வாசக நண்பர் கோமகள் குமுதா முகநூலில் "அந்த ஆறு நாட்கள்" குறித்து எழுதிய கதை விமர்சனம். நன்றி குமுதா !!
******************
******************
சகோதரர் ஆரூர் பாஸ்கரின் "அந்த ஆறு நாட்கள்" நாவலை அமெசான் கிண்டிலில் நேற்று படித்தேன்.முதலில் கதையின் தலைப்பை பார்த்தால் என்ன அந்த ஆறு நாட்கள் பாக்யராஜ் படம் பெயர் மாதிரி இருக்கே அப்படின்னு எனக்கு மனதில் தோன்றியது. ஆனால் கதையை படித்து முடித்ததும் எவ்வளவு பொருத்தமான நாவலின் பெயர் என்று மனதில் எண்ணி வியந்தேன்.
சகோதரர் ஆரூர் பாஸ்கர் அவர்கள் இந்த கதையை எழுதியிருக்கும் விதம் எனக்கு பிரமிப்பூட்டுகிறது. கதை சொல்லும் லாவகத்தில் நானே அங்கே ஃபுளோரிடாவில் கதையின் நாயகன் பரணி அவன் மனைவி தாரிணி குழந்தைகள், அம்மு சிறியவள் கவி, அந்தக் கார், அவர்கள் வீடு இப்படி நான் அவர்களோடு கூடவே இருப்பதாக தோன்றியது. அவர்கள் முகங்களிலும் மனதிலும் ஏற்பட்ட அந்த மனநிலை படபடப்பு பயம் எல்லாவற்றையும் நானும் உடனிருந்து அனுபவிப்பதாக உணர்ந்தேன்.அதனால் அடுத்தடுத்து கதையைப் படிக்கும் போது ஐயோ பாவம் பரணி ஒரு குடும்பத் தலைவனாக தன் பயத்தை யாரிடமும் கூற முடியாமல் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உழல்வதை கண்ணால் காண்பது போலவே நான் உணர்ந்தது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
ஒரு கதையை படிக்கும் போது சுவாரசியமாக கதையை அலுப்புத் தட்டாமல் கொண்டு போவதே ஒரு எழுத்தாளருக்கு மிகவும் சவாலான விஷயம். இதில் கதையின் கால அளவு ஆறு நாட்கள் என்று வரையறுத்து நொடிக்கு நொடி நிமிடத்திற்கு நிமிடம் மணிக்கு மணி இப்படி வாசிப்பவரை இருக்கையின் நுனியில் அமர்த்தி இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பது போல த்ரில்லிங்கா செம ஸ்பீடா கதை எழுதுவது பெரிய வித்தை.
ஒரு பயங்கரமான சூறாவளி இர்மா தன் இருப்பிடத்தை தாக்கும் பொழுது ஒரு சாதாரணமான குடும்பத் தலைவன் தன் வேலையையும் குடும்பத்தையும் வீட்டையும் எப்படி காப்பாற்றுவது என்று யோசித்து யோசித்து பரணி எடுக்கும் முடிவுகள் என அற்புதமான கதையமைப்பு. உணர்ச்சிப் போராட்டமான கதை.
நான் இதுவரை எந்த நாவலைப் படித்து முடித்ததும் இப்படி உணர்ந்ததில்லை. ஆசிரியரின் எழுத்தின் நடை அந்த இர்மா புயலின் வேகத்தையும் விஞ்சி என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
சூறாவளியின் போது மக்களின் மனநிலை, அமெரிக்காவின் நில அமைப்பு, அரசியல், கொள்கை மாற்றங்கள் என கூர்மையாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து செவ்வனே படிப்பவர்கள் ரசிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல தொய்வில்லாத நடை. சொல்வளம்.தடுமாற்றமில்லாத கதை நகர்வு.பொருத்தமான பாத்திரப் படைப்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அற்புதமான படைப்பு. வாசித்த உடன் இப்பொழுதே ஃபுளோரிடாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. நண்பர்கள் அனைவரும் அமெஸான் கிண்டிலில் ஆன்லைன் ஆர்டர் செய்து வாங்கி தவறாமல் வாசித்து உங்கள் விமர்சனங்களை தெரிவிக்கவும்.
USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி-
https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8...
இந்திய முகவரி - https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8...
****************
வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteதொடர்ந்த ஆதரவுக்கு நன்றி!!
Delete