Sunday, September 26, 2021

அருஞ்சொல் இதழுக்கு வாழ்த்து

'அருஞ்சொல்'  எனும் தளத்தின் வழியாக இணையத்தை தனது முதன்மைக் களமாக்கி செயல்படத் துவங்கி இருக்கும் இதழாளர் சமஸ்-சுக்கும் அவருடைய இதழுக்கும் வாழ்த்துகள். 

மிகச் சரியான திசை, வெல்க... !!

அருஞ்சொல் | சமஸ் | arunchol.com

Tuesday, September 21, 2021

டிக்டாக் -அமெரிக்க பள்ளிகளில் தலைவலி

 'ஸ்வீட் எடு கொண்டாடு' என்பது போல அமெரிக்க  பள்ளி மாணவர்கள் மத்தியில்  டிக்டாக் வழியாக ஒரு புதிய சவால் ஒன்று வைரலாகி உலாவுவதாக ஒரு இமெயில் அனுப்பி இருக்கிறார்கள்.

அதன்படி,  மாணவர்கள் பள்ளிக்கு சொந்தமான பொருட்களை அடித்து உடைத்து துவம்சம் செய்வது இல்லை அவற்றைத் திருடிக் கொண்டு வருவது போன்ற காணொலிகளை எடுத்து பகிரவேண்டுமாம். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பள்ளி மாணவர்கள் பள்ளி கழிவறைகளின் கதவுகளை அடித்து உடைப்பது, அங்கிருக்கும் டாய்லட் பேப்பர்களை உருவி வீசுவது, பள்ளிகளில் இருந்து லேப்டாப்புகளைத் திருடிக் கொண்டு வருவது போன்ற வெறியாட்டங்களில் ஈடுபடுகிறார்களாம்.


இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு அவர்கள் மேல்  குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றிருக்கிறார்கள். கூடவே இதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு பெற்றோர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றிருக்கிறார்கள். 

தலைவலி. தரமான கல்வி அனைவருக்கும் இலவசம் என மாணவர்களை பள்ளிக்கு அழைத்தால் அவர்கள் செய்யும் வெறியாட்டத்தை எந்த விதத்தில் சேர்ப்பது.  குறும்புத்தனத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது தானே. இவர்கள் எல்லாம் படித்த படிப்புக்கு என்ன மரியாதை செய்கிறார்களோ தெரியவில்லை. 

முக்கியமாக, சிறுவயதில் வன்முறை இப்படிக் கொண்டாட்டமாவது என்பது சரியான அறிகுறி அல்ல. ஆபத்து.

#TikTokvandalism

Saturday, September 11, 2021

மர அலமாரிக்குள் ஒரு மணலுள்ள ஆறு...

உள்பெட்டிக்கு வந்த ஒருவர்,  "என்ன நண்பரே முன்ன மாதிரி கவிதையெல்லாம் பகிர்வதில்லையே ? What is the matter ? " என்றார்.

மேட்டர் எல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. மொழியின் ஆகச்சிறந்த வடிவம் கவிதை என்பதில் என்றும்  எந்த மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை. அதற்காக கவிதை நேரம் என்றெல்லாம் தனியாக ஒதுக்கி வாசிக்கும் பழக்கமும் இல்லை.

ஆனால், திட்டமிடுதல் எதுவுமின்றி தோன்றும் போது கண்ணில் படும் கவிதைகளை எடுத்து வாசிப்பேன். அதை எழுதியது தபூ சங்கர், மனுஷ் ... என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வாசிக்கும் கவிதைகளில் ஏதோ ஒரு வரியோ சொல்லோ தெறிப்பாக வந்து நிற்கும் போது புத்தகத்தை மூடிவைத்து விடுவேன்.

பிரமிப்பு தரும் அந்தச் சொல்லோ, வரியோதான் அன்றைய நாள் முழுவதும் மனதுக்குள் பறவை போல தாழபறந்து  சுழன்று கொண்டேயிருக்கும்.

அப்படிச் சமீபத்தில் வாசித்து லயித்த கல்யாண்ஜி-யின் கவிதை ஒன்று மணல் உள்ள ஆறு தொகுப்பில் இருந்து  (சந்தியா பதிப்பகம்)

ஆச்சி இறந்து

அநேக காலம் ஆயிற்று.

அவளுடைய மரஅலமாரியில்

வேறெதையோ தேடுகையில் கிடைத்தது

ஆச்சியின் ஊதா சோப்பு டப்பாவும்

அதற்குள் இருந்த லைபாய் சோப் துண்டும்.

எந்த ஆற்றில் அவள் குளிக்கையில்

தவறி விழுந்தததோ,

எல்லா பக்கத்திலும் முள் முள்ளாக

ஒட்டிய மணல் சோப்பில்.

தெரியாமல் போயிற்று

இத்தனை காலமும்

ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது

மர அலமாரிக்குள் ஒரு

மணலுள்ள ஆறு என்று..