Showing posts with label #கத்ரீனா. Show all posts
Showing posts with label #கத்ரீனா. Show all posts

Tuesday, December 1, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-4

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் பகுதி-1, பகுதி-2, பகுதி-3  முன்பு வாசிக்காதவர்களுவர்களுக்காக.

குறிப்பாக, இந்த கட்டுரையை வாசித்து தொடர்ந்து வாசித்து போனிலும், மின்னஞ்சலிலும் உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !!!.  யாராவது ஓருத்தர் சொன்னாலும் இப்படிதான், அதை கண்டுகாதிங்க  .. :)

அப்புறம்,  நாம் இதுவரை நியூ ஆர்லியன்ஸ் நகரைப் பற்றி பேசவே ஆரம்பிக்கவில்லை. இன்னைக்கு அதப் பத்தி பார்க்கலாம்.

நிறைய எழுத முடியாவிட்டாலும் நியூ ஆர்லியன்ஸ் பற்றி சில முக்கியக் குறிப்புகள் இங்கே. 

  1. நியூ ஆர்லியன்ஸ் நகரம் இருக்கும் லூசியானா மாகாணத்தின் பழையப் பெயர் புதிய பிரான்ஸ்.
  2. ஆம், முதலில் லூசியானா  பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு நெப்போலியனால் 1803 இல் லூசியானா அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது.
  3. ஆரம்ப காலங்களில் சர்க்கரை மற்றும் பருத்தி இதன் பிரதான பயிராக இருந்தது. அவ்வாறு பயிரடப்பட்டவை நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தின் வழியாக மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டது.
  4. அடிமைகள் வர்த்தகத்திலும் இந்த நகரம் மிக முக்கியஇடம் வகித்துள்ளது.
  5. இருபதாம் நூற்றாண்டிலும் ஓரு வர்த்தக நகராகவே நியூ ஆர்லியன்ஸ் தொடர்ந்தது.
  6. 1960களில் சிவில் உரிமைகள் இயக்கத்திலும் இந்த நகரம் முக்கிய பங்காற்றியுள்ளது
  7. நியூ ஆர்லியன்ஸ் தனது தனிப்பட்ட கட்டடக்கலை பாணியால் உலக புகழ் பெற்றது.
  8. jazz இசை பாரம்பரியம் இதன் தனித்தன்மை. அதுபோல கடல் உணவுகள் இங்கே ரொம்ப மவுசு
 ஆற்றின் கரைகளில் அல்லது படுகைகளில் தான் நாகரிகம் தோன்றியது என்பது நீங்கள் அறிந்ததே. அப்படி மிசுசிபி ஆற்றின் கரையில் தோன்றிய நகரம்தான் நியூ ஆர்லியன்ஸ்.
இது அமேரிக்காவில் உள்ள மிகப் பழமையான வரலாற்றுப் பிண்ணனி உள்ள நகரங்களில்  இதுவும் ஓன்று.   குறிப்பா சொல்லனும்னா மிசுசிபி மெக்ஸிக்கோ வளைகுடாவில் கலக்கும் இடத்தில் தான் நியூ ஆர்லியன்ஸ் நகர் இருக்கிறது.  ஆற்றின் போக்கை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.



மிசுசிபி என்பதற்கு "கிரேட் ரிவர்" என பூர்விக குடிகளின் மொழியில் பொருள்படும். நியூ ஆர்லியன்ஸில் எவ்வளவோ பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது. நேரமின்மையால்,  நான் ஓரு சில இடங்களை மட்டுமே பார்த்தேன்.  அதில் மிசுசிபிஆற்றுப் பயணம் நான் ரசித்த ஓன்று. அதைப் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.

தற்போது அமேரிக்காவில் நீராவியால் இயங்கி புழக்கத்தில் உள்ள ஓரு சில படகுகளில் இதுவும் ஓன்று. இதன் மொத்த பயண நேரம் 2 மணி நேரங்கள். 





பயணத்தின் போது, நியூ ஆர்லியன்ஸ நகர வரலாறு, ஆற்றின் ஓரத்தில் இருக்கும் தொழிற்ச் சாலைகள், மாளிகைகள், கட்டிடங்கள் அதன் புராதான சிறப்புகள் என்றபடி நீள்கிறது. அந்த 2 மணி நேரங்கள் போனது தெரியவில்லை.

மரங்கள் மற்ற பிற உற்பத்தி பொருட்களும் ஆற்றின் ஓரங்களில் இருந்து பார்ஜ் என்ற சிறிய படகுகள் மூழமாக கடற்கரைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்து செல்வது அழகாக இருக்கிறது.

அங்கு நின்று கொண்டிருந்த ஓரு அமேரிக்கப் போர் கப்பலைக்  'கிளுக்'கினேன்.




அது மட்டுமில்லாம, லைவ் JAZZ இசையும் படகில் இசைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அங்கேயே உணவும் கூட சாப்பிடலாம்.

ஓரு காலத்தில்  கொடி கட்டி பறந்த இந்த மாதிரியான நீராவி கப்பல்கள் மற்றும் படகுகள் இப்போது ஓரு காட்சிப் பொருள்தான் என்பதே நிதர்சம். பழையன கழிதலும்...

நீங்க பேய், பிசாசு, மோகினி மேல ஓரு ஆர்வம் இல்லை ஈடுபாடு (?) இருந்தா  அடுத்த பதிவை படிக்க தவற விட்டுடாதீங்க..    ஆனால், பேய் படம் பார்பதற்கு பயப்படுவரா இருந்தா?  எதுக்கும் pls wait.. :)

பயணங்கள் முடிவதில்லை...

படங்கள் நன்றி :
http://www.steamboatnatchez.com

Saturday, November 14, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-2

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் முதல் பகுதியில் நியூ ஆர்லியன்ஸை 2005ல் தாக்கிய கத்ரீனா சூறாவளி பற்றி கோடிட்டிருந்தேன். அதை வாசிக்கத் தவறியவர்கள்  இங்கே வாசிக்கலாம்.

முன்பே சொன்னது போல , அந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

அமேரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு. உலகில் சர்வ வல்லமையும் மாட்சிமையையும் பொருந்திய நாடு. உலகின் ஓரே போலீஸ்காரன். தொழில்நுட்பத்திலும், படை பலத்திலும் தாதா என்றேல்லாம் கொண்டாடப்படும் நாடு  என்ற வெளித் தோற்றத்தை தகர்க்தேறியச்
செய்தது இந்த கத்ரீனா சூறாவளி எனலாம்.




அப்படி என்னதான் நடந்தது? , இயற்கை சீற்றங்கள் என்பது இயல்புதானே என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அது என்னவோ உண்மைதான்.  இயற்கை இது ஏழை நாடு, பணக்கார நாடு என்று பார்ப்பதில்லை. 

ஆனால் அப்படி எதேனும் இயற்கை சீற்றங்கள் நிகழும் போது சம்பந்தப்பட்ட நாடு அல்லது சமூகம் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. நிகழ்வுக்கு பின் அவர்களின் மீட்பு நடவடிக்கைகளின் வேகம் மற்றும் மக்களை காப்பாற்று திறன் போன்றவை அதி முக்கியம். ஆனால்,  துரதிஷ்ட வசமாக அமேரிக்க தேசம் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் கத்ரீனா விஷயத்தில் மிக மோசமான விமர்சனத்துக்கு உள்ளானது.

கத்ரீனா சூறாவளி சம்பந்தமாக அமேரிக்க அரசாங்கம் உலக அரங்கில் அவ்வாறு விமர்சிக்கப்பட்ட முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

Mismanagement எனப்படும் தவறான நிர்வாகம்-  1) சூறாவளிக்கு மக்களையும் நகரங்களையும் சரிவர தயார்படுத்தாதது. 2) சூறாவளிக்கு பின் நிவாரணப் பணிகளில் சுணக்கம் காட்டியது.

ஒரு பருவ மழைக்கே தாங்காமல்  நீரில் மூழ்கும் தமிழக நகரங்களை இங்கே ஓப்பிடாதீர்கள்.
கத்ரீனா சூறாவளி அதையும் தாண்டி, அது செய்த கோரதாண்டவத்தை பார்க்கலாமா.

