முதல் பகுதியை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக.
***

"நிழல் நிஜமாகிறது" படத்தில் வரும் அருமையான பாடல் "கம்பன் ஏமாந்தான்". நடிகர் கமல் உதட்டசைக்க பாடகர் பாலு ரசித்து "பாவமாக" பாடியிருப்பார். "ஏமாந்தான்" எனும் அந்த வார்த்தையைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா? "ஏமாற்றுதல்" நாம் அறிந்தது -வஞ்சித்தல் அல்லது நம்பிக்கையை கெடுத்தல். "ஏமாற்றப்படுதல்" என்பதற்கு ? -"ஏமாற்றப்பட்டான்", "ஏமாறினான்" என எழுதலாம். "ஏமாந்தான்" பிழையான சொல். வேண்டுமானால் அதை பேச்சு வழக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் "ஏமாந்தான்" சரியான சொல் அல்ல. அதனால் இனிமேல் ஏமாறவேண்டாம். ;)

மறைந்த இயக்குநர் பாலுமகேந்ராவின்
இயக்கத்தில் வந்த திரைப்படம் "ராமன் அப்துல்லா".
"உன் மதமா ? என் மதமா ? " எனும் நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றிருந்த படம்.
அது மட்டுமில்லாமல் படம் வந்த புதிதில் அந்தத் தலைப்பிற்காகவே பெரிதும் பேசப்பட்டது. அந்தத் தலைப்பை "இராமன் அப்துல்லா" என எழுதுவது சரியாக இருக்கும். ஏனென்றால், தமிழில் "ல,ள,ர,ற" போன்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது. அப்படி என்றால் ராமனையும்,ராகவியை யும் எப்படி எழுதுவதாம் ?. அவற்றை அ,இ,உ சேர்ந்து எழுதவேண்டும். (இ)ராமன், (அ)ரங்கன், (இ)லங்கை என்பது சரி.
அது சரி, நீங்கள் பாலுமகேந்ராவுக்கு ரசிகரா ? இரசிகரா ? ;)
***

"என் ராசாவின் மனசிலே " ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றித்திரைப்படம். நகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமான படமும் கூட. அருமையான பாடல்கள்.
அது இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டம். அவரை முன்னிறுத்தியே படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதாக கூட அப்போது பரவலாகப் பேசப்பட்டது.
"என் ராசாவின்.. " எனும் அந்தத் தலைப்பை ஒட்டி ஒரு சிறிய தகவல். எனது சட்டை, எனது ஜன்னல் என உடைமைப்பொருட்களை "எனது" எனலாம்.
ஆனால், உறவுப் பெயர்களை என் மகள், என் மகன், என் நண்பன் என்றே குறிப்பிடவேண்டும். அந்தக் காலகட்டத்தில் வெளியான பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" நினைவுக்கு வருகிறதா ?

***
அருமை
ReplyDelete