விடுமுறை முடிந்து வீட்டுக்கு வந்தால் உடனே வேலை என்ற பதற்றத்தோடும் சிவந்த கண்களோடும் வீடு வந்து சேர்ந்தேன். சிவந்த கண்கள் என்ற உடன் ஏதோ கம்யூனிச படம் போல என நண்ப்ரகள் நினைக்கத் தேவையில்லை.
நள்ளிரவில் கிளம்பி விடியல் காலையில் வரும் விமானங்களை ரெட் ஐ பிளைட் (red-eye flight) என்கிறார்கள். என்னுடையது நான்கு மணி நேர விமான பயணம் என்றாலும் பயணம் அலுப்பூட்டக்கூடியதாகவே இருந்தது. சரியான தூக்கமில்லை. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்ததில் கழுத்துவலி. கூடவே, முகக்கவசம் எனும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டிய இம்சை வேறு சேர்ந்துகொண்டது.
பொதுவாகவே விமானப்பயணங்கள் மிகவும் அலுப்பூட்டக்கூடியவை. அதனால் தான், வந்த புதிதில் பயணிகளைக் கவர நல்ல சுவையான உணவு, இலவசங்கள், வெளிநாட்டு மது வகைகள், கவர்ச்சிகரமான பணிப்பெண்கள், பொழுதுபோக்கு சாதனங்கள் என்றெல்லாம் தூண்டில் போட்டார்கள்.
என்னதான் அவர்கள் வருந்தி வருந்தி அழைத்தாலும் உள்ளே இடநெருக்கடி, ஒரே இடத்தில் கட்டி போட்டது போல அடைத்து வைப்பது. எகானமி, பிசினஸ் கிளாஸ் என அதிக பணம் தந்தால் கூடுதல் சொகுசு எனும் பாகுபாடு , அதிக உயரத்தில் காது அடைப்பு, வாந்தி, பல அடுக்கு பாதுகாப்பு சோதனைகள் என பலருக்கு விமானப் பயணம் என்பது உவப்பனதாக இருப்பதில்லை.
எனக்கும் 35 ஆயிரம் அடி உயரத்தில் ஜிவ்வென பறந்த போது வந்த ஆரம்ப கட்ட சிலிர்ப்பும், கவர்ச்சியும் என்றோ மங்கி விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக பல இலட்சம் மைல்கள் பறந்தாகி விட்டது. உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ380-யிலும் பயணித்தாகி விட்டது. இருந்தாலும் விமானப் பயணம் என்பது இன்றும் 'கடி'யாகவே இருக்கிறது.
ஆனால், இந்தச் சூழல் விரைவில் மாறும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். சமீபமாக பிரிட்டனின் ரிச்சர்ட் பிரான்சன், அமெரிக்காவின் எலான் மாஸ்க், ஜெப் பெசோஸ் (Jeff Bezos) போன்றவர்கள் செய்யும் விண்வெளிப் பயணங்கள் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. அந்த முன்னெடுப்புகள் சமானியர்கள் பயணிக்கும் கமர்சியல் ஏர்லைன் துறையிலும் மிகப்பெரிய வெடிப்பைக் கண்டிப்பாக ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.
இன்று, அமெரிக்கா-இந்தியா பயண நேரம் என்பது சராசரியாக குறைந்தது 20 மணி நேரமாக இருக்கிறது. ஸ்பேஸ்-X இன் ஏவுகணைத் தொழில்நுட்பம் SpaceX Starship போன்றவை நடைமுறைக்கு வந்தால் பூமி பந்தின் எந்தப் பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் நம்மால் சென்றடைந்துவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறது.
ம்... காலையில் சென்னையில் டிபன் , அதற்கு காஃபி நீயூயார்க்கில் என்பதை நினைத்தால் நன்றாகதான் இருக்கிறது. பார்ப்போம்.
நன்றி- படங்கள் இணையம்.
No comments:
Post a Comment