பல மாநிலங்களைத் தாக்கிய இந்த சூறாவளி வகை ஐந்தைச் (category-5) சார்ந்தது, அதாவது மழை மற்றும் காற்றின் வேகம் 251 km/h. கத்ரீனா போகும் வழியேங்கும் வீடுகள், தொழிற்சாலைகள்,கட்டிடங்கள் என அனைத்தையும் பெயர்த்து எறிந்து எங்கும் வெள்ளக்காடக்கியது. குறைந்தது 1,245 பேர், சூறாவளி மற்றும் அடுத்தடுத்த வந்த வெள்ளத்தால் இறந்தனர்.

அட்லாண்டிக் கடலில் உருவான கத்ரீனவின் பாதையை இங்கே பாருங்கள்.




உதாரணத்திற்கு அடித்த காற்றில் பல வீட்டின் கூரைகள் ஆயிரம் அடிகள் கூட பறந்ததாம், உயரமான கட்டிடங்களின் மாடியில் இருந்த படுக்கைகள் மற்றும் மரச்சாமான்கள் ஐன்னல் வழியாக தூக்கிவீசப்பட்டதாம்.

முக்கியமாக நியூ ஆர்லியன்ஸ் நகரின் எண்பது சதவீதம் (80%) வெள்ளம் புகுந்தது மூழ்கியது.   நகரின் சில முக்கியப் பகுதிகளில் 20 அடி நீரில் மூழ்கியது. இதில் ஏறத்தால 1 லட்சம் பேர் நகரின் வெள்ளத்தில் சிக்கினர்.

எல்லாவற்றிக்கும் மேலாக நகரின் வெள்ளத் தடுப்பு அணைகள் உடைந்து நகரை மேலும் சின்னாபின்னமாக்கியது.  இப்படி அடி மேல் அடி வாங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நியூ ஆர்லியன்ஸ் மக்களின் கதிதான் என்ன?

பலர் தங்கள் வீட்டுக்கு கூரைகளில் ஏறி நின்றுக் கொண்டு உயிர் தப்பினர். அப்படி உயிர் தப்பியவர்கள் தொலைத் தொடர்பு, மின்சாரம், குடிநீர், உணவு என எந்த உதவியும் இன்றி பல நாட்கள் தவித்தனர். இறந்த உடல்கள் நீரில் மிதந்தன. இதை எல்லாம் ஏற்று செயல்படக்கூடிய FEMA எனும் மத்திய அவசரகால நிர்வாக அமைப்பு இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செயய இயலாமல் திணறியது.


 FEMAதான் திணறியதே தவிர அமெரிக்காவில் இருக்கக் கூடிய தனியார் தொலைக்காட்சிகள் ஹெலிகாப்டர் மூழம் இந்த அவலக்காட்சிகளை படம் பிடித்து வெட்ட வெளிச்சமாக்கியது.




அன்றய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். அப்போதைய அமெரிக்க அரசாங்கத்துக்கு இது மிகப் பெரிய நெருக்கடி, அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டிருந்தாலும் ஏதாவது செய்து நிலைமையை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர நியூ ஆர்லியன்ஸில் வெள்ளத்தில் சிக்கிய பலர் சிறுபான்மை கறுப்பர்கள், ஜனாதிபதி ஓரு வெள்ளையர். கேட்க வேணுமா?



நிலைமையை கட்டுபடுத்த யாரை  நியூ ஆர்லியன்ஸ் அனுப்பினார் தெரியுமா ? அந்த ஓரு முடிவே அவரையும் மக்களையும் இக்கட்டில் இருந்து காப்பாற்றியது என்று தெரியுமா?

அவரைப் பற்றியும்,  நான்  அவரை நியூ ஆர்லியன்ஸில் சந்தித்து, உரையாடி புகைப்படம் எடுத்த நிகழ்வு பற்றியும் விரைவில் பேசலாம்.

பயணங்கள் முடிவதில்லை...

