Wednesday, October 21, 2020

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

மருத்துவம், கணினி போன்ற துறைசார் பின்புலத்தில் இருந்து தமிழில் எழுதபவர்கள் குறைவு. அதில் புனைவு எழுதபவர்கள் குறைவு.அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையில் இருந்து புனைவு எழுத வருபவர்கள் என்பது மிகக் குறைவு.

அந்த வகையில், மருத்துவர் மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய, ''பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்''  சமீபத்தில் கண்ணில் பட்டது.  அமேசான் கிண்டிலில் வாசித்தேன்.

ஒரு சாமானியன் தனது வாழ்க்கையை வாழ்வது என்பது ஒரு வெள்ளைத் தாளில் 'வாழ்க்கை' என எழுதி அழைத்துவிடும் விளையாட்டு அல்ல. அவன் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்குக் கிடைத்த இந்த மனித இருப்பை அவன் மிகுந்த பிரயத்தனப்பட்டுத்தான் பயணித்து கடக்கவேண்டி இருக்கிறது. பிறப்புக்கும், இறப்புக்குமான இந்தப் பயணத்தில் தான் எத்தனை துயரம் ?  எத்தனை துரோகங்கள், இடர்பாடுகள், கயமைகள் .. இவற்றை எல்லாம் அவன் சகித்துக்கொண்டுதான் இந்த வாழ்வை வாழ வேண்டியிருக்கிறது.

இந்த வாழ்வை எதிர்கொள்ள விரும்பாதவர்கள், இந்தக் கீழ்மைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புபவர்கள் தற்கொலை எனும் பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.  

இதுபோன்றதொரு தற்கொலையில் தான் மயிலன் ஜி சின்னப்பனின்


‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ துவங்குகிறது.  அந்த துர்மரணத்தின் மறுபக்கத்தை ஒரு நண்பன் அறிந்து கொள்வது தான் கதை. உண்மையில், வாழ்க்கையில் ஒருமுறையேனும் தற்கொலை எண்ணம் ஏற்படாதவர்கள் வெகு குறைவு என்பதே நிதர்சனம்.

மயிலனின் இந்தப் படைப்பு மருத்துவத்துறையின் உள்ளிருந்து இயங்குபவர்களின் சிக்கல்களைப் பல அடுக்குகளில் சொல்லிச் செல்கிறது . மருத்துவத் துறையை வெளியில் இருந்துப் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அதனுள் நடக்கும் பல விசயங்கள் அதிர்ச்சி தருகின்றன.

கதை துப்பறியும் நாவல்களைப் போல மேலோட்டமாக இல்லாமல் தத்துவார்த்தமான விசயங்களையும் அலசுகிறது. உண்மையில், ஒரு தற்கொலை என்பது மரணிப்பவர்களுக்குப் பூரண விடுதலையைத் தந்து விடுவது இல்லை. மரணித்தவனை அதுவரைத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தங்கள் நினைவுகளின் வழியாக ஏதோ ஒருவிதத்தில் அவனைப் பின்தொடரவே செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கீழ்மையான எண்ணங்களின் ஊடாகவே அவனுக்குத் துலக்கம் அளிக்கிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லும்  கதை.

முதல் படைப்புகே உரிய ஓரிரு குறைகள் இருந்தாலும் (எ.டு.  இறுதியில், இணைப்பாக ஆசிரியர் 'ஆசிரியராக' தன்மையில் சொல்லி இருக்கும் சில அத்தியாயங்கள். கண்ணில் படும் எழுத்துப் பிழைகள் -இது மயிலனின் தவறல்ல. இது பதிப்பக வேலை

மற்றபடி,  'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' மூழமாக தமிழ் எழுத்துலகுக்கு மயிலன் ஜி சின்னப்பன் எனும் ஒரு சிறந்த படைப்பாளர் கிடைத்திருக்கிறார் எனத் தயங்காமல் சொல்லலாம். வாழ்த்துகள் மயிலன் !

Saturday, October 10, 2020

ஸீரோ டிகிரி பப்ளிஷார்

எழுத்தாளர் சாருவின் எக்ஸைல்  MARGINAL MAN எனும் பெயரில் ஆங்கிலப் புத்தகமாக அமேசானில் (amazon.com) கிடைக்கிறது. வாசிக்கும் பழக்கம் உள்ள ஒரு அமெரிக்க நண்பருக்குச் சமீபத்தில் வாங்கி பரிசளித்தேன். பாராட்டினார்.



சரளமான மொழிபெயர்ப்பு, தரமான தாள், குறைவான எடை, அழகிய அட்டைப்படம் என மிகவும் நேர்த்தியான புத்தக வடிவமைப்பு.  மற்ற மலிவு விலை புத்தகங்கள் போல் இல்லாமல் அமெரிக்காவில்  நேரடியாகத் தயாராகும் புத்தகத் தரத்துக்குச் சற்றும் குறைவில்லாமல் ராம்ஜி இதைப் கொண்டுவந்திருக்கிறார்.  வாழ்த்துகள் ராம்ஜி !

