Saturday, September 21, 2019

பெண்களின் "ஐம்பால்" குறித்து (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -6)

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முந்தைய பதிவு (5) இங்கே

ஞாயிறு அன்று நடந்த காலை நிகழ்ச்சிகளில்  இது கடைசி அமர்வாக இருந்தது.

ஆய்வின் தலைப்பு - "தமிழர் கலைகளில் ஒப்பனைக் கலை குறித்த ஓர் ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை" - சரஸ்வதி விஜயகுமார்

இன்று உலகெங்கும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒப்பனைக் கலை ஆயகலைகள் அறுபத்து நான்கில் ஒன்று. அதற்கான தடங்களைத் தமிழ் இலக்கியங்களில் தேடுவதே இந்த ஆய்வின் நோக்கம்.

குறிப்பாக மேக்கப் எனும் ஒப்பனை, உடை, நகை அலங்காரக் குறிப்புகளை மேற்கோள் காட்டி பேசிய ஆசிரியர் தொழில் முறையில் ஓர் ஒப்பனைக் கலைஞர்.
நகைகளைப் பற்றி பேசிய அவர் கழுத்தணி,  கையணி, விரலணி,  தோளணி,மார்பணி, இடையணி, காலணி என அன்று புழக்கத்தில் இருந்த பல அணிகலன்களைச் சுட்டிக்காட்டினார். சங்ககால இலக்கியத்தில் குறிப்புகள் இன்றி இன்றைய பயன்பாட்டில் இருக்கும் அணிகலன்கள் குறித்த கேள்விக்கு மங்கலநாண் எனும் தாலி , மூக்குத்தி என்று பதில் சொன்னார்.

அதுபோல தமிழகத்தில் உதட்டில் நகையணிந்து அலங்கரிக்கும் பழக்கம் குறித்த கேள்விக்கு 'இல்லை' என பதில் அளித்தவர், அது சீனர்களின் பழக்கமாக இருக்கலாம் என்றார்.








கூடவே  முகம், கண், நுதல், உதடு, விரல் நகங்கள், உள்ளங்கை (மருதாணி),
கூந்தல் போன்ற ஒப்பனைகள் குறித்தும் பேசினார்.

நிகழ்வில்  "ஐம்பால்" எனும் புதிய சொல் எனக்கு அறிமுகமானது. நாம் பள்ளியில் ஆண்பால், பெண்பால், பலர் பால்,ஒன்றன்பால், பலவின் பால் எனப் பால் இலக்கணம் படித்திருக்கலாம். அதற்கும் பெண்களின் கூந்தலுக்கும் என்ன தொடர்பு எனும் தேடுதலில் இறங்கிய போது  "ஐம்பால்"  என்பது ஐந்துவகையான சிகை அலங்காரம்  என்றும். சிலர் "ஐம்பால்" என்பது கூந்தலின் ஐந்து பண்புகளைச் சொல்கிறது என்றும் வாதிடுவது தெரியவந்தது.

உண்மையில் "ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை.." என கலைமகளை வேண்டி உருகினாலும் நமது சமூகத்தில் அனைத்து கலைகளுக்கும்  சம அந்தஸ்து இல்லை என்பதே உண்மை.  குறிப்பாக முடி திருத்துவது, ஒப்பனை போன்ற கலைகளுக்கு. இத்தனைக்கும் கூந்தல் எனும் முடி பற்றி  புராணங்களிலும் இலக்கியங்களிலும்  நம்மிடம் பல குறிப்புகள் குவிந்துகிடக்கின்றன.

அன்று பெண்களின் அழகில் கூந்தலுக்கு மிக முக்கியப் பங்கு இருந்திருக்கிறது. மயில் தோகை, கருமேகம், அருவி... என்றெல்லாம்
கூந்தல் புலவர்களால் நறுமணம் மிகுந்த மயக்கம் தரும் ஒன்றாக ஆராதிக்கப்பட்டிருக்கிறது அவ்வளவு ஏன் கடந்த சில தலைமுறை வரைக் கூட ஆண்கள் கொண்டயிடுவது (குடுமி) நம்மிடம் மிகச் சாதாரணமாக இருந்தது.  அந்த காலத்தில் கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதரைப் பார்த்து  "பாகவதர் மாதிரி முடிவெட்டணும்.." என பலர் திரிந்தது நமக்குத்
தெரிந்த ஒன்றுதான்.

அதுபோல ​பெண்களின் கூந்தலுக்கு இயற்​கையில் மணம் உண்டா? இல்​லையா? எனும் சந்தேகம் பாண்டிய மன்ன்னுக்கு வந்ததாகவும் அதைத் தீர்க்கும் வகையில் சிவனே வந்து கவிதை எழுதி தீர்த்ததாக திருவிளையாடல் படத்தில் ஒரு கதைப் பின்னப்பட்டிருக்கும். அதுபோல மகாபாரதத்தில்
அவமானப்படுத்தப்பட்ட பஞ்சாலி அதற்கு பதிலடியாக துச்சாதனனின் மார்பு குருதியை தன் கூந்தலில் பூசும் வரை தன் கூந்தலை முடியேன் என சபதமிட்டார் என பல குறிப்புகள் நம்மிடம் இருக்கின்றன.

இந்த ஐம்பால் எனும் சொல்லில் பெண் கூந்தலின்  ஐந்து பண்புகள் அடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். அவை 1. கருமை, 2. நெடுமை, 3.மொய்ம்மை (அடர்த்தி), 4.மென்மை, 5.அறன்மை (வெள்ளம் வற்றிய ஆற்று மணலில்  செறிவு படிந்திருப்பது போன்ற தோற்றம்) .

சிலர் , ‘ஐ’ வியப்பு ஆகும் என்பது தொல்காப்பியம் தரும் சூத்திரம். அதனால் ஐம்பால் வியப்புக்குரிய கூந்தல் ஒப்பனை என்றும் சிலர் எடுத்துக்கொள்கிறார்கள்.  இப்படி என்றும்  பெண்களில் கூந்தல் என்றாலே ஐயம் தான் போலிருக்கிறது.

No comments:

Post a Comment