Sunday, June 16, 2019

சயந்தனின் ஆறாவடு

எழுத்தாளர் சயந்தனின் ஆறாவடு

ஷோபா சக்தி, அகர முதல்வன்,தமிழ் நதி,ஈழ வாணி,தமிழினி என நீளூம் 
எனது ஈழ எழுத்தாளர்களின் வாசிப்புப் பட்டியலில் சமீபத்தில் சயந்தனும் இணைந்திருக்கிறார். 

ஆறாவடு - தமிழீழ விடுதலைப்போர் பின்னணியில் பூத்திருக்கும் மற்றோரு படைப்பு. வாசிப்பனுபவம் என்ற பெயரில் இங்கே முழுக் கதையை பகிர்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. அதனால், கொஞ்சம் மேலோட்டமாகவே பார்க்கலாம். பெரும்பாலும் நெடுங்கதைகளில் ஒரு மையக்கதை என ஒன்றிருக்கும். அதை ஒட்டினார் போல் பல சம்பவங்கள், கிளைக்கதைகள், பாத்திரப்படைப்புகள் என அந்த மையக் கதையை ஒட்டியும் வெட்டியும் செல்லும்படியாகவே புனைவுகள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஆறாவடு நாவலை இப்படி ஒரு சட்டகத்துக்குள் அடைக்க இயலாது. ஆதாரமான ஒரு மையக்கதை. அதுவும் முன்னும் நகரும் வகையில். இடையில் மையக்கதைக்கு நேரடித் தொடர்பில்லாத பல கிளைக்கதைகள் என மாறுபட்ட கதைக் கட்டமைப்பு கொண்ட படைப்பு.  அந்தவகையில் ஆறாவடு இதுவரை நான்  வாசித்த படைப்புகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானதும் கூட.

1987 தொடங்கி 2003 வரையான இரண்டு 'அமைதி' க் காலங்களுக்கு இடையே இந்தக் கதை நகர்கிறது எனும் ஆசிரியர் குறிப்போடு தொடங்கும் இந்தப் புதினத்தின் மையக்கதை, கள்ளத்தோணி ஏறி இத்தாலி செல்ல முயற்சி செய்யும் கதைநாயனின் பயணம் . ஆசிரியரின் மொழியில்

சொல்வதென்றால் அது தோணி அல்ல வள்ளம். மற்றதெல்லாம் கிளைக் கதைகள். படைப்பில் ஊடாக பாயும்  பல கிளைக்கதைகள் காத்தாரமானவை.  நான்கு பக்கங்கள்  இருந்தாலும் கூட ஆழ்ந்தபாத்திரப் படைப்போடு ஆற்றொழுக்கான உரையாடல் வழியாக யதார்த்த அரசியலைச் சொல்லிச் செல்கின்றன. 

அமைதிப்படை, புலிகள் மட்டுமல்லாது அப்போது களத்தில் இருந்த மற்ற தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளை இரத்தமும் சதையுமான மனிதர்கள் வழியாக எழுத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். குறிப்பாக புலிகளை விமர்சிக்கும்  நேரு ஐயா எனும் ஒரு பெரியவர் பாத்திரத்தின் வழியாக முன் வைக்கப்படும் பல கருத்துகள் ஈழ விடுதலையின் முடிவிற்கு விடைதேடும் சாமானிய வாசகர்களுக்கு ஒரு திறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஈழ எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பதலோ என்னவோ படைப்பில் அடர்த்தியான தமிழை எதிர்பார்த்தே உள்ளே நுழைந்தேன். எழுத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆசிரியரின் சுய எள்ளல். போரின் வலிகளைச் சுமந்த படைப்பிலும் கீற்றாக வந்துபோகும் பகடி இயல்பாகவே இருக்கிறது. 

"இரண்டாவது நாள் இவன் மலேசியா பயணமானான். கஸ்டம்சில் பயணம் எதற்கானது என்று கேட்டார்கள். 'பிஸினஸ்' என்றான். 15 நாட்கள் விசாவினைக் குத்தி அனுமதித்தார்கள். அன்றைக்கு மட்டும் இவனுக்குப் பின்னால் பன்னிரண்டு பேர் மலேசியாவிற்குள் பிஸினஸ் செய்ய வந்தார்கள். அவர்கள் அவ்வளவு பேரும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டனர்..."

(பக்கம்-143) "..கண்ணுக்கு முன்னால் முழங்காலுக்கு கீழே, இரத்தம் வழிந்தபடி தசைத் துணுக்குகள் பிய்ந்து தொங்கிய என் காலொன்றைக் கடல் அலைகள் தம்மோடு உள்ளிழுத்தன. அந்தக் காலும் அதன் மேலிருந்த வரிச்சீருடைத் துணியும் எனக்கு சொந்தமாய் சற்றுமுன்னர் வரையிருந்தன. 

எனும் போது நுட்பமான கதைச் சொல்லியாக மிளிர்கிறார். தொடர்ந்து எழுதுங்கள் சயந்தன்!.

மற்றபடி டியூசன்கள், ரியுசன்களாக மண் மணத்தோடு வரும் படைப்பில் ஏனோ துவக்குகள் துப்பாக்கிகளாகி விட்டன எனத் தெரியவில்லை. உணர்வுப்பூர்மான மிகப்பெரும் களத்தில் அழகியலோடு இன்னும் பல படைப்புகளைச் சயந்தனிடமிருந்து எதிர்பார்கிறேன்.

நூல்: ஆறாவடு
ஆசிரியர்: சயந்தன்
பதிப்பகம்: தமிழினி பதிப்பகம் (2012, இரண்டாம் பதிப்பு)
விலை:र140.00

No comments:

Post a Comment