Monday, November 22, 2021

வனநாயகன் குறித்து-20 (இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி நினைவுக்கு வருகிறது)

அமெரிக்க வாசக நண்பர் திலகா எனது "வனநாயகன்-மலேசிய நாட்கள்" நாவல் வாசிப்பனுபவம் குறித்துப் பகிர்ந்தது ... நன்றி  திலகா!


//

வனநாயகன் (மலேசிய நாட்கள்) முதல் வாசிப்பு (பருந்து பார்வை) முடித்தேன். இன்னமும் ஆழமாக இரண்டாவது முறை படித்துப் பார்க்க வேண்டும்.


முதல் நாவலை ஒப்பிடும் போது எந்தவித தயக்கமும் இல்லாமல், சரளமாக வழுக்கிச் செல்கிறது எழுத்து நடைழ உரையாடல்கள் கன கச்சிதமாக அமைந்துள்ளன.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி  நாவலும் நினைவுக்கு வந்தது. அந்தக் கதையும் கிட்டத்தட்ட இதே சாயலுடன் இருக்கும். இரண்டிலும் கதாநாயகன் பாத்திரங்கள் மட்டும் சுபாவத்தில் வேறுபட்டவர்களாக இருக்கின்றனர்.


அவர் டில்லி சூழ்நிலையை மையமாக வைத்துக் கதையை நகர்த்தி இருப்பார். மொத்தத்தில் தேர்ந்த நாவலாசிரியருக்கான அறிகுறி தெரிகிறது. இது போல இன்னும் பல அற்புதமான நாவல்களைப் படைத்திட எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். !!

//

இணையத்தில் வாங்க இணைப்பு கீழே;

https://dialforbooks.in/product/9788184936773_/

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:

அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரையாளர்கள்

இயல்புக்கு மாறாக கன மழை பெய்தால் இல்லை ஒரு  கோடையில் தாங்க முடியாத வெயில் அடித்தால் இயற்கையைச் சபிப்பார்கள். இல்லை மிஞ்சிபோனால் அரசியல்வாதிகளைச் சபித்துவிட்டுக் கொஞ்ச நாளில் அதையும் மறந்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடுவார்கள்.

இங்கே  பருவநிலை மாற்றம், சூழலியல் போன்ற விசயங்கள் பரவலாக  வெகுமக்கள் ஊடகத்தில் விவாதிக்கப்படுவதில்லை. அதனால்தான் அது குறித்து தமிழில் விரிவான காத்திரமான கட்டுரைகளைப் பார்க்க முடிவதில்லை என நினைக்கிறேன். 

அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கனடா நண்பர் ரவி நடராஜன் 'பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள்' என்ற தொடர் கட்டுரையைச் சொல்வனத்தில் எழுதிவருகிறார். மிகச் சிறப்பாக இருக்கிறது.


இங்கே, அறிவியல் கட்டுரைகள் என்றால் பலர் மேலோட்டமாக பகடியோடு வேண்டும். சினிமா கலந்து எழுது. வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுது என்றெல்லாம் சொல்லி வடையை விட்டுவிட்டு பொத்தல்களை எண்ணத் தொடங்கி விடுகிறார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு பல ஆண்டுகளாக ரவி நடராஜன் விரிவாக அதே சமயத்தில் எளிமையாக, புரியும்படியான அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இதுபோல தானியங்கி கார்கள் குறித்து அவர் சொல்வனத்தில் தொழில்நுட்ப நெடுந்தொடர் எழுதியது நினைவிருக்கலாம். 


இவை சும்மா கற்பனையில்  வந்ததை எழுதிவிடும் விசயம் இல்லை. தரவுகளைத் தேடித் தேடி படிக்க வேண்டும். காணொலிகளைப் பார்க்கவேண்டும். ஈவு இரக்கமின்றி பல ஆயிரம் மணி நேர உழைப்பை வேண்டுபவை.

அவர் இதற்கெல்லாம்  ஒரு பைசா வாங்குவதுபோல தெரியவில்லை. முழுவதுமாக தன்னார்வத்தில் மட்டுமே செயல்படுவாராக இருக்கும். கனடாவில் வசிக்கும் அவருக்கு ஏடுகள் தரும் சிறிய சன்மானங்கள் ஒரு பொருட்டல்ல என்றாலும் அவர் போல பல்லாண்டுகளாக தன்னார்வமாக  அறிவியல்,தொழில்நுட்பப் புலத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் எந்தவிதமான மரியாதையைச் செய்துவிட்டோம் ?

நாம் புனைவைக் கொண்டாடுவது போல ஏனோ கட்டுரையாளர்களைக் கொண்டாடுவதில்லை என நினைக்கிறேன். இதில் அரசியல் கட்டுரையாளர்களைக் கூட ஒருவிதத்தில் சேர்க்கலாம். ஆனால், ரவி நடராஜன், சைபர் சிம்மன் போன்ற அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரையாளர்கள் ? சுத்தம்.

குறிப்பு- ரவி நடராஜனின் புவி சூடேற்றம் குறித்த சொல்வனம் கட்டுரைகளின் இணைப்பு கீழே..

https://solvanam.com/author/ravinatarajan/


Tuesday, November 16, 2021

சிறுபிள்ளைகளுக்கு சமூக ஊடகங்கள்

சிறுபிள்ளைகளுக்கு சமூக ஊடகங்கள் வேண்டாம் என பெற்றோர்களாகிய நாம் ஏன் நினைக்கிறோம் தெரியுமா ?

சமூகஊடகங்களில் தகாதவை அதிகம் அதனால் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்றே பெரும்பாலும் நினைக்கிறோம்.  ஆனால், அவற்றில் நல்லவைகளே இருந்தாலும் சிறுவயதில் தரவேண்டாம் என்கிறார்கள் வல்லுநர்கள். அதற்குக் காரணம் Social Media is Complicated என்பதே பதிலாக இருக்கிறது. 



அதாவது பெரியவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சமூக ஊடகங்கள் முழு மூளை வளர்ச்சி பெறாத பிள்ளைகள் கிரகிக்க மிகக் கடினமானதாம். சந்தைப் படுத்துதல் என்றால் என்ன? தனிமனிதத் தகவல் திருட்டு என்றால் என்ன?, விளம்பரங்களின் வழியாக தங்களை யார் எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என பலவற்றை அவர்களால் பிரித்து அறிய முடியாதாம்.


கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கோ (10+), வேறு விதமான பிரச்சனைகள். போட்டி, பொறாமை. எனக்கு அவளைப் போல ஆயிரக்கணக்கான நண்பர்களும், பின் தொடர்பவர்களும் வேண்டும், என்னுடைய படத்துக்கு ஆயிரம் லைக்குகள் வாங்கி புகழ்பெற வேண்டும் என்பது மாதிரியான ஏக்கங்கள். அது கிடைக்காத போது தாழ்வு மனப்பான்மை போன்ற பல உளவியல் தொந்தரவுகள்.

கூடுதலாக, சக நண்பர்களின் கேலி, பாலியல் அத்துமீறல்கள் அதனால், இளம் பருவத்திலேயே தூக்கத்தின் தரம் குறைதல், மனச் சோர்வு,உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் முற்றி தற்கொலை வரைப் போகும் ஆபத்துகள் வேறு.

ஆனால், இன்றைய சூழலில் பெற்றோர்களாகிய நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிள்ளைகளிடம் இருந்து ஃபோனையோ, சமூக ஊடகங்களையோ மறைக்க முடியாது. ஆனால், நேரக்கட்டுப்பாடு இன்றி சின்ன வயதிலேயே சொந்த ஃபோன் தருவது என்பதையாவது முடிந்தவரைத் தள்ளிப் போடுங்கள் என்கிறார்கள். யோசியுங்கள்...

படம் - நன்றி இணையம்.

Friday, November 5, 2021

சங்கப் பாடங்கள் ஆங்கிலத்தில் - நந்தினி கார்கி

சங்கப் பாடல்களை கார்கி வைரமுத்துவின் மனைவி நந்தினி மிகத் தெளிவான ஆங்கில உச்சரிப்பில் (தமிழ் அல்ல) தொடர்ச்சியாக ஒலி உரையாக வழங்கி வருகிறார். நாம் உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் நமது சொந்தமண்ணின் கலாச்சாரத்தை அறியவேண்டும். அதற்கு நாம் சங்கஇலக்கியத்தை  நாட வேண்டும் என அறிமுக உரையில் சொல்லி இருக்கிறார். அவருடையத் தனித் தனிப்பாடல்களின் ஒலி உரைகள் அனைத்தும் இணையத்தில் இலவசமாகவும் ஆப்பிள் பாட்காஸ்டாகவும் கிடைக்கிறது. தமிழ் தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

ஏன், தமிழ் தெரிந்தவர்களுக்கும் தான். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.  ஆனால், எனக்கு இதுபோன்ற ஆங்கில உரைகளின் நடுவில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென இதுவரைக் கேட்டிராத



வித்தியாசமான உச்சரிப்பில் தமிழ்சொற்களைக் கேட்கும் போது சொல்ல இயலாத ஒருவித உணர்ச்சி ஏற்படுகிறது. :)

பாட்காஸ்ட் இணைப்பைக் கீழே தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.

podcast

https://podcasts.apple.com/us/podcast/sangam-lit/id1449878007

Wednesday, November 3, 2021

சோஷியல் மீடியா -இது நம்ம பேட்டை

நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !!. "சோஷியல் மீடியா -இது நம்ம பேட்டை" அச்சுப் புத்தகமாகத் தயாராகிவிட்டது. கண்ணைக் கவரும் அழகான அட்டைப் பட வடிவமைப்புடன்  இதை ஸீரோ டிகிரி (எழுத்து பிரசுரம்) மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக  தமிழகத்தின் பல முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடும்  அவர்களின் புத்தகத் தரத்தைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.



எண்ணிக்கை அடிப்படையில் இது என்னுடைய ஐந்தாவது புத்தகம். ஆனால்,  புனைவல்லாத முதல் நூல் என்ற வகையில் புதிய வாசகர் பரப்புக்குள் நுழைகிறேன்.

'சோஷியல் மீடியா' வில் இயங்கும் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது மட்டுமல்ல. இதன் தொடர்ச்சியாக வரப்போகும் அடுத்த புத்தகமும் தான்.

10% சதவிகிதத் தள்ளுபடியில் புத்தகத்தை ஆர்டர் செய்ய நண்பர்கள் கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி !

https://www.zerodegreepublishing.com/products/social-media-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-aroor-bhaskar-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D