Monday, September 30, 2019

மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -7)

மதிய நிகழ்வில் மலேசிய முனைவர் சபாபதி அவர்களுடைய
மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தான ஆய்வரங்கில் கலந்து கொண்டேன்.

அவருடைய ஆய்வின் தலைப்பு - "மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள்" - Dr. V. Sabapathy

நோக்கம்-    மலேசிய நாட்டுப்புறப் பாடல்களின் தோற்றம் அதன் பின்னணி ஊடாக மலேசிய மண்ணின் மணம், மக்கள் வாழ்வியலைப் பேசுவது.

நமது சமூகத்தில் பிறப்பில் இருந்து இறப்பு வரை  பாடல்களுக்கு குறிப்பிடத்தகுந்த இடம் இருந்திருக்கிறது.  குறிப்பாக  பாட்டாளிகள் எனும்
உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வியல் அனுபவங்களோடு இவைப் பின்னிப் பிணைந்தவை. அந்த வகையில் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் இருந்து  மலேசியக் காடுகளுக்கு கூலிகளாகச் சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க நேர்ந்தபோது தோன்றியப் பாடல்கள் மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

முனைவர் சபாபதி அந்தப் பாடல்களை ஆய்வு நோக்கில் பல கூறுகளில்  மிகச் சிறப்பாக அணுகினார். குறிப்பாக மலேசிய நாட்டுப்புற இலக்கியத்தை ஆய்வு நோக்கில் அணுகி பதிவு செய்ததில் விரிவுரையாளரும் முனைவருமான இரா.தண்டாயுதம் அவர்களுக்கு முக்கிய இடம் இருப்பதைப் பதிவு செய்தார். மலேசிய நாட்டுப்பாடல்களின் தந்தை என்று அழைக்கப்படும் இரா.தண்டாயுதம்  தமிழகத்தில் இருந்து சென்றவர். அவர்  மலேசியப் பல்கலைக் கழகத்தில் பணி செய்த காலகட்டத்தில் இடைவிடாது கள ஆய்வுகள் செய்து, தொகுத்து நாட்டுப் பாடல்களை ஆவணப்படுத்திருக்கிறார். அவர் 1975ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அவருடைய "மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள்" எனும் தொகுப்பு நூல் இந்தத் துறையில் ஓர் ஆவணம் எனக் குறிப்பிட்ட  நண்பர் சபாபதி தான் அவருடைய மாணவர்  என்பதிலும் பெருமிதம் கொண்டார்.

அதுபோல பல நாட்டுப் பாடல்களையும் அவை உருவான சூழல்களையும் விளக்கினார்.
மலேசியச் சூழலில் தனித்துவமாக உருவான இந்தப் பாடல்கள் அந்த எளிய மக்களின் அன்றைய பண்பாட்டு நிலைகள், பழக்கவழக்கங்கள்,
நம்பிக்கைகள், வாழ்வியல் தத்துவங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறன.

மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான இந்தப் பாடல்கள் மலேசிய மண்ணில் வறுமையின் பிடியில் சிக்கி இரவும் பகலும் அல்லலுற்ற அப்பாவி மக்களின் வாழ்வியலில் எழுந்தவை. அவை மலேசியத் தொழிலாளர்களின்
அல்லல்களைத் துயரங்களை அடுத்துவரும் தலைமுறைக்குச் சொல்லும் சோக சாட்சியங்களாக எழுந்து
நிற்கின்றன என்பதே உண்மை.

எனக்கு

நாட்டுப் பாடல்கள் எனும் வாய்மொழி இலக்கியம் மேல் என்றும் ஆர்வம் உண்டு.  அதுமட்டுமல்லாமல் மலேசியாவில் வாழ்ந்தவன் என்ற முறையில் மலேசிய தமிழர்கள் குறித்தும் அவர்களுடைய வாழ்வியல் குறித்தும் நிறைய தெரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறேன். அந்தவகையில் இந்த நிகழ்வு நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்தது.

மாநாட்டில் அறிமுகமான மலேசிய நண்பர் சபாபதி அவர்களைத்  தனியாக சந்தித்து உரையாடும் நல்ல வாய்ப்பும் கிடைத்தது. தமிழக இலக்கியச் சூழல்,
மலேசியத் தமிழர்கள் குறித்த பல விசயங்களைப் பேசினோம். என்னுடைய வனநாயகன் நாவலைப் பெற்றுக்கொண்டவர் கிடைத்த மிகக்  குறுகிய இடைவெளியில் வாசிக்கத் தொடங்கி பாராட்டினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த அன்பும், நன்றியும்.



Saturday, September 21, 2019

பெண்களின் "ஐம்பால்" குறித்து (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -6)

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முந்தைய பதிவு (5) இங்கே

ஞாயிறு அன்று நடந்த காலை நிகழ்ச்சிகளில்  இது கடைசி அமர்வாக இருந்தது.

ஆய்வின் தலைப்பு - "தமிழர் கலைகளில் ஒப்பனைக் கலை குறித்த ஓர் ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை" - சரஸ்வதி விஜயகுமார்

இன்று உலகெங்கும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒப்பனைக் கலை ஆயகலைகள் அறுபத்து நான்கில் ஒன்று. அதற்கான தடங்களைத் தமிழ் இலக்கியங்களில் தேடுவதே இந்த ஆய்வின் நோக்கம்.

குறிப்பாக மேக்கப் எனும் ஒப்பனை, உடை, நகை அலங்காரக் குறிப்புகளை மேற்கோள் காட்டி பேசிய ஆசிரியர் தொழில் முறையில் ஓர் ஒப்பனைக் கலைஞர்.
நகைகளைப் பற்றி பேசிய அவர் கழுத்தணி,  கையணி, விரலணி,  தோளணி,மார்பணி, இடையணி, காலணி என அன்று புழக்கத்தில் இருந்த பல அணிகலன்களைச் சுட்டிக்காட்டினார். சங்ககால இலக்கியத்தில் குறிப்புகள் இன்றி இன்றைய பயன்பாட்டில் இருக்கும் அணிகலன்கள் குறித்த கேள்விக்கு மங்கலநாண் எனும் தாலி , மூக்குத்தி என்று பதில் சொன்னார்.

அதுபோல தமிழகத்தில் உதட்டில் நகையணிந்து அலங்கரிக்கும் பழக்கம் குறித்த கேள்விக்கு 'இல்லை' என பதில் அளித்தவர், அது சீனர்களின் பழக்கமாக இருக்கலாம் என்றார்.








கூடவே  முகம், கண், நுதல், உதடு, விரல் நகங்கள், உள்ளங்கை (மருதாணி),
கூந்தல் போன்ற ஒப்பனைகள் குறித்தும் பேசினார்.

நிகழ்வில்  "ஐம்பால்" எனும் புதிய சொல் எனக்கு அறிமுகமானது. நாம் பள்ளியில் ஆண்பால், பெண்பால், பலர் பால்,ஒன்றன்பால், பலவின் பால் எனப் பால் இலக்கணம் படித்திருக்கலாம். அதற்கும் பெண்களின் கூந்தலுக்கும் என்ன தொடர்பு எனும் தேடுதலில் இறங்கிய போது  "ஐம்பால்"  என்பது ஐந்துவகையான சிகை அலங்காரம்  என்றும். சிலர் "ஐம்பால்" என்பது கூந்தலின் ஐந்து பண்புகளைச் சொல்கிறது என்றும் வாதிடுவது தெரியவந்தது.

உண்மையில் "ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை.." என கலைமகளை வேண்டி உருகினாலும் நமது சமூகத்தில் அனைத்து கலைகளுக்கும்  சம அந்தஸ்து இல்லை என்பதே உண்மை.  குறிப்பாக முடி திருத்துவது, ஒப்பனை போன்ற கலைகளுக்கு. இத்தனைக்கும் கூந்தல் எனும் முடி பற்றி  புராணங்களிலும் இலக்கியங்களிலும்  நம்மிடம் பல குறிப்புகள் குவிந்துகிடக்கின்றன.

