Monday, June 24, 2019

பெயரில் என்னதான் இல்லை ?

அமெரிக்காவில் இருந்து  'ஆரூர் பாஸ்கர்' எனும் பெயரில் ஏன்  எழுதுகிறீர்கள்.
ஆரூர் பாஸ்கர் பெயர் எப்படி வந்தது ?  ஆரூர் சொந்த ஊரா ?
அரூரா இல்லை ஆரூரா ? அது  எங்கே சார் இருக்குது, கேரளா பக்கமா ? என்றெல்லாம் பலர் விசாரிக்கும் போது எழுத்தாளர் சுஜாதா  தற்செயலாகப் பெயர் மாறுவதைப் பற்றி எழுதிய ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

பாடகி மால்குடி சுபாவைத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் "மால்குடி பெயர் எப்படி வந்தது ? சொந்த ஊரா ?"  என்று பேட்டியாளர் கேட்டபோது, "நான் 'மால்காடி'  (சரக்கு வண்டி) என்கிற ஒரு இந்தி நாட்டுப்பாட்டில் பிரபலமானேன். அங்கே என்னை 'மால்காடி சுபா' என்றே அழைத்தனர். வால்பாறை, வட்டப்பாறை மூலம் தமிழுக்கு அறிமுகமானபோது, மால்காடியை 'மால்குடி' என்று மாற்றிவிட்டார்கள். பின்பு அதுவே நிலைத்துவிட்டது" என்றாராம்.

அது போல நண்பர்கள் யாரும் எனக்கு பெயர் மாற்றம் செய்துவிடாதீர்கள்.
ஆரூர் பாஸ்கரில் இருக்கும் 'ஆரூர்'  வரலாற்றுத் தொன்மை வாய்ந்த திருவாரூரைக் (திரு+ஆரூர்) குறிக்கும்.  தஞ்சாவூரை அடுத்த திருவாரூர்
என் சொந்த ஊர் (பிறந்த ஊர் அல்ல) . தேவாரப் பாடல்களில் கூட திருவாரூர்  ஆரூர் ("ஆரூரானை மறக்கலுமாமே.." ) என்றும் திருவாசகத்தில் "ஆரூர் அமர்ந்த அரசே போற்றி"   என்றும் குறிப்பிடப்படுகிறது.  அதனால்,  அதை மாற்றிக்கொள்ளும்  எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை. :)

Thursday, June 20, 2019

முன்மாதிரி அரசுப்பள்ளி

இன்றையச்  சூழலில் ஓர் அரசுப்பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக  மூன்று ஆண்டுகள் 100 சதவீதம் வெற்றி பெறுவதும் மாணவர்களின்
சேர்க்கை  இரட்டை இலக்கத்தில் உயர்வதும்  தற்செயலான நிகழ்வுகள் இல்லை. அந்தச் சாதனையை திருவாரூர், மாங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி செய்து காட்டியிருக்கிறது.

ஆமாம். இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பல அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் இணைந்து தன்னெழுச்சியாக செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. "சிறகுகள் கல்வி அறக்கட்டளை" சார்பில் மாங்குடி பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

கடந்தவாரம் நடந்த நிகழ்ச்சியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகையும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கினோம். அதுபோல தமிழ் பாடத்தை சிறப்பாக ஆர்வத்தோடு படித்து முதலிடம் பெற்றவருக்கு பரிசு அளித்து உற்சாகப்படுத்தினோம்.

நிகழ்ச்சி காணோலியை பள்ளி ஆசிரியர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார்.
பல உள்ளூர் பிரமுகர்கள் பேசியிருக்கிறார்கள். இதுபோல  ஆசிரியர் குழுவுடன் உள்ளூர்காரர்கள் இணைந்து செயல்படுவது நல்லதொரு வழிகாட்டல். உண்மையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளூர் மக்களின் அபிமானத்தையும் நம்பிக்கையும் பெறுவதே இன்றைய உடனடி தேவை. அதை இவர்கள் கச்சிதமாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.

கடந்த ஆண்டு நான் நேரில் சென்றிருந்தபோது 'சிறகுகள் அறக்கட்டளை எங்க பள்ளிக்கு வந்த நேரம் பசங்க ஆர்வமா, உற்சாகத்தோட படிக்க ஆரம்பிச்சுட்டாங்க, நன்றி! ' என பள்ளி நிர்வாகத்தினர் புகழ் மொழி சொன்னாலும்,  இந்த வெற்றி முழுக்க முழுக்க மாணவர்கள், ஆசிரியர்களின் பூரண உழைப்பில் வந்த ஒன்று. அவர்களைப் பாராட்டி கைகுலுக்கி வாழ்த்துவோம்.

#சிறகுகள்2019






Sunday, June 16, 2019

சயந்தனின் ஆறாவடு

எழுத்தாளர் சயந்தனின் ஆறாவடு

ஷோபா சக்தி, அகர முதல்வன்,தமிழ் நதி,ஈழ வாணி,தமிழினி என நீளூம் 
எனது ஈழ எழுத்தாளர்களின் வாசிப்புப் பட்டியலில் சமீபத்தில் சயந்தனும் இணைந்திருக்கிறார். 

ஆறாவடு - தமிழீழ விடுதலைப்போர் பின்னணியில் பூத்திருக்கும் மற்றோரு படைப்பு. வாசிப்பனுபவம் என்ற பெயரில் இங்கே முழுக் கதையை பகிர்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. அதனால், கொஞ்சம் மேலோட்டமாகவே பார்க்கலாம். பெரும்பாலும் நெடுங்கதைகளில் ஒரு மையக்கதை என ஒன்றிருக்கும். அதை ஒட்டினார் போல் பல சம்பவங்கள், கிளைக்கதைகள், பாத்திரப்படைப்புகள் என அந்த மையக் கதையை ஒட்டியும் வெட்டியும் செல்லும்படியாகவே புனைவுகள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஆறாவடு நாவலை இப்படி ஒரு சட்டகத்துக்குள் அடைக்க இயலாது. ஆதாரமான ஒரு மையக்கதை. அதுவும் முன்னும் நகரும் வகையில். இடையில் மையக்கதைக்கு நேரடித் தொடர்பில்லாத பல கிளைக்கதைகள் என மாறுபட்ட கதைக் கட்டமைப்பு கொண்ட படைப்பு.  அந்தவகையில் ஆறாவடு இதுவரை நான்  வாசித்த படைப்புகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானதும் கூட.

1987 தொடங்கி 2003 வரையான இரண்டு 'அமைதி' க் காலங்களுக்கு இடையே இந்தக் கதை நகர்கிறது எனும் ஆசிரியர் குறிப்போடு தொடங்கும் இந்தப் புதினத்தின் மையக்கதை, கள்ளத்தோணி ஏறி இத்தாலி செல்ல முயற்சி செய்யும் கதைநாயனின் பயணம் . ஆசிரியரின் மொழியில்

சொல்வதென்றால் அது தோணி அல்ல வள்ளம். மற்றதெல்லாம் கிளைக் கதைகள். படைப்பில் ஊடாக பாயும்  பல கிளைக்கதைகள் காத்தாரமானவை.  நான்கு பக்கங்கள்  இருந்தாலும் கூட ஆழ்ந்தபாத்திரப் படைப்போடு ஆற்றொழுக்கான உரையாடல் வழியாக யதார்த்த அரசியலைச் சொல்லிச் செல்கின்றன. 

அமைதிப்படை, புலிகள் மட்டுமல்லாது அப்போது களத்தில் இருந்த மற்ற தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளை இரத்தமும் சதையுமான மனிதர்கள் வழியாக எழுத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். குறிப்பாக புலிகளை விமர்சிக்கும்  நேரு ஐயா எனும் ஒரு பெரியவர் பாத்திரத்தின் வழியாக முன் வைக்கப்படும் பல கருத்துகள் ஈழ விடுதலையின் முடிவிற்கு விடைதேடும் சாமானிய வாசகர்களுக்கு ஒரு திறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஈழ எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பதலோ என்னவோ படைப்பில் அடர்த்தியான தமிழை எதிர்பார்த்தே உள்ளே நுழைந்தேன். எழுத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆசிரியரின் சுய எள்ளல். போரின் வலிகளைச் சுமந்த படைப்பிலும் கீற்றாக வந்துபோகும் பகடி இயல்பாகவே இருக்கிறது. 

"இரண்டாவது நாள் இவன் மலேசியா பயணமானான். கஸ்டம்சில் பயணம் எதற்கானது என்று கேட்டார்கள். 'பிஸினஸ்' என்றான். 15 நாட்கள் விசாவினைக் குத்தி அனுமதித்தார்கள். அன்றைக்கு மட்டும் இவனுக்குப் பின்னால் பன்னிரண்டு பேர் மலேசியாவிற்குள் பிஸினஸ் செய்ய வந்தார்கள். அவர்கள் அவ்வளவு பேரும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டனர்..."

(பக்கம்-143) "..கண்ணுக்கு முன்னால் முழங்காலுக்கு கீழே, இரத்தம் வழிந்தபடி தசைத் துணுக்குகள் பிய்ந்து தொங்கிய என் காலொன்றைக் கடல் அலைகள் தம்மோடு உள்ளிழுத்தன. அந்தக் காலும் அதன் மேலிருந்த வரிச்சீருடைத் துணியும் எனக்கு சொந்தமாய் சற்றுமுன்னர் வரையிருந்தன. 

எனும் போது நுட்பமான கதைச் சொல்லியாக மிளிர்கிறார். தொடர்ந்து எழுதுங்கள் சயந்தன்!.

மற்றபடி டியூசன்கள், ரியுசன்களாக மண் மணத்தோடு வரும் படைப்பில் ஏனோ துவக்குகள் துப்பாக்கிகளாகி விட்டன எனத் தெரியவில்லை. உணர்வுப்பூர்மான மிகப்பெரும் களத்தில் அழகியலோடு இன்னும் பல படைப்புகளைச் சயந்தனிடமிருந்து எதிர்பார்கிறேன்.

நூல்: ஆறாவடு
ஆசிரியர்: சயந்தன்
பதிப்பகம்: தமிழினி பதிப்பகம் (2012, இரண்டாம் பதிப்பு)
விலை:र140.00

Sunday, June 9, 2019

அட்லாண்டாவில் வனநாயகன்


அட்லாண்டா நகரின்  ஃபோர்சைத் மாகாண (Forsyth County) நூலகத்தில் எனது "வனநாயகன்: மலேசிய நாட்கள்" (புதினம்)  அச்சுப்பதிப்பாக கிடைப்பதாக  நண்பன் ஒருவர் ஆச்சர்யப்பட்டிருந்தார்.

அட்லாண்டாவின் புறநகரான  கம்மிங்(Cumming)ல்  வசிக்கும் அவர் நூலகம் போனபோது  வனநாயகன் தமிழ் புனைவு வரிசையில் தற்செயலாகக் கண்ணில் பட்டது என  படமும் எடுத்து அனுப்பியிருந்தார். அட்லாண்டா வாழ் நண்பர்கள்  இந்த வாய்ப்பைப்  பயன்படுத்திக்கொள்ளலாம்.



எந்த ஒரு மார்கெட்டிங்கும் இல்லாமல் அமெரிக்க நூலகத்தில் புத்தகம்  எப்படியோ வாசிக்கக் கிடைக்கிறது எனும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் Baskar, Aarur என்பதை Paskar, Arur என மொழி பெயர்த்தவரைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். :)

Sunday, June 2, 2019

தண்ணீர் - எழுத்தாளர் அசோகமித்திரன்

அந்த நாட்களில் நகர்ப்புறங்களில் தனி வீட்டில் தங்க வாய்ப்பில்லாதவர்கள்
ஒண்டுக் குடுத்தனம் அல்லது குடிக்குள் குடி எனும் முறையில் குடித்தனம்
இருக்கும் வழக்கம் இருந்தது.  அப்போது ஒரு சாதாரண ஓட்டுவீட்டில் கூட ஆறு, ஏழு குடும்பங்களை மிகச் சகஜமாக பார்த்துவிட முடியும்.

அதுபோலொரு ஒண்டுக்குடுத்தன வீட்டுச் சூழலை அசோகமித்திரன் தனது தண்ணீர் நாவலில்  கூர்மையான உரையாடல்கள் மூழமாக மிகக் குறைந்த பக்கங்களில் மிக நேர்த்தியாக கண்முன் கொண்டுவந்திருக்கிறார்.

கதையின் மைய நீரோட்டமாக நகரின் தண்ணீர் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனோடு சேர்ந்து பயணிக்கும் பெண்களின் வாழ்க்கை. குறிப்பாக இரு பெண்கள். ஒருவர் டீச்சரம்மா. திருமண பந்தத்தில் வஞ்சிக்கப்பட்ட பெண். இன்னோருவர் ஜமுனா  சினிமாவில் நடிக்க ஆசை காட்டி  வஞ்சிக்கப்பட்ட பெண். ரத்தமும் சதையுமாக படைக்கப்பட்டிருக்கும் இந்தக் பாத்திரங்கள் மூழமாக வாழ்வின் எதார்த்தத்தை மிகை உணர்ச்சியின்றி அதன் போக்கில் தனது நுணுக்கமான எழுத்தில் எழுதிச் செல்கிறார்.

அவர்களின் வழியாக அமி கட்டமைக்கும் பெண்களின்
உலகம் பல ஆச்சர்யங்கள் நிறைந்தது. "இந்த அழுகையெல்லாம் பாத்து பாத்தே அழுகையே வராம போயிடுத்து.." என உறுதியான மனோதிடத்துடன் பேசும் டீச்சரம்மா ஒருபுறம் என்றால் மறுபுறம் குற்றவுணர்வோடு, தாழ்வு மனப்பான்மையோடு நடைபிணமாக வாழும் ஜமுனா. அவளுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் டீச்சரம்மா என கதாபாத்திரங்கள் கச்சிதமாக நாயகத்தன்மை இல்லாமல் வெகு இயல்பாக மனதுக்கு நெருக்கமாக வருகிறார்கள். அசோகமித்திரனின் எழுத்தை விரும்பும்
வாசகர்கள் தவறவிடக்கூடாத படைப்பு தண்ணீர்.


நூல்: தண்ணீர்
ஆசிரியர்: அசோகமித்திரன்
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம்
விலை:र90.00