1980-களின் தொடக்கத்தில் இந்தியாவின் மிகப்பழமையான Parryware ( பேரிவேர்) நிறுவனம் பெரு நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர். அதை முருகப்பா நிறுவனம் ஏற்று நடத்த கோரிக்கை வைக்கிறார். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் அதை ஏற்றுக்கொண்டது முருகப்பா நிறுவனம்.
அதன் நிறுவனத் தலைவர் முதல் நாள் Parryware அலுவலகத்துக்கு தான் வழக்கமாக பயன்படுத்தும் பழைய காரில் போய் இறங்குகிறார். அங்கு போர்டிகோவில் முன்னாள் முதலாளி பயன்படுத்தியதாகச் சொல்லி ஒரு மெர்சிடிஸ் பென்ஸைக் காட்டுகிறார்கள். அது எனக்கு இனி தேவையில்லை என ஒதுக்கிவிட்டு தனது கைப்பையுடன் காரில் இருந்து இறங்கி நடக்கிறார். அப்போது அவருடைய கைப்பையை வாங்கிக் கொள்ள ஒரு வேலையாள் பவ்யமாக 'ஐயா..' கை நீட்டுகிறார். அவரோ 'என்னுடைய வேலையை நானே செய்வதுதான் சரி..' என அவரை ஒதுக்கிவிட்டு தனது கைப்பையுடன் நடந்து லாபிக்குள் நுழைகிறார்.
அங்கே வலது, இடது என இரண்டு லிஃப்டுகள் இருக்கின்றன. வலது புறம் உள்ள லிஃப்டோ காலியாக இருந்தது. இடது புற லிப்ஃடில் ஏறவோ தொழிலாளர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். புதிய தலைவர் 'என்ன காரணம் ?.' என வினவ அங்குள்ள அதிகாரிகள் 'இது உயர் அதிகாரிகளுக்கென பிரத்தியோகமானது...' என்கிறார்கள்.
சரி என்ற புதிய தலைவர், வலதுபுற லிஃப்டை ஒதுக்கிவிட்டு தொழிலாளர்கள் வரிசையில் போய் கடைசியில் இணைந்து நிற்கிறார். அதிகாரிகளோ பதறிக்கொண்டு ஓடிவந்து இன்னோன்றில் ஏறச் சொல்கிறார்கள். அவரோ 'தாராளமாக நான் வருகிறேன். ஆனால், மற்ற தொழிலாளர்களும் என்னோடு சேர்ந்து அதில் வருதாக இருந்தால்... 'எனச் சொல்ல அங்கிருந்த தொழிளார்கள் அடைந்த ஆனந்தத்தைத் சொல்லி தெரியவேண்டுமா என்ன!?
அன்று பிறந்தது பேரிவேர்(Parryware) நிறுவனத்துக்கு விடிவு. அதுவரை பெரு நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனம் பின் அடைந்ததெல்லாம் வெற்றிமுகம் என்பது வரலாறு. இன்று அதன் ஆண்டு வருமானம் 35,000 கோடி ரூபாய்கள். பேரிவேரின் தலையெழுத்தை மாற்றிய அந்தத் தலைவர் எம்.வி.சுப்பையா. அவர் 2012-இல் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அளித்து கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இது ஏதோ ஒரு திரைப்படத்தின் அறிமுகக் காட்சி போல தோன்றினாலும் ஒன்றுக்கும் உதவாத நடைமுறைகளை தூக்கி எறிந்துவிட்டு மாத்தி யோசிப்பவர்கள் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள். அப்படி மாத்தி யோசிக்க சமயங்களில் வெளியில் இருந்தும் இப்படியான ஆட்கள் வர வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment