Friday, August 18, 2023

இளையராஜாவின் காதலிகள்

இளையராஜாவின் காதலிகள்

தினமும் எழுதப்படும் பல நூறு கதைகளில் எது இலக்கியம்? என்ற விவாதம் இங்கு  பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், அந்த விவாதத்துக்குள் சிக்காமல் நேர்மையோடு வாசித்தால் எழுத்தில் எது இலக்கியம் ? என்பதை ஒரு தேர்ந்த வாசகன் உணர்ந்து கொள்வான். அப்படிச் சமீபத்தில்  உணர்ந்தது சிவக்குமார் முத்தையாவின்  "இளையராஜாவின் காதலிகள் (சிறுகதைத் தொகுப்பு)".

'நான் டெல்டாவைச் சேர்ந்தவன்' எனும்  முன்னுரையோடு வந்திருக்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகள் யாவரும் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. இதில் பல கதைகள் முன்பே இதழ்களில் வெளியாகி பரிசுகள் பெற்றிருந்தாலும் அவற்றை ஒரு தொகுப்பாக வாசிப்பது நல்லவாசிப்பனுவமாக இருக்கும். 

பொதுவாக சாமானியனின் பல்லாண்டு அனுபவத்தை ஒரு எழுத்தாளன் தனது கதையோட்டத்தில் ஒரு சில வரிகளில் எழுதிச் சென்றுவிடுவான்.

ஆனால்,  அதை வாசிக்கும் வாசகன் அங்கேயே நின்று ஒருவித அக தரிசனம் பெறுகிறான். அதுவே ஒரு படைப்பின் உயரத்தை தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.

அப்படிப் பல உச்சங்களைக் கொண்ட கதைகளை உள்ளடக்கியது இந்த நூல், 

உதா. நூலின் ஐந்தாவது கதையான செவத்த கன்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணை தனது வாழ்வில் கண்ட நாயகியின் மனம் இப்படி ஓடுகிறது… 

'இந்த உடல் இல்லை என்றால் என்னைப் பின்தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்…. ஒவ்வோரு முறையும் உடலை ஓப்புக்கொடுத்துதான் அவர்களின்(ஆண்களின்)  சுயத்தை கண்டறிய வேண்டுமா என்ன ? ' 

இப்படிச்  சுயத்தை இழந்த கிராமம் அங்கு பொய்த்த விவசாயம், அழிந்த கிராமிய கலைகள், அங்கு தனித்திருக்கும் பெண்களும் அவர்கள் மீதான சமூக கண்ணோட்டம் என அடித்தள மக்களின் வாழ்வு இவருடைய கதைகளில் பல அடுக்குகளாக நம் கண்முன் விரிகிறது.  அதிலும் குறிப்பாக, காவிரி கடைமடை வேளாண்குடி மக்களின் வாழ்வியலை  இப்படிச் சம காலகட்டத்தில் வேறுயாரும் இவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்வதாக எனக்குத் தெரியவில்லை. 

பொன்னியின் செல்வர்கள் என்றில்லை அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

நூல்-இளையராஜாவின் காதலிகள் (சிவகுமார் முத்தையா)

பதிப்பகம் -யாவரும்,  விலை-₹160.00 


2 comments:

  1. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நினைவுக்கு வருகிறார். வாசிக்கத் தூண்டுவதற்காகத் தலைப்பில் அவர் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறதோ?

    ReplyDelete
    Replies
    1. அது தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு. எது எப்படியோ வாசகர்கள் படித்தால் சரி.

      Delete