Saturday, August 12, 2017

வடகொரிய அடாவடிகள் (The Girl with Seven Names, 2015) -நாவல்

அணு ஆயுத வல்லமையுடன் அமெரிக்காவுக்கும்,  தென் கொரியாவுக்கும் பலவருடங்களாக  பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் வட கொரியாவைப் பற்றி நமக்கெல்லாம்
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உண்மையில் தொலைத் தொடர்பு மிகுந்த, உலகமயமான  இந்த 21ம் நூற்றாண்டில் பெரிதான வெளி உலகத் தொடர்புகள்  எதுவும் இல்லாமல் தனித் தீவுபோல்  இன்னமும்   ஒரு நாடு இருக்கிறது என்றால் அது வடகொரியாவாகதான் இருக்கும்.

இந்த வடகொரியா கடந்த அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக கிம் வம்சத்தின் பிடியில் இருக்கிறது. அவர்கள் மக்களுக்கு பலகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள் என்பதுமட்டுமே
நமக்கு தெரிந்த ஒரு மேலோட்டமான தகவல். மற்றபடி
நம்மிடம் அதிக விவரங்கள் இல்லை.

ஆனால், வடகொரிய  கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்த ஒரு இளம்பெண் (லீ ஹெயான் சீயோ) அங்கு நடக்கும் அடாவடிகளை சமீபத்தில் விரிவாக ஒரு புத்தகமாக எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேற்கு நாடுகளில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் The Girl with Seven Names: A North Korean Defector’s Story (Book by David John and Lee Hyeon-seo)

வடகொரியாவில் இருந்து தன் குடும்பத்தை பிரிந்து தன்னந்தனியாக  சீனாவுக்கு தப்பித்த அவர்
தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையை விறுவிறுப்பாக பகிர்ந்திருக்கிறார்.

முதலில் வடகொரியாவில் இருந்து வெளியேறி  சீனாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் முதலில் தஞ்சமடைந்து பின்,  அவர்கள் ஏற்பாடு செய்தத் திருமணம் பிடிக்காமல் அங்கிருந்து தப்பித்து ஒரு விபச்சார விடுதியில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து  ஒரு வழியாக தப்பித்து ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேருகிறார். ஆனால் அங்கேயும்  சரியான டாக்குமெண்டுகள் இல்லாமல் தலைமறைவாக வாழவேண்டிய கட்டாயம்.


கூடவே விடாத போலீஸ் துரத்தல்கள் . கள்ள பாஸ்போர்ட். அதற்கு உதவும் ஏஜண்டுகள். இதற்கு நடுவில் மெல்லிய காதல் என ஒரு திரைப்படத்துக்கு குறைவில்லாத சுவாரசியம்.

கதையின் ஊடாக  கிழக்கு ஆசிய மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைகள்
அவர்களுடைய பழக்க வழக்கங்கள், கொரிய வரலாறு போன்ற விசயங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். அலுக்கவில்லை.

அதுபோல, தனது சிறுவயது வடகொரியாவைப் பற்றிச் சொல்லும் போது  ஒட்டு மொத்த நாடே ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போல பல கட்டுப்பாடுகளுடன் இருந்தது என நினைவுகூறுகிறார். அதுகுறித்து அவர் சொல்லும் பல விசயங்கள் நமக்கு ஆச்சர்யமூட்டுகின்றன.

சில ஆச்சர்யங்கள் உங்களுக்காக-

ஊடகங்கள், நீதிமன்றம் போன்ற ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் அரசாங்கத்தின் கையில்.

அயல்நாட்டு கலை வடிவங்களான திரைப்படம், டிவி, பாடல்கள் போன்ற எந்த விசயத்திற்கும் அங்கே  அனுமதி இல்லை.

மீறி அதை  யாரேனும் பார்த்து ரசிப்பது தெரியவந்தால் சிறை தண்டனை

பெண்கள் சிறப்பு சிகை அலங்காரங்கள் செய்துகொள்ளக் கூடாது.
பகட்டான உடைகள், வாசனைத் திரவியங்களுக்கு அனுமதியில்லை.

நாட்டின் முக்கியத் தலைவரை அடைமொழியில்
மட்டும் குறிப்பிடவேண்டும். தவறுதலாகக் கூட அவருடைய
பெயரை யாரும்  உச்சரிக்கக் கூடாது.

அதுபோல அவருடைய பெயரை தங்கள் வாரிசுகளுக்கு சூட்டவும்
பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

அரசாங்கத்துக்கு  எதிராக செயல்படுவதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு
பொது இடத்தில் மரணதண்டனை வழங்கப்படும்.

பொது இடத்தில்  வழங்கப்படும் அந்தத் தண்டனையை அனைவரும்
பார்க்கவேண்டும் (பள்ளி மாணவர்கள் உட்பட) என்பது கட்டாயம்.

அரசாங்கம் அனுமதிக்காத வெளிநாட்டு பொருட்களை வைத்திருக்க, பயன்படுத்த யாருக்கும் அனுமதி இல்லை

கம்யூனிச நாடு என்பதால் உணவு, உடை, வாழ்விடம் என சகலத்திலும் அரசாசங்கத்தின் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

ஆனால்,  அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் மட்டத்தில் ஊழல் மிக சாதாரணம்.  அதனால், அரசுக்கு நெருங்கியவர்களும், பணம் படைத்தவர்களுக்கும் சட்டம் வளைகிறது.

பத்தாண்டுகளுக்கு மேலாக சீனாவில் வாழ்ந்த லீ ஹெயான்
இறுதியில் தென் கொரியாவில் அடைக்கலம் பெறுகிறார். இதற்கிடையில் வடகொரியாவில் இருக்கும் தன் குடும்பத்தினரை கள்ள ஏஜண்டுகள் மூலம் தப்பிக்க வைக்கிறார்.

இப்படி பல சவால்களுக்கு பின் இறுதியில் லீ  தன் குடும்பத்தோடு இணைந்தாரா ? என்பதைப் புத்தகத்தை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்தப் புத்தகம் திரைப்படமாவதற்கு எல்லா வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கிறது. பார்க்கலாம்.


Name:The Girl with Seven Names: A North Korean Defector’s Story
Originally published: July 2, 2015
Authors: Lee Hyeon-seo, David John
Original language: English
Nominations: Goodreads Choice Awards Best Memoir & Autobiography

அமேசான்:
https://www.amazon.com/Girl-Seven-Names-Korean-Defectors-ebook/dp/B00JD3ZL9U

படங்கள்: நன்றி இணையம்-
www.thestar.com
www.goodreads.com

3 comments: