Wednesday, June 21, 2017

வனநாயகன் - வரவேற்பு

வனநாயகன் (மலேசிய நாட்கள்) புதினத்தை இந்த  ஜனவரி சென்னை புத்தக கண்காட்சிக்குதான் கொண்டுவந்தோம். புத்தகம் வெளியான கடந்த 5 மாதங்களுக்குள் இதுவரை சுமார் 15 விமர்சனக் கடிதங்களை வாசகர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.  சராசரியாக பத்து நாட்களுக்கு ஒருவர் என்ற வகையில் வாசித்து, எழுதி தொடர்ந்து உற்சாகமளித்திருக்கிறார்கள்.

இதன் உச்சமாக, 30 வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கடந்தவாரம் உள்பெட்டியில் தொடர்புக்கொண்டு சிலாகித்து பேசியது அபூர்வம்.  அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றிகள்.

உண்மையைச் சொல்வதென்றால் வனநாயகனுக்கு வருவது போன்ற விமர்சனங்களும்,பதிவுகளும்,  மின்னஞ்சல்களும் வேறு எந்தப் புத்தகத்திற்காகவும் எனக்கு வந்ததில்லை.

கடந்த டிசம்பரில் வனநாயகனின் இறுதி எடிட்டிங்கை நாங்கள்
செய்து முடிந்தபோது 300 பக்கங்களைத்  தொட்டிருந்தது. இரண்டாவது நாவலை எழுதும் என்னைப் போன்ற இளம் எழுத்தாளனுக்கு அது கொஞ்சம் 'கனம்' தான் என்றாலும் கதைக்குத் தேவைப்பட்டதால் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் தைரியமாக அப்படியே பதிப்பித்தோம்.

அதுமட்டுமல்லாமல், சிரமம் இல்லாத நடையில் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை தரும்போது 300 பக்கங்கள் என்பது வாசகர்களுக்கு பெரிய சுமையாக இருக்கப்போவதில்லை என நினைத்தது நடந்திருக்கிறது. நம்மை நம்பி முதலீடு செய்த பதிப்பாளர் தப்பித்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த நேரத்தில் வனநாயனுக்கு உறுதுணையாக இருந்த
எல்லா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக சிறப்பான அட்டைப்பட வடிவமைப்பு செய்தவர் மற்றும் செம்மையான எடிட்டிங் செய்த எடிட்டர் குழுவுக்கும், நூலை வெளியிட்ட கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இறுதியாக ஒரு விசயம். வனநாயகனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஒரு அன்பர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதுகுறித்தான விவரங்களை மற்றோரு சமயத்தில் விரிவாக பதிவிடுகிறேன். நன்றி!!

"வனநாயகன்-மலேசிய நாட்கள்" - வாங்க

Saturday, June 17, 2017

பாடகர் மலேசியா வாசுதேவன்

சின்ன வயதில் "மலேசியா"  எனக்கு எப்போது அறிமுகமானது என மிகச் சரியாக நினைவில்லை. ஆனால், அந்த அறிமுகம் பாடகர் மலேசியா வாசுதேவன் வழியாக நடந்திருக்க  வாய்ப்பிருக்கிறது.

அது ரேடியோவில் பாடகர் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களுக்கான அறிமுகமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.   அதனால்தானோ என்னவோ  அவரின் குரல் மூலமாக நான்
அந்த வயதில்  வேறோரு மலேசியாவை மனத்துக்குள் கற்பனை செய்து வைத்திருந்தேன். சரியாக சொல்வதென்றால் கொஞ்சம் கிராமப்புற சூழலைக் கற்பனைச் செய்திருந்தேன்.

இப்படிதான் தொழில்நுட்பங்கள் பரவலாகாத  அந்தக் காலத்திலெல்லாம்   ஒரு நாட்டின் பெயரை முதலில் கேட்டவுடன்
நமக்குத் தெரிந்த வகையில் அந்த நாட்டைப் பற்றியும், அந்த நாட்டு மக்கள் பற்றியும்  ஏதோ ஒரு கற்பனையான பிம்பத்தை மனதுக்குள் உருவாக்கிக் கொண்டிருந்தோம்.