அன்று பெண்களின் அழகில் கூந்தலுக்கு மிக முக்கியப் பங்கு இருந்திருக்கிறது. மயில் தோகை, கருமேகம், அருவி... என்றெல்லாம்
கூந்தல் புலவர்களால் நறுமணம் மிகுந்த மயக்கம் தரும் ஒன்றாக ஆராதிக்கப்பட்டிருக்கிறது அவ்வளவு ஏன் கடந்த சில தலைமுறை வரைக் கூட ஆண்கள் கொண்டயிடுவது (குடுமி) நம்மிடம் மிகச் சாதாரணமாக இருந்தது.  அந்த காலத்தில் கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதரைப் பார்த்து  "பாகவதர் மாதிரி முடிவெட்டணும்.." என பலர் திரிந்தது நமக்குத்
தெரிந்த ஒன்றுதான்.

அதுபோல ​பெண்களின் கூந்தலுக்கு இயற்​கையில் மணம் உண்டா? இல்​லையா? எனும் சந்தேகம் பாண்டிய மன்ன்னுக்கு வந்ததாகவும் அதைத் தீர்க்கும் வகையில் சிவனே வந்து கவிதை எழுதி தீர்த்ததாக திருவிளையாடல் படத்தில் ஒரு கதைப் பின்னப்பட்டிருக்கும். அதுபோல மகாபாரதத்தில்
அவமானப்படுத்தப்பட்ட பஞ்சாலி அதற்கு பதிலடியாக துச்சாதனனின் மார்பு குருதியை தன் கூந்தலில் பூசும் வரை தன் கூந்தலை முடியேன் என சபதமிட்டார் என பல குறிப்புகள் நம்மிடம் இருக்கின்றன.

இந்த ஐம்பால் எனும் சொல்லில் பெண் கூந்தலின்  ஐந்து பண்புகள் அடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். அவை 1. கருமை, 2. நெடுமை, 3.மொய்ம்மை (அடர்த்தி), 4.மென்மை, 5.அறன்மை (வெள்ளம் வற்றிய ஆற்று மணலில்  செறிவு படிந்திருப்பது போன்ற தோற்றம்) .

சிலர் , ‘ஐ’ வியப்பு ஆகும் என்பது தொல்காப்பியம் தரும் சூத்திரம். அதனால் ஐம்பால் வியப்புக்குரிய கூந்தல் ஒப்பனை என்றும் சிலர் எடுத்துக்கொள்கிறார்கள்.  இப்படி என்றும்  பெண்களில் கூந்தல் என்றாலே ஐயம் தான் போலிருக்கிறது.

மாதொருபாகன் - One Part Woman

தமிழ் வாசகர்களுக்கு தனியாக அறிமுகம் எதுவும் செய்ய தேவையில்லாத புத்தகம் பெருமாள் முருகனின் மாதொருபாகன்.  இதற்குக் கிடைத்த எதிர்மறை விளம்பரமே  இன்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உதவியிருக்கிறது. 

மாதொருபாகனை பிளாக் கேட் எனும் நியூயார்க் நிறுவனம் One Part Woman (ஒன்பார்ட் உமன்) எனும் பெயரில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டிருக்கிறது. 2018 அக்டோபரில் வெளியான இந்தப் புத்தகம் உள்ளூர் அமெரிக்க நூலகம் வழியாக சென்ற வாரம்  கைகளுக்கு கிடைத்தது.  அனிருத்தன் வாசுதேவன் எனும் அன்பர் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

கதையைப் பற்றி தேவைக்கு அதிகமாகவே
பலர் பேசிவிட்டதால் அதற்குள் போகத்தேவையில்லை. ஆனால், மொழிபெயர்ப்பு குறித்து கொஞ்சம் பேசலாம். 

நம்மிடம் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை அது தமிழின் மிகப்பெரிய சாபக்கேடு எனும் கருத்தை எழுத்தாளர் சாருநிவேதிதா பலமுறை தனது கட்டுரைகளில் புலம்பியிருக்கிறார். அதில் ஒரளவு உண்மை இல்லாமலும் இல்லை.

தமிழில் சிந்திப்பவர்கள் ஆங்கிலத்தில் (மற்ற மொழியில்) நேரடியாக எழுதினாலும் அது பெரும்பாலும் ஆங்கில வாசகர்களின் வரவேற்ப்பைப் பெற்றுவிடுவதில்லை. காரணம் மொழிவளம். குறிப்பாக மேற்குலக வாசகர்களைக் கவர அவர்களுக்கு அணுக்கமான மொழிநடையுடன் சரியான சொற்பிரயோகங்களையும் கடைபிடிக்கவேண்டியிருக்கிறது.
(இந்தியாவில் ஆங்கில வாசிப்பு பற்றி தனியாக பேசவேண்டும்)

அந்நிய படைப்புகள் அப்படியே ஒரளவு சரியாக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டாலும் கிழக்காசிய எழுத்தாளர்களின் மொழி நடை என்பது வேறாகவே இருக்கிறது.  உண்மையில் அந்த நடையே அவர்களை அசல் படைப்பில் இருந்து வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.  அது
மட்டுமல்லாமல் கிழக்காசிய எழுத்தாளர்கள் மேற்குலக வாசர்களைக் கவர அவர்களுக்கு நல்ல எழுத்துநடை தேவை என்பதைத் தாண்டி கலாச்சாரம், கதைக்களம், சிந்தனை என பல தளங்களில் அவர் தங்களது தனித்துவத்தை நிறுவ வேண்டியிருக்கிறது.

அதனாலேயே உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் முரகாமி மேற்கத்திய வாசகர்களைக் கவரவே எழுதுகிறார் எனும் வகையில் அவருடைய எழுத்து too ‘Western’ எனும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பில் வட்டார வழக்கை கொண்டுவருவது சாத்தியமில்லாத ஒன்று. (பக்கம்-146) 'Mapillai, now we can go out for a while, can't we? ' என்ற வரி  'மாப்ள.. நாம போயிட்டு மெதுவா வரலாமில்ல, உனக்கொன்னும் அவசரமில்லயே' என்பதன் மொழிபெயர்ப்பு. இதில் மாப்ள என்பது வாசகர்களின் ஊகத்திற்கு விடப்படும்.  அதுபோல 'ஆனால், அன்றைக்குபோல மோசமான உறவு என்றும் நடந்ததில்லை'.  என்பது ஆங்கிலத்தில் 'The sex they had that night was the worst they had ever' என்றிருக்கிறது.  இது மேலோட்டமாக சரி எனத் தோன்றினாலும் அமெரிக்க வாசகர்களுக்கு இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும்.

இப்படி மாதொருபாகனின் மொழிபெயர்ப்பு நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போல இல்லாவிட்டாலும் உறுத்தாத எளிய நடையில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.


தலைப்பு:One Part Woman
ஆசிரியர்:Perumal Murugan
பக்கங்கள்: 288
வெளியீடு: Grove Press, Black Cat (October 9, 2018)
ISBN: 0802128807
விலை:$10.87

Friday, September 6, 2019

தொல்காப்பியர் காலத்தில் இருந்த அடிமைகள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -5)

இதன் முந்தைய பதிவு இங்கே..

சூலை 7, ஞாயிற்றுக் கிழமை காலையில் கலந்துகொண்ட இரண்டாவது நிகழ்வு

2. ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வுச் சான்றுகளும் பழங்காலத் தமிழர் நாகரிகமும் - Dr. Mrs.S.Sridas

ஆய்வின் நோக்கம்-  மேலே குறிப்பிடப்பட்டுள்ள அகழாய்வில் இருந்து பண்டைய தமிழர் நாகரிகத்தை  பொருளாதாரம், சமூகம், அரசியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தல்

தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகம் குறித்து அறிய உதவும் மூன்று
முக்கிய தொல்லியல் களங்கள் குறித்து பேசினார்கள்.

1. ஆதிச்சநல்லூர்- இது தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ளது.

2. பொருந்தல்-  இது கோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள சிறிய ஊர்.

3. கீழடி - மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர்கலாச்சாரத்தை வெளிக்கொணர்கிறது. சிகாகோவில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் மையக்கருத்தே
” கீழடி நம் தாய் மடி”  என்பதாகும்.

விழா அரங்கில் கீழடி தொன்மைக்கு வலு சேர்க்கும் வகையில் பல படிங்களையும், ஆவணங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். சில புகைப்படங்கள் இங்கே.

அமர்வில் பகிரப்பட்ட சில தகவல்கள் :

வாணிபத்தை உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் எனப் பிரித்து கி.மு 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.


