Tuesday, February 26, 2019

அந்த ஆறு நாட்கள் குறித்து - உணர்ச்சிப் போராட்டமான கதை

வாசக நண்பர் கோமகள் குமுதா முகநூலில் "அந்த ஆறு நாட்கள்" குறித்து எழுதிய கதை விமர்சனம். நன்றி குமுதா  !!

******************
சகோதரர் ஆரூர் பாஸ்கரின் "அந்த ஆறு நாட்கள்" நாவலை அமெசான் கிண்டிலில் நேற்று படித்தேன்.முதலில் கதையின் தலைப்பை பார்த்தால் என்ன அந்த ஆறு நாட்கள் பாக்யராஜ் படம் பெயர் மாதிரி இருக்கே அப்படின்னு எனக்கு மனதில் தோன்றியது. ஆனால் கதையை படித்து முடித்ததும் எவ்வளவு பொருத்தமான நாவலின் பெயர் என்று மனதில் எண்ணி வியந்தேன். 

சகோதரர் ஆரூர் பாஸ்கர் அவர்கள் இந்த கதையை எழுதியிருக்கும் விதம் எனக்கு பிரமிப்பூட்டுகிறது. கதை சொல்லும் லாவகத்தில் நானே அங்கே ஃபுளோரிடாவில் கதையின் நாயகன் பரணி அவன் மனைவி தாரிணி குழந்தைகள், அம்மு சிறியவள் கவி, அந்தக் கார், அவர்கள் வீடு இப்படி நான் அவர்களோடு கூடவே இருப்பதாக தோன்றியது. அவர்கள் முகங்களிலும் மனதிலும் ஏற்பட்ட அந்த மனநிலை படபடப்பு பயம் எல்லாவற்றையும் நானும் உடனிருந்து அனுபவிப்பதாக உணர்ந்தேன்.அதனால் அடுத்தடுத்து கதையைப் படிக்கும் போது ஐயோ பாவம் பரணி ஒரு குடும்பத் தலைவனாக தன் பயத்தை யாரிடமும் கூற முடியாமல் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உழல்வதை கண்ணால் காண்பது போலவே நான் உணர்ந்தது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

ஒரு கதையை படிக்கும் போது சுவாரசியமாக கதையை அலுப்புத் தட்டாமல் கொண்டு போவதே ஒரு எழுத்தாளருக்கு மிகவும் சவாலான விஷயம். இதில் கதையின் கால அளவு ஆறு நாட்கள் என்று வரையறுத்து நொடிக்கு நொடி நிமிடத்திற்கு நிமிடம் மணிக்கு மணி இப்படி வாசிப்பவரை இருக்கையின் நுனியில் அமர்த்தி இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பது போல த்ரில்லிங்கா செம ஸ்பீடா கதை எழுதுவது பெரிய வித்தை.

ஒரு பயங்கரமான சூறாவளி இர்மா தன் இருப்பிடத்தை தாக்கும் பொழுது ஒரு சாதாரணமான குடும்பத் தலைவன் தன் வேலையையும் குடும்பத்தையும் வீட்டையும் எப்படி காப்பாற்றுவது என்று யோசித்து யோசித்து பரணி எடுக்கும் முடிவுகள் என அற்புதமான கதையமைப்பு. உணர்ச்சிப் போராட்டமான கதை.
நான் இதுவரை எந்த நாவலைப் படித்து முடித்ததும் இப்படி உணர்ந்ததில்லை. ஆசிரியரின் எழுத்தின் நடை அந்த இர்மா புயலின் வேகத்தையும் விஞ்சி என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

சூறாவளியின் போது மக்களின் மனநிலை, அமெரிக்காவின் நில அமைப்பு, அரசியல், கொள்கை மாற்றங்கள் என கூர்மையாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து செவ்வனே படிப்பவர்கள் ரசிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல தொய்வில்லாத நடை. சொல்வளம்.தடுமாற்றமில்லாத கதை நகர்வு.பொருத்தமான பாத்திரப் படைப்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அற்புதமான படைப்பு. வாசித்த உடன் இப்பொழுதே ஃபுளோரிடாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. நண்பர்கள் அனைவரும் அமெஸான் கிண்டிலில் ஆன்லைன் ஆர்டர் செய்து வாங்கி தவறாமல் வாசித்து உங்கள் விமர்சனங்களை தெரிவிக்கவும்.

USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி- 

https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8...

இந்திய முகவரி - https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8...

****************


Wednesday, February 20, 2019

வணக்கம் - வலம்புரிஜான்

வலம்புரிஜான் நக்கீரன் இதழில்  தொடராக  எழுதிய "வணக்கம்" கட்டுரைத் தொகுப்பு  (நக்கீரன் வெளியீடு) வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வலம்புரிஜான் பற்றிய பெரிய முன் அறிமுகங்கள் எதுவும் இல்லாவிட்டாலும்
இந்த வாசிப்பின் வழியாக அவரைப் பற்றியும் அவர் காலத்திய தமிழக அரசியல் பற்றியும் ஒரு மேல் எழுந்தவாரியான ஒரு சித்திரத்தைப் பெறமுடிகிறது.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட தாய் வார இதழின் ஆசிரியராக இருந்த
ஜான் தொழில் முறையில் ஒரு திறமையான ஊடகவியளார் என்பதைத் தாண்டி ஓர் எழுத்தாளர், வழக்கறிஞர், பேச்சாளர், மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகத் தன்மையோடு செயல்பட்டிருக்கிறார். இளமைகாலத்தில்  திமுகவில் தனது பொதுவாழ்வைத் தொடங்கிய அவர் எம்.ஜி.ஆரால் அதிமுக பக்கம் கரை சேர்ந்திருக்கிறார் எனத் தெரிகிறது.

ஒரு விதத்தில் இந்தக் கட்டுரைகள் வலம்புரி ஜானின் அரசியல் பயணத்தைச் சொல்லுவதாக இருந்தாலும் அவை அப்போது முதல்வராக இருந்த (1991-96) ஜெயை தர்மசங்கடப்படுத்துவதற்காக எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

போகிற போக்கில் எம்ஜிஆர் தொடங்கி, ஜெ, கலைஞர், ஆர்.எம்.வீரப்பன், வைகோ, திருநாவுக்கரசு என குறிப்பிடத் தகுந்த பல தமிழக ஆளுமைகளுடன் தனது அரசியல்  அனுபவங்களை ஓளிவு மறைவின்றி பகிர்ந்திருக்கிறார். கட்டுரைகளில் தொடர்ச்சியாக  தன்னை  எம்.ஜிஆரின் தீவிர விசுவாசியாக நிலைநிறுத்தும் வலம்புரி ஜான் பக்கத்துக்குப் பக்கம் ஜெ.யை கரித்துக் கொட்டியிருகிறார். இப்படி ஒரு முதல்வரைப் பற்றி இந்த அளவு அந்தரங்கங்களையும் குற்றச்சாட்டுகளையும் அப்போது அவரால்  பகிங்கரமாக துணிச்சலாக பகிரமுடிந்தது ஆச்சர்யமே. அதே சமயத்தால் அதற்காக தானும் தனது குடும்பத்தினரும் தொடர்ந்து மிரட்டல்கள்,
நடவடிக்கைகளைச் சந்தித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓர் இடத்தில் இப்படிக்  குறிப்பிடுகிறார்." ...எம்.ஜி.ஆரின் பலவீனம் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பலவீனம் சசிகலா. சசிகலாவின் பலவீனம் பணம்.பணம்.பணம். ஆகவே தமிழ்நாடு கொள்ளைப் போகலாமே தவிர
வெள்ளையாகி விடாது (விதவையாகிவிடாது). 

