Saturday, June 17, 2017

பாடகர் மலேசியா வாசுதேவன்

சின்ன வயதில் "மலேசியா"  எனக்கு எப்போது அறிமுகமானது என மிகச் சரியாக நினைவில்லை. ஆனால், அந்த அறிமுகம் பாடகர் மலேசியா வாசுதேவன் வழியாக நடந்திருக்க  வாய்ப்பிருக்கிறது.

அது ரேடியோவில் பாடகர் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களுக்கான அறிமுகமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.   அதனால்தானோ என்னவோ  அவரின் குரல் மூலமாக நான்
அந்த வயதில்  வேறோரு மலேசியாவை மனத்துக்குள் கற்பனை செய்து வைத்திருந்தேன். சரியாக சொல்வதென்றால் கொஞ்சம் கிராமப்புற சூழலைக் கற்பனைச் செய்திருந்தேன்.

இப்படிதான் தொழில்நுட்பங்கள் பரவலாகாத  அந்தக் காலத்திலெல்லாம்   ஒரு நாட்டின் பெயரை முதலில் கேட்டவுடன்
நமக்குத் தெரிந்த வகையில் அந்த நாட்டைப் பற்றியும், அந்த நாட்டு மக்கள் பற்றியும்  ஏதோ ஒரு கற்பனையான பிம்பத்தை மனதுக்குள் உருவாக்கிக் கொண்டிருந்தோம்.

உண்மையில் மலேசியா வாசுதேவனின் குடும்பமே ரப்பர் தோட்டவேலைக்காக இங்கிருந்து புலம் பெயர்ந்து மலேசியா சென்றவர்கள் தானாம் (பூர்வீகம் கேரளா).

திரை ஆர்வத்தில் மலேசியாவில் இருந்து நடிக்க சென்னை வந்தவர், அப்படியே தங்கி பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தார். குறிப்பாக இளையராஜாவின் இசையில் பல ஆயிரம் பாடல்கள் பாடி நம் மனத்தைக் கவர்ந்தார். ஒரு கட்டத்தில்
ரஜினிக்காக இவர் பாடிய எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.

கேட்டவுடன் உடனே பிடித்துவிடும் ஒருவித காந்தக் குரல் இவருடைய சிறப்பம்சம் என நினைக்கிறேன்.  உச்சஸ்தாயியில் பாடுவதில் வல்லவரான இவருடைய தமிழ் உச்சரிப்பும் அட்சர சுத்தமாக இருக்கும். ஆனாலும், இவர் பாடிய எத்தனையோ நல்ல பாடல்களைக் காட்டிலும் இவருடைய துள்ளலிசைப் பாடல்கள் மட்டும் பெரிதாகப் பேசப்பட்டன. அதனாலோ என்னவோ
இவர் சிலாகித்து கொண்டாடப்படாத திரை ஆளுமையானது சோகம்.

உணர்ச்சி ததும்பும்  இவருடைய குரலில் எனக்கு பல பாடல்கள் பிடித்திருந்தாலும் புதிய வார்ப்புகள் படத்தில்  வரும்  ' வான் மேகங்களே ' பாடல் என்றும் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்.

மலேசியா வாசுதேவன் பிறந்தநாள்- ஜூன் 15.

2 comments: