வனநாயகன் குறித்த முகநூல் வழியாக அறிமுகமான அமெரிக்கவாழ் அன்பர் தியா காண்டீபன் அவர்களுடைய கட்டுரை.
உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன் (மலேசிய நாட்கள்)’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள புளோரிடா மாநிலத்தில் வசிக்கிறார்.
“வனநாயகன் என்றால் என்ன?”
என்று இப்போது நீங்கள் உங்கள் தலைக்குள் கேட்பது எனக்குப் புரிகிறது. மலேசியாவில் அதிகமாக இருக்கும் ‘உராங் குட்டான்’ என்ற குரங்கினத்தைத்தான் ‘வனநாயகன்’ என்று சொல்வார்கள் என இந்தக் கேள்விக்கான பதிலை இந்த நாவலின் இரண்டாவது அத்தியாயத்திலேயே எழுத்தாளர் அவர்கள் சொல்லிவிடுகிறார்.
“சரி அதற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்மந்தம்?”
“திரும்பவும் கேள்வியா…?
“சொல்லுங்க பாஸ்…”
“ம்ஹூம்… என்கிட்டேயா? சொல்லமாட்டேனே… முதலில் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.”
எல்லாக் கதைகளின் தலைப்பும் கதைகளுடன் ஒத்துப்போக வேண்டுமென்றில்லை. ஆனாலும், இந்தக் கதையில் ஏதோ ஒரு மையப் புள்ளி எங்கோ ஒரு இடத்தில் கதையின் தலைப்புடன் ஒத்துப் போகிறது. “கண்ணாமூச்சி ரே ரே… கண்டுபிடி பார்ப்போம்…”
வெளிநாடுகளில் இந்திய மென்பொருள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைக்கான போட்டியில் போட்டுக் கொள்ளும் குடுமிப் பிடிச் சண்டைகள், உள்குத்துகள், குழிபறிப்புகள், நம்பிக்கைத் துரோகங்கள், ஊழல்கள் என்று மலேசிய மண்னைக் கதைக் களமாகக் கொண்டு சிறப்பான முறையில் அனுபவப் பதிவாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
அத்துடன் மலேசியாவைத் தெரியாத ஒருவருக்கு அங்கு நடக்கும் நாட்டு நடப்புகள், ஊழல்கள், அரசியல் தில்லு முல்லுகள் பற்றி அறிந்துகொள்ள இந்த நாவல் பெரிதும் உதவுகின்றது. மற்றும் மலேசியாவில் பார்க்க வேண்டிய இடங்கள், பார்க்கக் கூடாத விடயங்கள் என பல விடயங்களையும் இந்த நாவல் தொட்டுச் செல்கின்றது. அதனால் சில இடங்களில் நாவலின் கதை சொல்லும் பாணியில் இருந்து சற்று விலகி ஒருவகையான விவரித்தலை தந்துவிடுமோ என்று நீங்கள் பயப்படுவது தெரிகிறது. அவ்வாறில்லாமல் நடுவில கொஞ்சம் பக்கங்கள் நீண்டாலும், முடிந்தவரையில் கதையை பாதிக்காமல் எல்லாவற்றையும் அறுசுவை உணவுபோல தகுந்த அளவில் கலவையாக இந்த நாவல் தந்துள்ளது என்றே நான் சொல்வேன்.
என்னைச் சுற்றிப் பெண்கள் என்பதுபோல கதையின் நாயகனான சுதாவைச் சுற்றி சுஜா, பத்மா, சாரா, வீணா, லீசா, மற்றும் ஓவியா என்று பல பெண்களைளின் கதைகள் இடியப்பச் சிக்கல்களாகப் பின்னப்பட்டுள்ளன. இப்பெண்கள் அனைவரிலும் கடைசிவரை தொடரும் மர்மம் ஓவியா என்பேன்.
என்னதான் சுதா கதையின் நாயகனாக இருந்தாலும் அவனைச் சுற்றிப் பல சதிவலைகள் பின்னப்பட்டாலும் மனதுடன் ஒட்டிவிட்ட பாத்திரங்களாக ட்ரைவர் சிங், சாரா, மற்றும் பத்மாவைச் சொல்வேன். சம்பத் என்னதான் வில்லத்தனம் செய்தாலும் மனதுடன் ஒட்டாத பாத்திரமாகவே கடைசிவரை தொடர்கின்றான். ரவி மற்றும் ஜேகேயின் பாத்திரங்களும் தமக்குரிய பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
கதையின் தொடக்க அத்தியாயங்களில் பாத்திரங்கள் பேசுவதாகச் சில மலாய் சொற்கள் உட்பட ஆங்காங்கே நிறைய ஆங்கிலச் சொற்கள் வந்து கதைக்குள் குடி கொண்டாலும் பின்னைய அத்தியாயங்களில், “…தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” என்று தனக்குப் பிடித்தமான பெண்ணின் கைவிரல்களை சங்கத் தமிழில் வியப்பது அழகோ அழகு.
தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட சதிவலையை முறியடிக்கும் கதையின் நாயகன் சுதா, கதை முழுவதும் ஓடவும் முடியாமல் ஒழியவும் முடியாமல் திண்டாடும் இடங்களைப் பார்க்கும்போது இவ்வுலகில் யாரைத்தான் நம்புவதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும், “…ஓட முடியலையா நட, நடக்க முடியலையா தவழு… இப்படி ஏதோ ஒரு வகையில் முன்னேறிக் கொண்டிருக்கணும்” (“If you can’t fly then run, if you can’t run then walk, if you can’t walk then crawl, but whatever you do you have to keep moving forward.” ― Martin Luther King Jr.) என்று மாட்டின் லூதர் கிங் சொன்ன தாரகை மந்திரத்தை முன்னிறுத்திக் கதைக்கு அப்பப்போ புத்துயிரூட்டி தொய்வின்றிக் கொண்டு சென்று செவ்வனே முடித்த எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
-தியா காண்டீபன்-
இந்தக் கட்டுரை பனிப்பூக்கள் மின்இதழில் வெளியாகியிருக்கிறது. அதன் சுட்டி கீழே...
No comments:
Post a Comment