உண்மையில் மலேசியா வாசுதேவனின் குடும்பமே ரப்பர் தோட்டவேலைக்காக இங்கிருந்து புலம் பெயர்ந்து மலேசியா சென்றவர்கள் தானாம் (பூர்வீகம் கேரளா).

திரை ஆர்வத்தில் மலேசியாவில் இருந்து நடிக்க சென்னை வந்தவர், அப்படியே தங்கி பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தார். குறிப்பாக இளையராஜாவின் இசையில் பல ஆயிரம் பாடல்கள் பாடி நம் மனத்தைக் கவர்ந்தார். ஒரு கட்டத்தில்
ரஜினிக்காக இவர் பாடிய எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.

கேட்டவுடன் உடனே பிடித்துவிடும் ஒருவித காந்தக் குரல் இவருடைய சிறப்பம்சம் என நினைக்கிறேன்.  உச்சஸ்தாயியில் பாடுவதில் வல்லவரான இவருடைய தமிழ் உச்சரிப்பும் அட்சர சுத்தமாக இருக்கும். ஆனாலும், இவர் பாடிய எத்தனையோ நல்ல பாடல்களைக் காட்டிலும் இவருடைய துள்ளலிசைப் பாடல்கள் மட்டும் பெரிதாகப் பேசப்பட்டன. அதனாலோ என்னவோ
இவர் சிலாகித்து கொண்டாடப்படாத திரை ஆளுமையானது சோகம்.

உணர்ச்சி ததும்பும்  இவருடைய குரலில் எனக்கு பல பாடல்கள் பிடித்திருந்தாலும் புதிய வார்ப்புகள் படத்தில்  வரும்  ' வான் மேகங்களே ' பாடல் என்றும் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்.

மலேசியா வாசுதேவன் பிறந்தநாள்- ஜூன் 15.

Thursday, June 15, 2017

நினைவில் நிற்காதவை (Everything I don't Remember) - நாவல்

திரையில் கதை சொல்ல பல யுத்திகள் இருக்கின்றன. மேலோட்டமாக சொல்வதென்றால், நேர்கோட்டில்  பயணித்தல்  (பெரும்பாலான தமிழ்ப்படங்கள்),  ஃப்ளாஷ்பேக் முறையில் காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்துதல் (டைடானிக்) ,பல கிளைக்கதைகளாக பிரிந்து கடைசியில் ஒன்றுசேர கதை சொல்லுதல் (ஆய்த எழுத்து),   ஒரே நிகழ்வை இரு வேறு கோணங்களில் பார்க்கும் ரஷோமோன் வகை (விருமாண்டி)  எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாவலிலும் (புதினத்திலும்) இதுபோல் கதைசொல்ல  பல சாத்தியங்கள் இருக்கின்றன.  சமீபத்தில் வாசித்த  சுவீடன் நாவலாசிரியர் ஜோன்ஸ் ஹேசன் கேமிரி (Jonas Hassen Khemiri) யின் "எவ்ரிதிங் ஐ டோன்ட் ரிமம்பர்" ( Everything I don't Remember) நாவலை பாயிண்ட் ஆஃப் வியூ (POV) உத்தியில் நகர்த்தியிருக்கிறார்.

கதையின் சாரம் இதுதான்.  கதையின் தொடக்கத்தில் ஒருவன் மர்மான முறையில் மரணமடைகிறான்.  அந்த மரணத்துக்கு பின் அவனுடன் நெருங்கிப்பழகிய காதலி, அவனுடைய நெருக்கமான நண்பர்கள் ஒரிருவர் அவனைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதுபோல் கதை நகர்த்தியிருக்கிறார்.

கதை,  அவர்களின் கண்ணோட்டத்தில்  நகர்ந்தாலும், மற்றவர்களின் அனுபவங்கள் வாயிலாக இறந்தவனைப் பற்றிய
ஒரு பிம்பம் மெள்ள  வாசிப்பவர்களுக்கு துலக்கம் பெறுகிறது.

கதையில் எல்லோருடைய கண்ணோட்டமும் முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்களுடைய மனநிலை  விவரிக்கப்பட்டு
கதையின் இறுதியில் மரணத்துக்கான மர்மமுடிச்சு
அவிழ்க்கப்படுகிறது.