எம்.ஜி.ஆர் ஜெ.வை அரசியலுக்கு அழைத்து வந்து தமிழ்நாட்டை தவிக்கவிட்டதுபோல அல்லாமல், ஜெ பணம் பண்ணிக்கொள். பதவியில் கண் வைத்துவிடாதே என்கிற பாணியில் சசிக்கலாவிடம் நடந்துகொள்கிறார். ஆனாலும்,  எம்.ஜி.ஆர் செய்ததை நான் செய்து விடமுடியாதா  ?என்கிற ஜெ.யின் அதே துணிச்சல் ஜெ செய்வதை நான் செய்து விட முடியாதா ? என சசிகலாவிற்கும் வந்துவிட்டது..."

இப்படி அன்றைய அரசியலின் உள்ளடி வேலைகள், காழ்ப்புணர்ச்சி என பலவற்றைப் பேசும் இந்தக் கட்டுரைகள் அரசியலில் சோபிக்கமுடியாமல் தோல்வியுற்ற ஒருவரின் புலம்பல்கள் என எளிதாக ஓதுக்கிடவிடத் தோன்றவில்லை. மாறாக அடுத்தத் தலைமுறைக்கான அரசியல் பாடமாக நினைக்கிறேன். இந்தக் குறிப்புகளின் வழியாக வலம்புரிஜானின் வார்த்தை விளையாட்டுகளையும் நகைச்சுவையுடன் ரசிக்க முடிகிறது.

"..
நான் வயிற்று மைதானத்தில் அவரைப் போலவே ஆடு,மாடுகளைப் புதைக்கிறவன் என்பதை எம்.ஜி.ஆர் அப்படிச் சுட்டிக்காட்டினார்..."

"..
புத்திசாலிகளுக்குள் ஒரு போட்டி வைத்தால் எந்த சூழ்நிலையிலும் நடராஜன் முதல் பரிசுக்குத் தகுதியானவர். அவர் நான் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இல்லை என்கிற கொள்ளிவாய்ப் பொய்யை ஊர் முழுக்க பற்றவைத்தார் ..."

அதுபோல எழுத்தில் மேற்கோள்களுக்குத் தமிழ் இலக்கியங்களைத் தாண்டி பைபிளையும்,  சர்வதேச இலக்கியத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.

"..
மத்தியானம் மீண்டும் ஜெ.  அவைக்கு வந்தார். வந்ததும் என்னை முறைத்தார்.  முறைத்தார் என்றால் அப்படி ஒரு முறைப்பு. உங்கள் கோபத்தில் சூரியன் அஸ்தமிக்காதிருக்கட்டும் என்று பைபிளில் ஒரு வரி வரும் அதுதான் அந்த நேரத்தில் என் நினைவில் நிழலாடியது. ..."

ஐந்து முறை தமிழகமுதல்வராக இருந்த ஜெயலலிதா குறித்த அதிகார பூர்வமான முழுமையான முறையான சுயவரலாறு (autobiography) என்று ஒன்று தமிழில்  இருக்கிறதா எனத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதில் அவருடைய பொது பிம்பத்தின் காரணமாக பல விசயங்கள் விடுபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், வலம்புரி ஜான் தனது அனுபவத்தின் வாயிலாக எழுதிய இந்தநூல் ஜெ. குறித்தான வரலாற்றிற்கு ஓரளவேனும் உண்மையைச் சேர்க்கும் என நம்பலாம்.

நூல்: வணக்கம்
ஆசிரியர்: வலம்புரிஜான்
வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்
ஐந்தாம் பதிப்பு:  2017 , விலை:  225

Tuesday, February 12, 2019

பத்து திருக்குறள்கள்

தமிழ்வகுப்பில் பிள்ளைகளுக்கு வழக்கமான பாடத்தோடு திருக்குறளைப் பயிற்றுவிக்கலாம் என முகநூலில் கடந்த ஆண்டு சில நண்பர்கள் ஆலோசனை சொல்லியிருந்தார்கள்.  அதன்படி நாங்களும் சோதனை முயற்சியாக இந்த ஆண்டு பாடத்தோடு பத்து திருக்குறளைக் கற்றுத்தருவது என முடிவு செய்தோம்.

பத்து திருக்குறள் என இலக்கு நிர்ணயித்து விட்டேன தவிர உண்மையில்
உள்ளுக்குள் யோசனையாகத்தான் இருந்தது. கடந்த ஆண்டு தமிழ் அடிப்படையைக் கற்றவர்கள் அதற்குள் திருக்குறளைப் படிக்க தயாராகியிருப்பாரகளா எனும் சந்தேகம் இருந்தது உண்மைதான். ஆனால், எனது அவநம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக பிள்ளைகள் திருக்குறளில் காட்டும் அசுரவேகம் என்னை ஆச்சர்யப்படவைக்கிறது.

பத்துவயதுக்குட்பட்ட இந்த அமெரிக்கப்பிள்ளைகளுக்கு முதலில்
ஒரெழுத்து, ஈரெழுத்து... பிறகு எளிய வாக்கியங்களை முடித்துவிட்டு திருக்குறளையும் அதன் ஆங்கில விளக்கத்தையும் தொடங்கினோம். அடுத்தடுத்து வந்த வகுப்புகளில் அவர்கள் திருக்குறளில் காட்டும் ஆர்வத்தில்
நான் திக்குமுக்காடி போயிருக்கிறேன். ஆண்டிற்கு பத்து எனும் இலக்கை மாதத்திற்கு பத்து என வைத்தாலும் கூட அசராமல் படிப்பார்கள் போல.  அந்த அளவுக்கு இரண்டாயிரம் ஆண்டு தமிழை அவர்கள் எளிதில் கிரகித்துக்கொண்டு அதை மனப்பாடமாகவும் திருத்தமாகவும் ஒப்பிப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

பெற்றோர்கள் தமிழர்களாக இருந்தாலும் அமெரிக்காவில் பிறந்துவளர்ந்த இந்தப் பிள்ளைகளின் புழங்குமொழி ஆங்கிலம். இவர்களுக்கு வெளியே தமிழ் பேச வாய்ப்புகள் மிக மிகக்குறைவு. ஆனாலும் திருக்குறளையும்
அதன் பொருளையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருகிறார்கள்.

திருக்குறள் ஒருவிதத்தில் அவர்களின் உள்ளே புதைந்துகிடைக்கும் தமிழை  வெளிக்கொணர உதவுவதாக நினைக்கிறேன்.  குறளை மனப்பாடம் செய்து  ஒப்பிப்பது இயந்திரத்தனமானது எனும் ஒரு சிலரின் வாதங்களைத் தாண்டி அதன் பொருளையும் அவர்கள் கற்று தெரிந்துகொள்வது சிறப்பே. எந்தவிதமான அறவழி கோட்பாடுகளையோ சிந்தனைகளையோ பள்ளிகளில் முறையாக பயிற்றுவிக்காத மேற்குநாடுகளில் வாழும் இந்தச் சிறார்களுக்கு திருக்குறள் உண்மையில் ஒரு வரமே.

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்”
என்பது போன்ற குறள்கள் ஊட்டும் தன்னம்பிக்கையை வேறு எந்த
இலக்கியம் இவர்களுக்கு தந்துவிடமுடியும் சொல்லுங்கள். உண்மையில் எந்தவிதமான குறுகிய எண்ணங்களுக்கும் இடம் தராமல், எவ்வகைச் சார்பும் இன்றி உயர்ந்த நோக்கில் வாழ்வியலைப் பேசும் புரட்சி நூல்
திருக்குறள். மாணவர்களுக்கு இந்த வயதில் மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

தாய் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து பல்லாயிரம் மைல்கள் கடல்கடந்து வாழ்ந்தாலும் புதிய தலைமுறையினரின் சிந்தனையில் ஐயன் வள்ளுவனின் ஈராயிரம் ஆண்டு ஞானத்தைக் கொண்டு சேர்க்கும் சிறு கருவியாக  இருப்பதில் கர்வப்படுகிறேன்.

திருக்குறள் யோசனையைச் சொன்ன அன்பர்களுக்கு நன்றி !

நன்றி- படங்கள் இணையம்.

Thursday, February 7, 2019

சைக்கிள் (2018) - மராத்தி

சாதாரண கதையை பிரமாண்டப்படுத்தி வரும் திரைப்படங்களை விட குறைந்த பொருட்செலவில் கவித்துவமாக எடுக்கப்படும்
படங்கள் சமயங்களில்   நல்ல வரவேற்ப்பைப் பெற்றுவிடும்.

அந்த வரிசையில் சேர்க்கவேண்டிய ஒரு படம் 'சைக்கிள் (2018)'. மராத்திய மொழியில் வெளியான இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்  (உபயம்- சப்டைட்டில்). படத்தை பிரகாஷ் குன்டே இயக்கியிருக்கிறார்.

1950 ஆண்டுவாக்கில் நடக்கும் இந்தக் கதையின் நாயகன் கேசவ்.
தனது தந்தை, மனைவி, மகளுடன் வசிக்கும் கேசவ் தொழில்முறையில் ஒரு  ஜோதிடர். கிராமத்தில் வசிக்கும் கேசவ் தனது தாத்தா ஆங்கிலேயரிடம் இருந்து பெற்ற ஒரு மஞ்சள் சைக்கிளைப் பொக்கிசமாக கருதி பாதுகாத்து வைத்திருக்கிறார். நல்ல பயன்பாட்டில் இருக்கும் அந்த சைக்கிள் ஒரு நாள்  இரவு திருடுபோகிறது.


ஊருக்குள் திருட வந்த இரண்டு திருடர்கள் அதைத்  தப்பிக்கும் வாகனமாக எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். திருட்டு சைக்கிளோடு வெளியேறிய திருடர்கள் பல கிராமங்களைக் கடந்து செல்லும்போது  எப்படி நல்லவர்களாக திருத்துகிறார்கள் என்பதே படத்தின் கதை.  படம் முழுமையும் சைக்கிள் என்பது ஒரு குறியீடாகவே தொடர்ந்து வருகிறது.

உண்மையில் ஒருவன் பயன்படுத்தும் பொருள் என்பது ஓர் உயிரற்ற ஜடம் மட்டும் தானா ? அப்படியென்றால் அவன் இல்லாதபோது அவனுக்கு கிடைக்கும்  சகல மரியாதையும் அவன் பயன்படுத்தும் பொருளுக்கும் கிடைக்கிறதே ? எனும்
ஆதார கேள்வியை முன்னிருத்தி படம் பயணிக்கிறது.

தனது விருப்பத்துக்குரிய சைக்கிளை இழந்த கேசவ் நிலைகொள்ளாமல் வருத்தத்தோடு அதைத் தேடி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்தத் தேடலில் அவர் தன்னை உள்ளார்ந்து பார்ப்பது போன்ற தத்துவப் பார்வைகள் இருந்தாலும் படம் மெல்லிய நகைச்சுவையோடு நகர்வதால் வெகு இயல்பாக இருக்கிறது.

கூடவே படம் எளிய கிராமங்கள், அங்கு வாழும் வெள்ளந்தியான மனிதர்கள், அவர்களுடைய பாசாங்கற்ற வாழ்க்கையை அழகாக சொல்கிறது.
ஒளிப்பதிவாளர் அமலென்டு செளத்ரியின் (Amalendu Chaudhary)  கைவண்ணத்தில் மராட்டிய கிராமங்களில் கேரள கிராமங்களின் அழகையும் வனப்பையும் காணமுடிகிறது.

'சைக்கிள்' பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருப்பதாக அறிகிறேன். வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

படங்கள்- நன்றி இணையம்.


Monday, February 4, 2019

அந்த ஆறு நாட்கள் (நாவல்) - வெளியீடு

ஒரு மகிழ்ச்சியான செய்தி-

ஹரிக்கேன் இர்மாவை மையப்படுத்திய படைப்புக்கு பொருத்தமான தலைப்பை யோசித்துக் கொண்டிருப்பதாக சொன்னது நினைவிருக்கலாம்.

கடந்த வாரம் தலைப்பை இறுதி செய்துவிட்டேன்.   ஆமாம், கதையை மறுவாசிப்பு செய்தபோது  "அந்த ஆறு நாட்கள்" எனத் தலைப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது.

அந்தத் தலைப்போடு சென்னை புத்தகக் கண்காட்சி ஆராவாரம் ஓய்ந்த இந்தத் தருணத்தில் புதினத்தை (நாவலை) அமெசான் கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன்.

எனது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து உற்சாகபடுத்தி ஆதரவளிக்கும் நண்பர்கள் இருக்கும் துணிவில் இந்தமுறை  பதிப்பகமில்லாமல் நேரடியாக அமெசானில் களம் இறங்கி இருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் எழுதுவதன் ஆன்ம திருப்தியே படைப்பு பரவலாக வாசிக்கப்படுவதே.  அதனால் நண்பர்கள் நாவலை வாசித்து தங்களின் மேலான கருத்துகளைப் பகிரவும்.  நன்றி!

அமெசான் தளத்தின் முகவரி கீழே.

In USA
https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8&qid=1549047833&sr=8-2&keywords=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

In India
https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8&qid=1549047966&sr=8-1&keywords=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Title : Antha Aaru Natkal
Format: Kindle Edition
Language: Tamil
ASIN: B07NBDM78S
Price: Rs.99

Friday, February 1, 2019

ஊச்சு (The Fear) -அரவிந்த் சச்சிதானந்தம்

தமிழ் உரைநடையில் எழுத்தாளர் சுஜாதாவுக்கு என்றும் ஒரு முக்கிய இடமிருக்கிறது. ஆங்கில வெகுஜன எழுத்தை ஒட்டி தனக்கென ஒரு புதிய பாணியைக் கைகொண்டு  நாற்பதாண்டுகளுக்கு மேலாக தமிழில்
கதை,கட்டுரை,நாடகங்கள்,புதினங்கள் என வணிக எழுத்தில் கோலோச்சியவர்.

எளிய நடையில் சுருக்கமாக திரைக்கதை பாணியில் செல்லும் அவருடைய எழுத்து வசீகரமானது. நீதித்துறை, காவல், மருத்துவம், அறிவியல் என அந்தந்தத்துறை சார்ந்த சொல்லாடல்களை  தன் படைப்புகளின் வழியாக வாசகர்களுக்கு சிறப்பாக அறிமுகம் செய்தவர்.  ஒரு கட்டத்தில்
எழுத்தில் சிறிதேனும் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது தவிர்க்கஇயலாது எனும் நிலையை ஏற்படுத்திய ஆளுமை அவர்.

சமகால இளைஞர்களைக் கவரும் விதத்தில் இளமை துள்ளலோடு அமைந்த
சுஜாதாவின் நடையை ஒட்டி தமிழில் தொடர்ந்து கவனிக்கத்தகுந்த வகையில் எழுதிவருபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அரவிந்த் சச்சிதானந்தம். 2014ம் ஆண்டிற்கான உயிர்மையின் சுஜாதா விருது, 2017ம் ஆண்டில் அசோகமித்திரன் (பாரட்டுதலுக்குரிய சிறுகதை) விருது பெற்றவர்.

கடந்தவாரம் அவருடைய ஊச்சு எனும் குறும்புதினத்தை
(குறுநாவலை) வாசித்தேன். "ஊச்சு (The Fear)" எனும் தலைப்போடும் மர்மக்கதை எனும் மிரட்டலோடும் அமெசான் கிண்டிலில் கிடைக்கும் இந்த நூலை சில மணிநேரங்களில் விறுவிறுப்போடு வாசித்துவிட முடிகிறது.

