Monday, May 1, 2017

முகநூலில் அடிக்கடிக் கண்ணில்படும் பிழை

நண்பர்களே,

முகநூலில் அடிக்கடி கண்ணில்படும் ஒரு பிழையைப் பற்றி
தெரிந்துக்கொள்ளுங்கள். முகநூலில் எழுதுபவர்கள் இந்த ஒரு பிழைதானா செய்கிறார்கள் ? என என்னிடம் சண்டைபிடிக்காமல், கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள்.

பொதுவாக  "பொருத்து, பொறுத்து""பொருப்பு, பொறுப்பு""பொறுமை", ",பொறுத்தல்", போன்ற சொற்களை சரியாக பயன்படுத்துவதில் பலருக்குக் குழப்பமிருக்கிறது.

முதலில் பொருத்து, பொறுத்து இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்துவிடுவோம். " பொருத்து"  எனும் சொல், ஒன்று சேர். இணைப்பு செய் என்ற பொருள் தரும். "சரியான விடையைப் பொருத்துஎன சின்னவயதில் படித்தது ஞாபகம் வருகிறதா ?  அதாவது கட்டளைச் சொல்.

" என்னைப் பொறுத்தவரை   " என எழுதினால் ? -நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு எனப் பொருள்கொள்ள வேண்டும். "என்னைப் பொருத்தவரை என எழுதினால் ?" அது தவறு. என்னைப் பொருத்த (ஒன்று சேர்க்க) என வந்து பொருளின்றி போகும்.

அடுத்து பொருப்பு, பொறுப்பு எனும் சொற்களைப் பார்த்துவிடுவோம். " பொருப்பு"  எனும் சொல்லுக்கு மலை அல்லது பக்கமலை எனும் பொருள் இருக்கிறதாம். " பொறுப்பு"  - அது நாம் எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஒன்று. அதாவது கட்டாயக் கடமை. " பொறுப்பில்லாம சுத்தாத  தம்பி !" " பொறுப்பாசிரியர் "  இதெல்லாம் நாம் கேட்டிருக்கிறோம் தானே. இல்லையென்றால்  'மனோகரா' படத்தில் வரும் புகழ்பெற்ற வசனமான  'பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா' வை நினைத்துக் கொள்ளுங்கள்.

" பொறுத்தல்"  ? - பிழையை மன்னித்தல் இல்லை தாங்கிக் கொள்வது,

" அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  
இகழ்வார்ப் பொறுத்தல் தலை "  - குறள் நினைவுக்கு வருகிறதா ?

அப்போ , " பொறுமை"  ? - இதுவரை இதைப் படித்த உங்களுக்கு இருந்தது.

#கவிக்கோ_இலக்கணம்

5 comments:

  1. நினைவில் வைத்துக்கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நல்லது.வருகைக்கு நன்றி!!

      Delete
  2. கொஞ்சம் பொறுத்துதான் பார்க்க வேண்டுமோ,,,?

    ReplyDelete
    Replies
    1. பிழைகளைப் பொறுத்துக் கொள்ளகூடாது. திருத்தவேண்டும். :) நன்றி!!

      Delete