அப்போதைய முக்கியமான துறைமுகங்கள்- முசிறி, கொற்கை,  பட்டினம் (மாமல்லபுரம்), காவிரிப்பூம்பட்டினம். அவற்றுக்கும் மேலை நாடுகளுக்கும் கடல் வழி இருந்த தொடர்புகள்.

பண்டைய புகழ்பெற்ற வணிக நகரங்கள் - காஞ்சி, கடல்மல்லை, அரிக்கமேடு, தகடூர், செங்கம், கொடுமணல்,மதுரை, அழகன்குளம்.




தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் அடிமைகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது கேள்விப்படாத புதிய தகவலாக இருந்தது. அதற்குச் சங்ககால இலக்கியத்தரவுகளும் இருக்கிறதாம்.

இதற்கு ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டவரின் மண்டைஓடு வலுசேர்க்கும் என நினைக்கிறேன்.

அதுபோல  ஆதிச்சநல்லூர், பொருந்தல்
அகழ் ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட மக்கிய நெல்
ஆதாரம் இப்போது இந்திய வரலாற்றையே மாற்றி எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுபோல மண்பாண்டங்களில் உள்ள பிராமி எழுத்துகள் தமிழின் தொன்மையைக் காட்டுகிறது.







மக்கள் வாழ்விடம் பற்றிய புரிதல்கள்









பொருந்தல் குறித்து..








"தமிழர் கலைகளில் ஒப்பனைக் கலை குறித்த ஓர் ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை " - அடுத்த பதிவில் (6)

ஹரிக்கேன் டோரியன்

ஹரிக்கேன் டோரியனுக்கு பிறகு முகநூல் உள்பெட்டிக்கு வந்து அன்போடு நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நாங்கள் குடும்பத்தோடு நலமாக இருக்கிறோம்.  ஆமாம், இந்த ஆண்டு ஃபிளாரிடா தப்பித்தது.

ஆனால், ஹரிக்கேன் டோரியன் (Dorian) அசுரபலத்தோடு அட்லாண்டிக்கின் பஹாமாஸ் தீவைத் தாக்கி இருக்கிறது. கேட்டகிரி- ஐந்து ( >250 கி.மீ)
வேகத்தோடு கரையைக் கடந்த பேய் காற்று  பலத்த உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சுற்றுலாவை நம்பி இருக்கும் அந்தத் தீவிற்க்கு இது பேரிடியாக இருக்கும். மக்கள் உணவு,குடிநீர் போதிய மருத்துவ வசதி இன்றி தவிக்கிறார்களாம்.

அதிஷ்டவசமாக அங்கிருந்து  ஃபிளாரிடாவுக்குள் நுழையாமல் டோரியன்
கடல்வழியாகவே அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையோர மாநிலங்களை நோக்கி  இப்போது நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஹரிக்கேன் நேரடியாக  ஃபிளாரிடாவுக்குள் சூராவளியாக நுழையா விட்டாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை  இருந்தது.
கடற்கரையோரங்களில் புயல்காற்றின் வேகத்தையும் எங்களால் உணர

முடிந்தது.  முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்திருந்ததால் பெரிய குழப்பமில்லாமல் இருந்தது.

மழையில் நனைந்தபடியே திங்கள் கிழமை குடும்பத்தோடு கடற்கரைக்கு போய் பார்த்தோம்.  இதுவரைப் பார்த்திராத ஆக்ரோசமான சீற்றத்தோடு கடல் அலைகள் பொங்கி உயர்ந்து எழுந்தன.  வெள்ளை வெளேரேன உயர்ந்த அந்த அலைகளின் உயரம் பதினைந்து இருபது அடிக்கு குறைவில்லாமல் இருக்கும்.

புயலால் மின்சாரம் இழந்த 1 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிக்கு கடந்த  இரண்டு நாட்களாக
தொழில்நுட்ப உதவி செய்துகொண்டிருந்தேன். அடுத்த  ஹரிக்கேன் சீசன் வரும் வரை நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறேன். இங்கு ஹரிக்கேன் சீசன் ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை.

படங்கள்- நன்றி இணையம்