சுதந்திர இந்தியாவை காங்கிரஸ் ஆளாமல் வேறோரு கட்சி
ஆண்டிருந்தால் இன்றைய இந்தியா எப்படி இருந்திருக்கும்
என கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா?
இல்லை. தமிழ்நாட்டை திராவிடக் கட்சிகள் கடந்த அரைநூற்றாண்டுகள் ஆட்சிசெய்யாமல் இருந்திருந்தால் ?
என்பதை யோசனை செய்து பார்த்தது உண்டா ?
அதுபோல இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனியப் படை வென்றிருந்தால் ? அப்படியொரு அதிகப்படியான கற்பனை செய்து எழுதப்பட்ட புதினம் (நாவல்) "த மேன் இன் ஹைய் கெசில்" (The Man in the High Castle,1962 ). கற்பனை செய்தவர் எழுத்தாளர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick) .
கதைப்படி போருக்குபின்னால் வெற்றிபெற்ற ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி எனும் மூன்று நாடுகள் பெரும்பான்மை உலகை தங்களுக்குள் பிரித்துக்கொள்கின்றன. ஹிட்லர் உயிருடன் இருக்கிறார். வேண்டாதவர்கள் என நினைக்கப்படுபவர்கள் அழித்தொழிக்கப்படுகிறார்கள். தப்பிப்பிழைத்த சில யூதர்களும் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அதுபோல உலகம் முழுவதும் வாழும் கறுப்பர்கள் அடிமைகளாக மிகமோசமாக நடத்தப்படுகிறார்கள். அந்த உலகை நினைத்துப் பார்க்கவே அச்சமூட்டுகிறது.
பூமியைத் தாண்டி சந்திரன், செவ்வாய், வெள்ளி போன்ற பிற கோள்களும் காலனியாக்கப்பட்டிருக்கிறன. மிக வேகமாக பயணிக்கும் சாகச விமானங்களை அவர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என பல சாத்தியமான விசயங்களை நம்பும்படியாக எழுதியிருக்கிறார்.
முக்கியமாக அமெரிக்கா ஜெர்மன், ஜப்பானியர்களால்
துண்டாக்கப்பட்டு ஆளப்படுகிறது. ஆனால், உண்மையில்
போருக்கு பின் ஜெர்மனிதான் மேற்கு,கிழக்கு என பிரிந்து கிடந்தது என்பது நாமறிந்த வரலாறு.
கதைப்படி ஜெர்மனின் கிழக்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு முன்னாள் போர் வீரன் ஜப்பான் ஆளுமையில் இருக்கும் மேற்கு பகுதியில் இருக்கும் ஒருத்தியை சில ரகசிய ஆவணங்களுடன் சந்திக்க பயணிக்கிறான்.
அந்த சந்திப்பு நிகழ்ந்ததா, அந்த ரகசியம் என்ன, அதன் பின் விளைவுகள் என்ன என்பதை நாவலை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.
வாசிக்கமுடியாதவர்கள் பார்த்தும் ரசிக்கலாம். ஆமாம்,
அமெரிக்காவில் இந்தக் கதை அமெசானால் டிவி சீரியலாகவும் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முதல் சீசனின் முதல்பாகம் கூட யூடியூபில் இலவசமாக கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள்.
இதன் ஆசிரியர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick) ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் கூட. பல வருதுகளைப் பெற்றவர். "பிளேட் ரன்னர்", "மைனாரிட்டி ரிப்போர்ட்" போன்ற பல பெருவெற்றி அடைந்த ஹாலிவுட் படங்கள் இவருடைய நாவல்கள் தான்.
வித்தியாசமான சிந்தனை நண்பரே
ReplyDelete