நன்றி:  GOOGLE Images

Saturday, October 31, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-1

       கடந்த வாரம் அலுவலக சம்பந்தமாக லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்க்கு சென்று திரும்பினேன். லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  இவர்தான் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க கவர்னர் என்பது  கூடுதல் தகவல்.


என் பயணத்தை பற்றி விரிவாக எழுதும் முன்பாக.  உங்களில் எத்தனைப் பேருக்கு 'கத்ரீனா சூறாவளி' பற்றி தெரிந்திருக்கும் என்றுத் தெரியவில்லை.

கத்ரீனா  கடந்த 2005ம் ஆண்டு  நியூ ஆர்லியன்ஸை நகரைத் தாக்கிய மிகப் பெரிய சூறாவளி.  இதுவே அமெரிக்காவைத்தாக்கிய மிகப் பெரிய  மற்றும் மூன்றாவது வலுவான புயல்.

அப்போது நகரில் புகுந்த நீரலைகள் உயர் 20 அடி (ஆறு மீட்டர்) இருந்ததாம். இதில்  உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 பேர்.  இந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விமானத்தின் மேலிருந்து- வரிசையாய் தீப்பெட்டி போன்ற வீடுகள், நகரும் எறும்பு போன்ற கார்கள். இரவில் நட்சத்திரங்களை வாரி இறைத்தது போன்ற நகரம் என ரசிக்கும்படியே இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சில விஷயங்களில் இதுவும் ஓன்று. இதைப்பற்றிக் கூட யாரேனும் ஓரு கட்டுரை எழுதலாம்.

அப்புறம் அமெரிக்க விமானங்களின் உள்நாட்டு சேவையில் உணவு வழங்குவதை நிறுத்தி வருடங்கள் பலவாயிற்று.  சிற்றுண்டி என்ற  பெயரில் கோக் மற்றும் சிறிய வேர்கடலை பாக்கேட் போன்ற எதாவது ஓன்றை தருவார்கள். இந்த முறை அலர்ஜி என காரணம் சொல்லி அதையும் நிறுத்திவிட்டார்கள். அலர்ஜி பயணிகளுக்கா அல்லது அவர்களுக்கா என நான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  இந்தியாவில் இன்னமும் விமானத்தில் பொங்கல் வடை தருகிறார்களா? தெரியவில்லை. அப்படியேனில் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான். :)

விமானத்தில் கவனித்த இன்னோரு விஷயம் விமானப்பணிப் பெண்கள். வழக்கம் போலவே அழகாக இருந்தனர், முக்கியம் அதுவல்ல. அழகாய் லிப்ஸ்டிக் உதடு விரிய சிரிப்பது, ஹைஹீல்ஸில் கேட்வாக் நடப்பதைத்தாண்டி அவர்கள் துரிதமாகவும்,லாவகமாகவும் உணவு
வழங்குவது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

வழக்கம் போலவே விமானத்தில் பெரும்பான்மையானவர்கள் புத்தகங்களில் தங்கள் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர்  என்று எழுதினால் அது சம்பர்தாயமாகவே இருக்கும்.  ஏனேனில் புத்தகம் படிப்பவர்கள் எல்லோரும் குறைந்தது ஐம்பது வயதிற்கு மேலுல்லவர்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக்கு கண்களையோ இல்லை காதுகளையோ
கொடுத்திருந்தனர்.  இருபது வருடங்களுக்கு பின் புத்தகம் அச்சடிப்பது பற்றி கவலைப்படத் தேவையிருக்காது போல.

இந்தக் கட்டுரையில் எங்கேனும் நீங்கள் தேடிப்பார்த்து அதில் கொஞ்சம் சுஜாதாவின் சாயல் இருந்தால் அதற்கு காரணம் நான் விமானத்தில் படித்த 'கற்றதும் பெற்றதும்' தான். இதற்கும் மேலே எழுதியதற்கும் தொடர்புபடுத்தி என் வயதை நீங்கள் தவறாக கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. புத்தக உபயம் 'தமிழ்'-நன்றி.

பயணங்கள் முடிவதில்லை...