எழுத்தாளர் ஜோன்ஸ் சுவீடனின் முக்கிய எழுத்தாளராக இருந்தாலும் நாவலின் மூலம் ஆங்கிலம் இல்லையென்பதாலோ என்னவோ, கதையும் கதைமாந்தர்களோ மனத்துக்கு நெருக்கமாக தோன்றவில்லை. வேண்டுமானால்  கதையின் யுத்தியை அறிந்துகொள்ள  வாசிக்கலாம். மற்றபடி பிரமாதமில்லை.

#Everything_Idon't_Remember

Friday, June 9, 2017

எத்தியோப்பிய உணவு

கிழக்கும் மேற்குமாக பல நாடுகளில் சுற்றித் திரிந்திருக்கிறேன். பாம்பு கறி சாப்பிடுபவர்களிடம் கூட பயப்படாமல் பழகி இருக்கிறேன் (!).

ஆனால்,  என்னை ஆச்சர்யப்பட வைத்த உணவு என்றால்
யோசிக்காமல் பளிச்சென எத்தியோப்பிய உணவு எனச் சொல்லிவிடுவேன். மிக எளிமையானது.

கண்டிப்பாக நீங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு எளிமை.  மதிய விருந்து என்றால் கூட  "இஞ்சிரா" எனும் தோசை (injera) அதற்கு தொடுகறியாக நான்கைந்து கூட்டு போன்ற ஐட்டங்கள்தான் அதற்குமேல் பெரிதாக ஒன்றுமில்லை. அந்த இஞ்சிரா தோசை
இஞ்சியில் செய்தது அல்ல, நம்மூர் கோதுமை தோசை போலிருக்கும்.

ஆனால், சுவை அபாரம்.  எத்தியோப்பிய மசாலா இந்திய மசாலா போல் இல்லாமல் சுறுசுறுவென  வித்தியாசமாயிருக்கும். ஒருமுறை சாப்பிட்டால் கண்டிப்பாக சுவை நாக்கில் ஒட்டிக்கொள்ளும்.

நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்து போனாலும் எல்லோருக்கும்
சேர்த்து ஒரே தட்டில் சாப்பாட்டை வைத்துவிடுவார்கள். அதை நம்மூர் போல வெறும் கைகளால் கூச்சமின்றி சாப்பிடலாம். முயன்று பாருங்கள். கடைசியாக,   அவர்கள் பால் இல்லாமல் தரும் சூடான டீயையும்  குடியுங்கள். தேவாமிர்தம் எனச் சொன்னாலும் சொல்வீர்கள்.

பல வருட தேடுதலுக்குபின் மறுபடியும் இப்போதுதான் ஒரு எத்தியோப்பிய ரெஸ்டாரண்டை  ஃபிளாரிடாவில் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். இனி, அடிக்கடி எட்டிப்பார்க்கலாம் என நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

Sunday, June 4, 2017

கவிக்கோ அப்துல் ரகுமான்


வானம்பாடி கவிஞர்களின் பிதாமகனாய் விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு வருத்தமளிக்கிறது.

ஹைகூ, சர்ரியஸிஸக் கவிதைகள் என புதுக்கவிதைக்கு புதிய பரிமாணம் தந்த கவிஞர்களின் கவிஞர் அவர்.
அவருடைய நேயர்விருப்பம், சுட்டுவிரல், பால்வீதி தொகுப்புகள் எனது மனத்துக்கு நெருக்கமானவை. இன்றைய அரசியல்வாதிகளையும் நெருப்பாய் சுடும் "சுட்டுவிரல்" தொகுப்பிலிருந்து உங்களுக்கு சில துளிகள்.

//
(பாருக்குள்ளே நல்ல நாடு)

'வறுமைக் கோட்டை அழிப்போம்' என்று
பேசினேன். அரசாங்கத் சொத்தை
அழிக்கத் தூண்டியதாக அடைத்துப் போட்டுவிட்டார்கள்.
'ஊழல் பேர்வழிகளை நாடு கடத்தவேண்டும்'
என்று எழுதினேன். 'கடத்தல்காரன்' என்று
கைது செய்துவிட்டார்கள்..
(தீக்குச்சிகள்)
..
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டுவிட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?
..
//
(பால்வீதி)
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு
குருட்டு தமயந்தி.
//

அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.