Tuesday, November 16, 2021

சிறுபிள்ளைகளுக்கு சமூக ஊடகங்கள்

சிறுபிள்ளைகளுக்கு சமூக ஊடகங்கள் வேண்டாம் என பெற்றோர்களாகிய நாம் ஏன் நினைக்கிறோம் தெரியுமா ?

சமூகஊடகங்களில் தகாதவை அதிகம் அதனால் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்றே பெரும்பாலும் நினைக்கிறோம்.  ஆனால், அவற்றில் நல்லவைகளே இருந்தாலும் சிறுவயதில் தரவேண்டாம் என்கிறார்கள் வல்லுநர்கள். அதற்குக் காரணம் Social Media is Complicated என்பதே பதிலாக இருக்கிறது. 



அதாவது பெரியவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சமூக ஊடகங்கள் முழு மூளை வளர்ச்சி பெறாத பிள்ளைகள் கிரகிக்க மிகக் கடினமானதாம். சந்தைப் படுத்துதல் என்றால் என்ன? தனிமனிதத் தகவல் திருட்டு என்றால் என்ன?, விளம்பரங்களின் வழியாக தங்களை யார் எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என பலவற்றை அவர்களால் பிரித்து அறிய முடியாதாம்.


கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கோ (10+), வேறு விதமான பிரச்சனைகள். போட்டி, பொறாமை. எனக்கு அவளைப் போல ஆயிரக்கணக்கான நண்பர்களும், பின் தொடர்பவர்களும் வேண்டும், என்னுடைய படத்துக்கு ஆயிரம் லைக்குகள் வாங்கி புகழ்பெற வேண்டும் என்பது மாதிரியான ஏக்கங்கள். அது கிடைக்காத போது தாழ்வு மனப்பான்மை போன்ற பல உளவியல் தொந்தரவுகள்.

கூடுதலாக, சக நண்பர்களின் கேலி, பாலியல் அத்துமீறல்கள் அதனால், இளம் பருவத்திலேயே தூக்கத்தின் தரம் குறைதல், மனச் சோர்வு,உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் முற்றி தற்கொலை வரைப் போகும் ஆபத்துகள் வேறு.

ஆனால், இன்றைய சூழலில் பெற்றோர்களாகிய நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிள்ளைகளிடம் இருந்து ஃபோனையோ, சமூக ஊடகங்களையோ மறைக்க முடியாது. ஆனால், நேரக்கட்டுப்பாடு இன்றி சின்ன வயதிலேயே சொந்த ஃபோன் தருவது என்பதையாவது முடிந்தவரைத் தள்ளிப் போடுங்கள் என்கிறார்கள். யோசியுங்கள்...

படம் - நன்றி இணையம்.

No comments:

Post a Comment