Saturday, August 19, 2017

வனநாயகன் -வல்லமை இதழில்

எனது 'வனநாயகன்-மலேசிய நாட்கள்' புதினம் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை வல்லமை இணைய இதழில் வெளியாகி உள்ளது.

http://www.vallamai.com/?p=78833

நன்றி: Megala Ramamourty(வல்லமை ஆசிரியர்க்குழு)

**********************************

வல்லமை வாசகர்களுக்கு,

அன்பு வணக்கங்கள். "வனநாயகன்-மலேசிய நாட்கள்" எனும் எனது இரண்டாவது புதினம் (நாவல்) கிழக்கு பதிப்பகத்தால் கடந்த ஜனவரியில் வெளியிட்டப்பட்டது.

2017-சென்னை புத்தகத்திருவிழாவில் வெளியான நாள் முதல் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வனநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக மகிழ்ச்சி.

வனநாயகன் குறித்து நான் எழுதுவதைவிட, "காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்" எனும் தலைப்பில் நண்பரும் விமர்சகருமான  சுரேஷ் கண்ணன் எழுதிய விரிவான அறிமுகக் கட்டுரையின் ஒரு சிறுபகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

"
...
மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பான் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப்  போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதே 'வனநாயகன்' எனும் இந்தப் புதினம். 


புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண் விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் 'இதைப் பற்றி சொல்கிறேன் பார்' என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. "

என்னைப் பொறுத்தவரை எழுதுவதைவிடவும், அது அச்சாகி நூலாக வெளியாவதை விடவும் எழுதியவனுக்கு மகிழ்வூட்டக் கூடிய ஒரு விசயம் அந்நூல் குறித்தான உரையாடல்கள் தான். அந்த வகையில் வனநாயகனை வாசித்து பதிவுகள், மின்னஞ்சல்கள் வழியாக தொடர்ந்து உற்சாகமளித்து வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


வனநாயகன் - மலேசியா நாட்கள்
ஆரூர் பாஸ்கர்,
கிழக்கு பதிப்பகம், 
பக்கங்கள் 304, விலை ரூ.275


"வனநாயகன்-மலேசிய நாட்கள்" - வாங்க

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க

************************************

1 comment: