Sunday, June 19, 2016

கும்பாபிஷேகமும் கண்ணீரும்

கடந்தவாரம் பதிமூன்றாம் தேதி சிறகுகள் அறக்கட்டளையின் சார்பில் 
2016-பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்று முதல்மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினோம். 

இந்த முறை திருவாரூருக்கு அருகில் உள்ள மாங்குடி அரசினர் உயர்நிலைப் பள்ளியை தேர்வு செய்திருந்தோம். கல்வி உதவித் தொகையை வழங்கும் அதே நேரத்தில் அந்த உதவி உரிய பயனாளிகளுக்குதான் சென்று சேருகிறது என்பதை கருத்தில் கொண்டே மாங்குடி பள்ளியை தேர்வு செய்தோம்.  

இதை ஏன் சொல்கிறேன் என்றால் -  எல்லா அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நிதிஉதவியும் ஊக்கமும் கிடைத்துவிடுவதில்லை. அதே சமயத்தில் ஓரு அரசுப்பள்ளி வசதியான சூழலில் அமைந்துவிட்டால் ஓரளவேனும் அப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் யார் மூழமாகவோ கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் மாங்குடி பள்ளி மிகச் சரியான தேர்வு. 

பரிசு பெற்றவர்கள், மதிப்பெண்ணுடன் கீழே.

சுந்தரேசன்  - முதல் மதிப்பெண்** 475
ராஜகுமாரன்  - இரண்டாவது மதிப்பெண்** 466 
சர்மிளா தேவி - மூன்றாவது மதிப்பெண்** 463

முதல் பரிசாக ரூபாய் ஐயாயிரம், இரண்டாம் பரிசாக ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டன.

சிறப்பு பரிசாக வழங்கப்படும்  'தமிழ்ப்பாடத்தில் முதல்  மதிப்பெண் ' பரிசைப் பெற்றதும் சுந்தரேசன்தான். அவருக்கு ரூபாய் மூவாயிரம் கூடுதல்பரிசாக வழங்கப்பட்டது. பரிசு பெற்ற அனைவருக்கும் சிறகுகள் சார்பில் பாராட்டு சான்றிதழும்  வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் அறக்கட்டளை சார்பில் அப்பாவும் (R.சிவசுப்பிரமணியன்), அப்பாவின் நண்பரான திரு. V.G. கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும்  சிறகுகள் அறக்கட்டளை சார்பில் மனமார வாழ்த்துவோம்.

இந்தச் சிறிய கல்வி உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதேனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நான் நம்புகிறேன்.

முக்கியமாக சமீபத்தில் தன் தந்தையை இழந்த சுந்தரேசனுக்கு இந்த தொகை கண்டிப்பாக பெரிய உதவியாக இருக்கும்.  சுந்தரேசனுடன் பரிசுபெற மேடைக்கு அழைத்தபோது கணவனை இழந்த  அந்த தாய் அழுதபடி மறுத்து விட்டாராம். அப்போது அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் சுந்தரேசன் போன்ற பொறுப்பான, துடிப்பான மாணவர்கள் படித்து கண்டிப்பாக சாதிப்பார்கள். தங்கள் அம்மாக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பெருகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது. 

இந்த மாணவர்கள் பந்தயக் குதிரைகள் போல. அவர்கள் போட்டியில் ஓடி ஜெயிக்கத் தயாராயிருக்கிறார்கள்.  அறிவார்நத சமூகமாக  நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்களுக்கான சரியான இலக்கையும் அதை வென்றுமுடிக்க வேண்டியதைச் செய்வதுமே. 

அப்புறம்,  விழாவில் கலந்து கொண்ட எண்பது வயதுப்  பெரியவர் தனது சொந்த நான்கு மா  நிலத்தை இந்த அரசு பள்ளிக்கு  தானமாக தந்தவராம்.  இதற்கும் அவர் ஓன்றும் பெரிய உத்யோகத்தில் இருந்தவரில்லை. சாதாரண அரசு ஆசிரியராக இருந்து தனது குடும்பத்தை கரையேற்றியவர்தான். அந்தகாலத்தில்  ஓரு ஆசிரியராக அவர் பெரிதாக என்ன சம்பாதித்திருக்கப் போகிறார் சொல்லுங்கள். இவரைப் போன்ற சாதாரண மனிதர்கள் இன்னமும் வாழ்வதால்தான் ஊரில் மழை பெய்கிறது என நினைத்துக் கொண்டேன். 

நிகழ்வின் முடிவில் அந்த பெரியவர் ' கோயில்  கும்பாபிஷேகம் போல நிகழ்ச்சி சிறப்பா பண்ணிட்டீங்க ' என்றாராம். ஆனால் கும்பாபிஷேகத்தை விட அந்த தாயின் கண்ணீரே மனதில் நின்றது. 

நாம் கோயில் கும்பாபிஷேகத்தை பற்றி பெரிதாக பேசவேண்டியதில்லை. ஏனேன்றால் அந்த பாரதி கண்ட கனவே பள்ளித் தலம் அனைத்தும் கோவில்கள் செய்வது தானே.

தொடர்ந்த ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் நண்பர்களுக்கு நன்றி!!

No comments:

Post a Comment