Friday, January 12, 2018

வாசிப்புப் பழக்கம் தேவையா ?

சென்னை புத்தகத் திருவிழா சமயத்தில் வழக்கம் போல் தமிழகத்தின் வாசிப்பு குறித்தான விவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கிறது.

நாம் பொத்தாம் பொதுவாக இங்கே யாரும் வாசிப்பதில்லை, புத்தகங்கள் விற்பனையாவதில்லை எனக் குற்றஞ்சாட்டிவிட்டு நகர்வதை விடுத்து
ஏன் வாசிப்பு இல்லை என்பதைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

பெரும்பான்மையான நாடுகளில் வாசிப்பு என்பது சிறுவயதில் பள்ளிகளில்
வளர்த்தெடுக்கப்படுகின்றது. துரதிஷ்டவசதாக நமது கல்விச்சூழல் வேறாக இருக்கிறது. நமது பள்ளிகளில் படிப்பு என்றால் பாடப் புத்தகங்களை தேர்வுக்காக படிப்பதாகவே இருக்கிறது. உண்மையில் வாசிப்பு என்பது ஒரு அனுபவம். அதைப் பாடத்திட்டத்திற்கு வெளியேதான் நாம் பெறவேண்டியிருக்கிறது. பாடத்திட்டத்திற்கு வெளியே என்றால்
அது அவசியமற்றது, வாழ்க்கைக்கு உபயோகமற்றது எனும் மனநிலை
தவறானது. அது மாறவேண்டும் என நினைக்கிறேன்.

அமெரிக்கப் பள்ளிகளில் பாடத்திட்டத்திற்கு வெளியே தினமும் மாணவர்களுக்கு 30 நிமிட வாசிப்பு என்பதை  பரிந்துரைக்கிறார்கள். பாடத்திட்டத்திற்கு வெளியே மாணவர்களின் வாசிப்பை உற்சாகப்படுத்துகிறார்கள். நான் வசிக்கும் புளோரிடாவில் கல்வித் துறை மாணவர்களிடம் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக சன்ஷைன் ஸ்டேட் ரீடர்ஸ் அவார்ட் புரோகிராம் (Sunshine State Young Readers Award (SSYRA) Program) எனும் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். அதன்படி ஒவ்வொரு கல்வி ஆண்டும் இலக்கிய மதிப்பு,பாடத்திட்டத் தொடர்பு, பன்முகக் கலாச்சார பிரதிநிதித்துவம் கொண்ட 20 புத்தகங்கள் கொண்ட ஒரு பட்டியலை வெளியிடுகிறார்கள். அந்தப் புத்தகங்களை விருப்பமுள்ள மாணவர்கள் நூலகத்தில் எடுத்து வாசிக்கலாம். மாணவர்கள் அதை வாசித்ததை ஒரு சிறிய கேள்விபதில் மூலம் உறுதிசெய்தபின் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு "சன்ஷைன் ஸ்டேட் ரீடர்ஸ் அவார்ட்" எனும் சான்றிதழ் தந்து சிறப்பிக்கிறார்கள்.

புதிய சொல்லாடல்கள், அனுபவங்கள் என்பதைத் தாண்டி இது  மாணவர்கள் சுயமாக,சரளமாக வாசிப்பதை உறுதி செய்வதாக சொல்லும் அவர்கள் இது மாணவர்களுக்கு வாசிப்பு இன்பத்தையும் தருவதாகச் சொல்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவருக்கு முழுமையான   வாசிப்பு அனுபவம் அவசியமானது. தனித்துவமானது. அது நமக்குள் தரும் திறப்புகள் வாழ்க்கைக்கு முக்கியமானது.  அதை இன்றைய கல்விச் சூழல் அனுமதிக்காத பட்சத்தில் பெற்றோர்கள் வாசிப்பை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வேலையைச் செய்யவேண்டும்.அவர்கள்  வாசிப்பை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு முன் அவர்களுக்கு  வாசிப்பு குறித்து இருக்கும் சந்தேகங்களையும், குழப்பங்களையும்  களையவேண்டும்.

எந்த மாதிரியான புத்தகங்களைப் படிப்பது, எந்த மொழியில் படிப்பது ,
எப்படி நேரம் ஒதுக்குவது போன்ற கேள்விகளுக்கு என்னுடைய பதில் கட்டுரையோ,அறிவியலோ, புனைவோ உங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஏதோ ஒன்றை ஆர்வத்தோடு வாசியுங்கள். நேரம் தானாக தேடிவரும். அதுபோல உங்கள் பிள்ளைகளையும் வாசிக்க உற்சாகப்படுத்துங்கள். முடிந்தால் அவர்கள் வாசித்தது குறித்து நேரம்கிடைக்கும் போது உரையாடுங்கள். அதுபோல நீங்கள் வாசித்ததில் சுவையான செய்திகளை அவர்களுடன் பகிருங்கள்.

நான் எனது மகளுடன் சேர்ந்து அவளுடைய பல சிறார் நாவல்களை வாசித்து
அது குறித்து அவளுடன் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.நீங்களும்
முயன்றுபாருங்கள். உண்மையில் அது ஒரு சுகானுபவம்.

#வாசிப்பு

4 comments:

  1. வாசிப்பு சுகானுபவம்தான் நண்பரே

    ReplyDelete
  2. ஆனால் இங்கு அப்பாக்கள் கைத்தொலைபேசியுள் கரைந்து, அம்மாக்கள் தொலைக்காட்சியுள் தொலைந்து விட்டார்களே!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், யோகன் பாரிஸ்

      Delete