மொழியின் அடர்செறிவான வடிவம் கவிதை. அதன் நுட்பம் கவிஞர் பிரியா பாஸ்கருக்குச் சரியாக கை வந்திருக்கிறது என நினைக்கிறேன்.
அமெரிக்காவின் மிக்சிகனில் இருந்து எழுதும் அவரை நான் சில ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். வாசிப்பவர் நெஞ்சம் நிரம்பி வழிந்தோடும் காத்திரமான கவிதைளை அவர் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். இதுவரை பிரியா இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.
அவருடைய 'அப்பாவின் சைக்கிள் கவிதை' எனக்கு நெருக்கமான ஒன்று. அந்தக் கவிதையைக் கீழே இணைத்திருக்கிறேன் பாருங்கள். நெஞ்சில் நங்கூரமிடும் இதுபோன்ற பல கவிதைகள் படைக்க பிரியாவை வாழ்த்துகிறேன் !
அப்பாவின் சைக்கிள்
அப்பாவின் சைக்கிளுக்கும் அவருக்கும் ஐம்பத்தைந்து வருடத் தோழமை.
அவரது சம்பாத்தியத்தில்
முதல் வாகனம்.
சனிக்கிழமை தோறும் அதற்கும்
எண்ணெய்க் குளியல்.
இருவரும் தனிமையில்
உரையாடிக் கொள்வார்கள்.
அதற்குத் தெரியாத
அப்பாவின் இரகசியங்கள்
என்று ஒன்றும் இல்லை.
நாங்கள் கற்றுக் கொள்ள எடுத்துத்
தவறிக் கீழேவிழுந்தபோதும்
வாஞ்சையுடன் அதனைத்தான்
தடவிக் கொடுத்தார்.
விபத்தொன்றில் காலிழந்து
செயற்கைக் கால் பொருத்தப்பட்ட
பின்னரும்
அவர் ஓட்டும் ஒரே வாகனம்
அந்த சைக்கிள் தான்.
அப்பா எங்களைச் சுமந்தது போலவே
சலிப்பேதுமின்றி
அப்பாவை சுமக்கிறது சைக்கிள்.
-பிரியா பாஸ்கரன்
No comments:
Post a Comment