Sunday, January 9, 2022

உலகின் முதல் சுயசேவை அங்காடிகள்

நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் அந்த நாட்களில் மாதா மாதாம் மளிகைப்பட்டியல் போடும் பழக்கம் இருந்தது  நினைவிருக்கலாம். சூடம், சாம்பிராணி,பத்திகட்டு போன்ற சாமி சாமான்களை முதலில் எழுதி விட்டு பிறகு து.பருப்பு, க.பருப்பு, தே. எண்ணெய் என நீளும் அந்தப் பட்டியலின் இறுதியில் எ.புண்ணாக்கு, க.புண்ணாக்கு எனச் சகலமானதையும் அதில் பார்க்கலாம்.

அந்தப் பட்டியலை ஒரு துணிப் பையோடு சேர்த்து மளிகைகடையில் கொடுத்து வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தோம். சமீப காலமாக, அதுபோன்ற மளிகை கடைகள் அருகி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டியதைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்து சூப்பர் மார்கெட்கள் பெருகிவிட்டன.  ஆரம்பத்தில் சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இருந்த இந்தப் பழக்கம் இன்று சிறு நகரங்களிலும் மக்களிடம் பலத்த வரவேற்ப்பைப் பெற்றிருக்கிறது.

இதுபோன்ற செல்ஃப் சேர்வ் (self-serving store) எனும் இந்த சுய சேவை அங்காடிகளை முதலில் அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா ?

அமெரிக்கர்கள் தான்.  Piggly Wiggly என்ற அமெரிக்கப் பல்பொருள் அங்காடி நிறுவனம்தான் முதன் முதலில் டென்னசி மாநிலத்தில் உள்ள மெம்பிஸ் (Memphis, TN) நகரில் இதை ஒரு சோதனை முயற்சியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். அறிமுகம் செய்த ஆண்டு 1916. அதற்கு வாடிக்கையாளர்களிடம் கிடைத்த பேராதரவைப் பார்த்து மற்ற சில்லறை வியாபாரிகளும் சுயசேவைக்கு மாறினார்கள் என்பது வரலாறு.

இந்த பிக்லி விக்லி(Piggly Wiggly) நிறுவனம் தான் கடையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்  பொருட்களின் மீது விலையைக் குறித்து வைப்பது, வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் கார்ட் எனும் தள்ளுவண்டி தந்தது போன்ற பல விசயங்களில் முன்னோடியாக இருந்திருக்கிறது. 



டென்னசி செல்பவர்கள் Piggly Wiggly-யின் வரலாற்றைச் சொல்லும் அருங்காட்சியகத்தைப் பார்க்கத் தவறவிடாதீர்கள்.

No comments:

Post a Comment