Saturday, June 24, 2023

வாழ்த்துகள் மாணவர்களே !

சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வடகரை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினோம்.


கடந்தவாரம் பள்ளியில் நடந்த நிகழ்வில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கப்பட்டது. அதுபோல, தமிழ் பாடத்தைச் சிறப்பாக ஆர்வத்தோடு படித்து முதலிடம் பெற்ற மாணவருக்கும் பரிசு அளித்து உற்சாகப்படுத்தினோம்.

பரிசு பெற்றவர்கள்  ஆதித்யா(முதல் இடம்),  ஆரூத்ரா(2-ஆம் இடம்),  பரணிதரன் (3-ஆம் இடம்).

தமிழில் முதல் இடம் - விசுவநாத்

இதைச் சாதித்துக் காட்டிய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகளோடு, பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !! 

#சிறகுகள்2023


Monday, June 19, 2023

நீ ஓட்டுவது BMW-காரா?

'ஃபேர்-அன்-லவ்லியின் (fair and lovely) பேரா

நீயும் நானும் வேறா

ஐந்துக்கு பின் ஆறா

நீ ஓட்டுவது பிம்-எம்-டபில்யூ (BMW) காரா ?'

என்பது போன்ற நாலு காமா சோமா பாட்டெழுதி கூட ஒருவர் இன்று  பிரபல பாடலாசிரியராகிவிட முடியும்.  ஆனால், இலக்கியத்தில் 30-ஆண்டுகளுக்கு மேலாக செறிவான நவீன கவிதைகளை  எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் தேவதேவன் போன்றவர்கள் புகழ்பெறுவது என்பது கானல் நீர்தான். அதுவும் வாசிப்பு அரிதாகி வரும் இந்தக் காலத்தில்.

அவரைப் போன்றவர்களுக்கு அரசியலும் சரியாக தெரிவதில்லை.பாவம்.

யார்  அந்த தேவதேவன்? அவருடைய கவிதை ஒன்று சொல்லமுடியுமா? என்பவர்களுக்கு அவருடைய 'ஒரு மரத்தடி நிழல் போதும்'  எனும் கவிதை கீழே...

ஒரு மரத்தடி நிழல் போதும்

உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்

வெட்டவெளியில் நீ நின்றால்

என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது


மேலும்

மரத்தடியில் நிற்கையில்தான்

நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை

அவள் தாயிடம் சேர்ப்பதுபோல

உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்

 

மரங்களின் தாய்மை

முலை முலையாய் கனிகள் கொடுக்கும்

கிளைகளின் காற்று

வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்

 

மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்

பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்

வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே


          ஒரு மரத்தடி நிழல் தேவை

உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்

போவேன்.

 

Monday, June 12, 2023

சினிமா... சினிமா... சினிமா...

ஒரு காலத்தில் படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி  பலர் பேச்சினுடே குறள், ஓளவை முதுமொழி ஏன்  குறைந்த பட்சம் ஒரு பழமொழியையாவது மேற்கோள் காட்டி பேசுவது என்பது மிகச் சாதாரணம். சிலர் ஏகலைவன்,  கட்டை விரல், கண்ணகி, கர்ணன் என்றெல்லாம் புராண கதைகளை டக்கென சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், இன்று அது போன்ற வழக்கங்கள் பெரும்பாலும் ஒழிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.  மாறாக, கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உரையாடல்கள்  என்பது கொஞ்சம் தட்டையாகி அந்த இடத்தை சினிமா பிடித்துவிட்டதாக நினைக்கிறேன். அதாவது, வயது வித்தியாசமின்றி பேச்சுவழக்கில் ஒரு சினிமா காட்சியையோ அல்லது வசனத்தையோ மேற்கோள் காட்டி பேசாதவர்களே இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, இளைய தலைமுறைக்கு சினிமாவைத் தொடாமல் எதையும் பேசவே முடிவதில்லை.  (தமிழ்புத்தகங்கள் !?- மூச்!) அந்த அளவுக்கு சினிமா வாழ்வில் புரையோடிக் கிடக்கிறது. இது முற்றிலும் உண்மை.


சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு. அது மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என்ற மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது. மாறாக, திரைப்படம் என்பது இன்று சமூகத்தின் நிகழ்காலத்தைப் பேசும் ஒன்றாக தமிழர் வாழ்வோடு இரண்டற கலந்த ஒன்றாகி இருக்கிறது. அது நல்லதா..கெட்டதா? எனும் முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

#சினிமா_சினிமா_சினிமா