Monday, January 8, 2018

"வனநாயகன் உருவான கதை" -வீடியோ நேர்காணல்

தினமலர் குழுமத்தின் நூல்வெளி தளத்தில் (noolveli.com) என்னுடைய வீடியோ நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்பினார்கள்.   அந்தப் ஃபோன் வந்தபோது சென்னை எக்மோரில் இன்னொரு வேலையாக இருந்தேன்.  

அவர்களிடம் அலுவலகம் குறித்து விசாரித்தேன். ஸ்பென்சர் பிளாசா அருகில் இருப்பதாகச் சொன்னார்கள். ஸ்பென்சர் எக்மோரில் இருந்து கூப்பிடு தூரமென்பதால் வருவதாக சம்மதித்தேன். அது மட்டுமில்லாமல் 
அன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி தென்காசி போவதாக வேறு திட்டமிருந்தது. அலுவலகத்தில் எழுத்தாள நண்பர் கார்த்திக் புகழேந்தியைச் சந்தித்தேன். முகநூலில் முன்பே அறிமுகமாகி இருந்ததால் 
உடனே பழக தடையேதுமில்லை.

அவர் எந்தவொரு தயாரிப்போ, ஒத்திகையோ இல்லாமல் நேர்காணல்
இயல்பாக பேசுவதுபோல் இருக்கட்டும் என உற்சாகப்படுத்தி பேசச் சொன்னார். கேள்விகளை அவர் கேட்டார். அவர் கேட்டதும், நான் சொன்னதும் இணைப்பில் ("வனநாயகன் உருவான கதை" எனும் தலைப்பில்)

//

தொழில்நுட்பக் கல்வி கற்று, மலேசிய வங்கிகளில் பணியாற்றி, தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் எழுத்தாளர் ஆரூர். பாஸ்கர். வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்று அங்குள்ள வங்கிகளில் பணிபுரிந்த காலகட்டத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், ஐ.டி துறையின் வேலைவாய்ப்பின் ஸ்திரத்தன்மைகள் குறித்தும், பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த மலேசியாவின் சூழல்களையும் முன்வைத்து எழுதிய நாவல் ‘வனநாயகன்’. கிழக்கு பதிப்பக வெளியீடாக கடந்த ஆண்டில் வெளியானது. முன்பாக தனது கிராமத்து வாழ்க்கையை ‘பங்களா கொட்டா’ என நாவலாக எழுத, அகநாழிகைபதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து இவ்வாண்டு செப்டம்பரில் ப்ளோரிடாவை சமீபத்தில் தாக்கிய ‘இர்மா’ புயலின்போது,  தனது குடும்பத்தினருக்கு நேர்ந்த இடர்பாடுகளையும் அனுபவங்களையும் கொண்டு, தனது மூன்றாம் நாவலை எழுதிவரும் ஆரூர் பாஸ்கர் நூல்வெளி.காம்-ற்கு அளித்த நேர்காணல்..  

//

http://noolveli.com/detail.php?id=397

பேசும்போது ஆங்கிலச் சொல்லாடல்களைத் தவிர்த்திருக்கலாம். அதுபோல எனது அறக்கட்டளை, தமிழ்ப்பள்ளி பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம் என 
நேர்காணல் முடிந்தபின் நினைத்துக்கொண்டேன். எழுத்து கைவர பயிற்சி தேவைப்படுவதுபோல் திரைக்கும்  பயிற்சி தேவைப்படுவதாக உணர்ந்த தருணம் அது.

அந்த 15- 20 நிமிட உரையாடலை, அபாரமாக   எடிட் செய்து 10 நிமிடங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். நேர்காணல் செய்த கார்த்திக்,
பதிப்பகத்தார், நூல்வெளியின் மொத்த தொழில் நுட்பக் குழுவுக்கும் நன்றி. 
நூல்வெளி குழு ஒரு அட்டகாசமான இளைஞர் பட்டாளம். அவர்களுக்கு 
எனது வாழ்த்துகள்.

2 comments: