியாகவே வாசிக்கலாம்.



#தமிழ்ச்சரம்.காம்



Wednesday, February 3, 2021

ஏன் வாட்ஸ்அப் ?

ஏன் வாட்ஸ்அப் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள் என ஒரு நண்பர் உள்பெட்டியில் கேட்டார்.  காரணத்தை இங்கே  சொல்லி விடுகிறேன்.

வாட்ஸ்-அப்பில் நான் கூடுதல் கவனம் செலுத்தக் காரணம் சமீபத்தில் நாங்கள் நடத்திய  ஒரு கருத்துக்கணிப்பு. ஆமாம், கடந்த ஆண்டு தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) தளத்தின் பயன்பாட்டினை மேம்படுத்தும் நோக்கிலும், தமிழ்ச்சரத்தின் ஊடாக தங்கள் வலைப்பூக்களுக்கான வாசகர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கிலும் ஒரு கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்திருந்தோம்.

அதில் ஒரு கேள்வி - "தமிழ்ச்சரத்தினைப் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள் ?" அதற்குப் பலர் (70% சதம்) "வாட்ஸ் அப்" எனச் சொல்லி இருந்தனர். ஆச்சர்யமாக இருந்தது. காரணம், தளம் பலரைச்  சென்றடைய வேண்டும் என்பதற்காக மார்க்கெட்டிங்  நிபுணர் ஒருவருடைய


 ஆலோசனைபடி பணம் செலவழித்து பேஸ்புக்கில் தான் விளம்பரம் செய்திருந்தோம். ஆனால், முடிவு வேறாக இருந்தது. வாட்ஸ்-அப்  வழியாக பணம் செலவு செய்யாமல் நண்பர்கள் வழியாகவே செய்திப் பலரைச் சென்றடைந்திருக்கிறது.

வாட்ஸ் அப்-இன் வீச்சைத் தெரிந்து கொண்ட தருணம் அதுதான். இது ஒரு துல்லியமான அறிவியல் பூர்வமான ஆய்வு கிடையாது தான். ஆனால், பெரிய செலவோ, மார்கெட்டிங் தந்திரங்களோ இல்லாமல் வாய்வழிச் செய்தி போல தகவல்கள் இலவசமாக பலரைச் சென்றடைய எளிய வழி வாட்ஸ்-அப் என்பதை இங்கே பலர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இங்கே இதைப் பகிர்கிறேன்.

#வாட்ஸ்-அப்