
உரையின் தலைப்பு "தித்திக்கும் வாசிப்பனுபவம்".
இந்தத் தகவல் தொடர்பு காலத்திலும் வாசிப்பு நமக்கு ஏன் அவசியமாகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு பேசினேன்.
பார்த்த அனைவரும் பயனுள்ள 45 நிமிடங்கள் என்றே சொன்னார்கள். குறிப்பாக, பலர் கேள்வி-பதில் பகுதியைப் விரும்பியதாகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் சொன்னார்கள். நிகழ்வுக்குப் பின் பலர் மின்னஞ்சலும், வாட்ஸ்-அப்-லும் தொடர்பு கொண்டார்கள். கூடவே பல நூறு புதிய நட்பு அழைப்புகள்.
தனிப்பட்ட முறையில் எனக்கும் நேரலை ஓரளவு திருப்திகரமாகவே இருந்தது. சில விடுபடல்கள் இருந்தாலும், நான் சொல்லவந்த விசயங்களைச் சொல்லிவிட்டதாக நினைக்கிறேன் . தொடக்கத்தில் சொன்னது போல கருத்துகளை, உணர்வுகளைப் பெரும்பாலும் தட்டச்சு செய்து பழகியவர்களுக்கு நேரலை என்பது சற்று புது அனுபவமாகவே இருக்கும். ஏன் மேடையில் பேசி பேசிப் பழகியவர்களுக்கே கூட நேரலை என்பது கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும். ஆனால், அதற்காக அச்சப்படத் தேவையில்லை எனும் நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது.
நிகழ்ச்சிக்கு எழுதி வைத்து வரிக்கு வரி வாசிப்பது போல இல்லாமல் முன் தயாரிப்பாக சில முக்கிய விசயங்களை மட்டும் குறிப்பாக எடுத்து வைத்திருந்தேன். அலுவலகத்தில் வேலை பளு சற்று அதிகமாக இருந்ததால் அதையும் முதல் நாள் இரவு மட்டுமே செய்ய முடிந்தது. முக்கியமாக இந்த சந்திப்பில் என்னைப் பற்றி அதிகம் பேசாமல் வாசிப்பைக் அறிமுகப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதே சமயத்தில், தனிப்பேச்சு 30 நிமிடங்களைத் தாண்டாமல் முக்கியமாக பார்ப்பவர்களைத் தூங்கவைக்காமல் இருக்க வேண்டும் என்பதிலும் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.
நிகழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட நேர அவகாசத்துக்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை நானே விதித்துக் கொண்டதால் தான் தமிழ் நூல்கள் பற்றி விரிவாக பேச இயலவில்லை. மற்றபடி வேறொன்றும் இல்லை. அதனால் என்ன, இன்னொரு சந்தர்ப்பத்தில் தமிழ் புத்தக வாசிப்பு அனுபவத்தைப் பற்றி தனியாகவே பேசலாம். அதுபோல, என்னுடைய நட்பு வட்டத்திலும் பல மிகச் சிறந்த ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் தனிதனியாக பதிவுகளோ இல்லை நேரலையோ செய்யவேண்டும். அப்படிச் செய்வதென்றால் நான் முதலில் தமிழ் அறிஞர் கவிக்கோ ஞானச்செல்வன் ஐயா அவர்களிடமிருந்துதான் தொடங்கவேண்டும். அவர் பல்லாண்டுகள் ம.பொ.சி அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர் போன்ற பல பெருமைகளுக்குரியவர்.
நேரலையில் ஓஷோ எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் அப்போது சட்டென நினைவுக்கு வரவில்லை. நேரலை முடிந்தவுடன் சரியாக நினைவுக்கு வந்தது. அந்தப் புத்தகம் Emotional Wellness: Transforming Fear, Anger, and Jealousy into Creative Energy. அலைபாயும் மனத்தைப் பக்குவப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒருவர் மட்டும் "நீங்கள் பேசும்போது சேரை மட்டும் கொஞ்சம் ஆட்டாமல் பேசுங்களேன்" என்ற ஆலோசனை சொன்னார். ஒரு தோழி இரண்டு மூன்று புத்தகங்கள் ஒருசேர வாசிப்பதன் சாதக பாதகங்களைப் பற்றி வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பி இருந்தார்.
இதைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.
முழுமையான உரை இங்கே