Monday, November 22, 2021

அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரையாளர்கள்

இயல்புக்கு மாறாக கன மழை பெய்தால் இல்லை ஒரு  கோடையில் தாங்க முடியாத வெயில் அடித்தால் இயற்கையைச் சபிப்பார்கள். இல்லை மிஞ்சிபோனால் அரசியல்வாதிகளைச் சபித்துவிட்டுக் கொஞ்ச நாளில் அதையும் மறந்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடுவார்கள்.

இங்கே  பருவநிலை மாற்றம், சூழலியல் போன்ற விசயங்கள் பரவலாக  வெகுமக்கள் ஊடகத்தில் விவாதிக்கப்படுவதில்லை. அதனால்தான் அது குறித்து தமிழில் விரிவான காத்திரமான கட்டுரைகளைப் பார்க்க முடிவதில்லை என நினைக்கிறேன். 

அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கனடா நண்பர் ரவி நடராஜன் 'பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள்' என்ற தொடர் கட்டுரையைச் சொல்வனத்தில் எழுதிவருகிறார். மிகச் சிறப்பாக இருக்கிறது.


இங்கே, அறிவியல் கட்டுரைகள் என்றால் பலர் மேலோட்டமாக பகடியோடு வேண்டும். சினிமா கலந்து எழுது. வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுது என்றெல்லாம் சொல்லி வடையை விட்டுவிட்டு பொத்தல்களை எண்ணத் தொடங்கி விடுகிறார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு பல ஆண்டுகளாக ரவி நடராஜன் விரிவாக அதே சமயத்தில் எளிமையாக, புரியும்படியான அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இதுபோல தானியங்கி கார்கள் குறித்து அவர் சொல்வனத்தில் தொழில்நுட்ப நெடுந்தொடர் எழுதியது நினைவிருக்கலாம். 


இவை சும்மா கற்பனையில்  வந்ததை எழுதிவிடும் விசயம் இல்லை. தரவுகளைத் தேடித் தேடி படிக்க வேண்டும். காணொலிகளைப் பார்க்கவேண்டும். ஈவு இரக்கமின்றி பல ஆயிரம் மணி நேர உழைப்பை வேண்டுபவை.

அவர் இதற்கெல்லாம்  ஒரு பைசா வாங்குவதுபோல தெரியவில்லை. முழுவதுமாக தன்னார்வத்தில் மட்டுமே செயல்படுவாராக இருக்கும். கனடாவில் வசிக்கும் அவருக்கு ஏடுகள் தரும் சிறிய சன்மானங்கள் ஒரு பொருட்டல்ல என்றாலும் அவர் போல பல்லாண்டுகளாக தன்னார்வமாக  அறிவியல்,தொழில்நுட்பப் புலத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் எந்தவிதமான மரியாதையைச் செய்துவிட்டோம் ?

நாம் புனைவைக் கொண்டாடுவது போல ஏனோ கட்டுரையாளர்களைக் கொண்டாடுவதில்லை என நினைக்கிறேன். இதில் அரசியல் கட்டுரையாளர்களைக் கூட ஒருவிதத்தில் சேர்க்கலாம். ஆனால், ரவி நடராஜன், சைபர் சிம்மன் போன்ற அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரையாளர்கள் ? சுத்தம்.

குறிப்பு- ரவி நடராஜனின் புவி சூடேற்றம் குறித்த சொல்வனம் கட்டுரைகளின் இணைப்பு கீழே..

https://solvanam.com/author/ravinatarajan/


No comments:

Post a Comment