ஆவணப் படம் எடுக்க மேல்பாறைக்கு பயணமாகும் நான்கு நண்பர்கள் நடுக்காட்டில் மர்மமாக மறைகிறார்கள்.
மாயமான அவர்களை மீட்டு அந்த மர்மத்தை விலக்க சென்னையில் இருந்து  அர்ஜூன் எனும் காவல்துறை அதிகாரி புறப்பட்டு வருகிறார். அவர் எப்படி சிக்கலான அந்தப் புதிரின் முடிச்சை அவிழ்க்கிறார் என்பதே கதைகதையின் வித்தியாசமான தலைப்பான ஊச்சு மனிதனின் ஆழ்மனத்துக்குள் புதைந்துகிடக்கும் பய உணர்வைச் சொல்கிறது. 

மக்களின் மூடநம்பிக்கைகள் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரவர்கத்தின் அத்துமீறல்கள், அமானுஸ்யம் என மர்மக் கதைகளுக்கு உரிய எல்லா அம்சங்களையும் சரியான விகிதத்தில் கலந்து குழப்பமின்றி சரசரவென கதை நகர்கிறது. இப்படி கதை விறுவிறுப்பாக நகரவேண்டும் எனும் உந்துதலில் கதையின் மையக்கரு எனும் motive குறித்தான விவரங்களை இன்னமும் விரிவாக விலாவரியாக ஆசிரியருக்கு எழுத இயலாத சூழல் அமைந்ததாக நினைக்கிறேன்.

மற்றபடி சுஜாதாவின் நறுக் வசனங்களையும், பல பகடியான சொல்லாட்சிகளும் கதை முழுவதும் விரவிக் கிடக்கின்றன. கதையில் தமிழ் பேசமட்டும் தெரிந்த ஒரு வடநாட்டு காவல்அதிகாரி பேசுவதுபோல ஒர் இடம் 'தமிழ்நாட்டு கவர்மெண்ட் ஆபிசரெல்லாம் தமிழ்ல கையெழுத்து போடனும்னு சொல்றீங்க. ஆனா, உங்க பசங்க எல்லாம் படிச்சிட்டு வெளிநாட்டுக் காரனுக்கு வேலைபாக்குறான். இந்தியாவில, கவர்மெண்ட் வேலையில முக்கால்வாசி பேரு எங்கள மாதிரி வெளியூர்காரங்கதான் தெரியுமில்ல...' எனும் சுஜாதா டச் பல இடங்களில்  தெறிக்கிறது. அதுபோல 
போகிற போக்கில் 'இப்ப உங்க குரூப் எக்ஸாம் கூட வெளி ஸ்டேட் பசங்க எழுதலாம்னு சொல்லியாச்சி '  என உள்ளூர் அரசியலையும் சேர்த்து சொல்லிச் செல்வதை ரசிக்கமட்டுமே முடிகிறது. ஆனால், உண்மை சுடுகிறது. இதுவே எழுத்தின் வெற்றியும் கூட.


கூடவே வழக்கமான ஒரு துப்பறியும் கதையை முன்னும் பின்னுமாக  விறுவிறுப்போடு திரைக்கதைபோல சாமர்த்தியமாக நகர்த்தும் லாவகம் அரவிந்துக்கு அழகாக வந்திருக்கிறது. கதையில் எந்தவொரு எழுத்தும் தேவையில்லை எனச் சொல்லும் சுஜாதாவின் சொற்சிக்கனத்தை இம்மிபிசகாமல் பின்பற்றியிருக்கிறார். சுஜாதாவை வாசித்தவர்கள், மர்மக்கதை விரும்பிகள் ஊச்சு வை விரும்புவார்கள்.

இணையத்தில்-

https://www.amazon.in/%E0%AE%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-Oochchu-Tamil-Aravindh-Sachidanandam-ebook/dp/B07L7CLWJ3/ref=sr_1_1?s=digital-text&ie=UTF8&qid=1549083521&sr=1-1&keywords=%E0%AE%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81