பொதுவாக,  தமிழ்சூழலில் எழுத்தாளருக்கு உரிய அங்கீகாரம் இல்லை என தொடர்ந்து பேசுகிறோம். சரி,  மொழிபெயர்பாளர்களுக்கு ? அவர்களுக்கு  எழுத்தாளர்களுக்குத் தரப்பட்ட இடம் கூட இல்லை என்கிறோம். 
சரி,  எடிட்டிங் எனும் பிரதி மேம்படுத்துபவருக்கு ? அட்டை வடிவமைப்பாளர் ?  புரூப் ரீடர் எனும் மெய்ப்பு பார்ப்பவர் ?  இப்படித் தமிழ் பதிப்புத்துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு துறை என்ற பேச்சே பொதுவாக இருக்கிறது. 

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் ( இருந்தாலும் அவற்றை முதன்மைப்படுத்தாமல்) பலர் பதிப்புத்துறையில் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய தனிமனித உழைப்பைத் தாண்டி மொழி மீதான பற்றினால் நிதி முதலீடு செய்து பல சிரமங்களைக் கடந்து புத்தகங்களைக் கொண்டுவருகிறார்கள். இன்று   "indie" படைப்புகள் மின்னூல்களாக வந்தாலும் பதிப்பகங்களின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.

அதுவும் மொழிபெயர்ப்பு படைப்புகள் என்றால் அதற்கான உழைப்பு என்பது நேரடி வெளியீடுகளை விட இருமடங்காகிறது. அந்த வேலையை ஸீரோ டிகிரி பப்ளிஷார் (எழுத்து பிரசுரம், www.zerodegreepublishing.com)  மிகச் சிறப்பாகச் செய்துவருகிறார்கள். வாழ்த்துகள் !!

Monday, October 5, 2020

வனநாயகன் குறித்து-17 (சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று)

"வனநாயகன்"  சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று என  Good Reads தளத்தில் வாசகர் மணிகண்டன்(Mo Manikandan) சொல்லியிருக்கிறார். கூடவே ஆங்கிலத்தில் மதிப்புரையோடு, Must read! எனக் குறிப்பிட்டு  5 நட்சத்திர மதிப்பீடும் செய்திருக்கிறார்.  நண்பருக்கு நன்றி சொல்லுவோம்.

//

Very interesting novel that talks about different aspects of "onsite job" or "foreign job" of technical professionals. The author touches Malaysia's geography, linguistics, culture, politics and Malaysian Tamil peoples life along with the story without boring. The corporate politics, office politics, journalism, environmental aspects all are talked through dialogues. The mystery of twists are kept until the end. Must read novel. New generation Tamil novels are fresh, exciting and more relevant to our modern IT lifestyle. Amazon kindle is a brilliant platform for such attempts. Bravo

Lately i wanted to mention that, This is a contemporary immigration fiction! Genre which is not so many in tamil. The one I remember is pa.singaram's "puyalile oru thoni" & "kadaluku appaal" (historical immigration fiction though). Must read!

//


புத்தகத்தை இணையம் வழியாக வாங்க


Sunday, October 4, 2020

350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மச் சாவு

ஓராயிரம் யானை கொன்றால் பரணி என வீரத்தின் பெயரால் அன்று  நம்நாட்டில் பல்லாயிரம் யானைகள் அழிந்தன. பிறகு ஆங்கிலேயர்கள்  காலத்திலும் வேட்டை மோகத்தால் பல்லாயிரக்கணக்கில் யானைகள் அழிந்தன. 




இப்போதும் நாம் பெரிதாகத் திருந்திவிடவில்லை.  யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுகிறோம். காடுகளை அழித்து விவசாய நிலங்களாக்குகிறோம். நீராதாரம் தேடி வரும் யானைகளைக் கூட வெடி வைத்துக் கொல்கிறோம். அத்தோடு விடாமல் காட்டில் மிச்சமிருக்கும் சொற்ப யானைகளையும் கூட அதன் தந்தங்களுக்காகவும், அடிமை வேலை செய்யவும் நாம் விரட்டிக்கொண்டு தான் இருக்கிறோம். 

நமது ஆசிய யானைகளின் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளில் மட்டும்   50 சதவிகிதமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள். இன்று உலக அளவில் சுமார்  40,000 ஆசிய யானைகள் மட்டுமே வனங்களில் எஞ்சியிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை இந்தியாவில் தான் இருக்கின்றன என்று வேண்டுமானால் நாம் கொஞ்சம் ஆறுதல் கொள்ளலாம்.

அதுபோல, ஆப்ரிக்கக் கண்டத்தில்  போட்ஸ்வானாவில் தான் அதிக அளவு யானைகள் (ஆப்பிரிக்க) இருக்கின்றன. அங்கே கடந்த மே, ஜூன், ஜூலை வரையான 3 மாதத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றன. 

இது குறித்து நடந்த விசாரணையின் முடிவில் யானைகள் நச்சுத்தன்மை உடைய நீரை அருந்தியதால் மரணமடைந்திருக்கின்றன என


அறிவித்திருக்கிறார்கள். கூடவே, இறந்த யானைகளின் தந்தங்கள் அப்படியே  இருப்பதால் இது  மனிதவேட்டை இல்லை என்பதை அரசு தரப்பில்  உறுதி செய்திருக்கிறார்கள். 

ஆனால், மற்ற காட்டு விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் யானைகள் மட்டும் இப்படிப் பரிதாபமாக இறந்திருக்கிறன. அதனால், இந்த விவகாரம் தற்போது சர்வதேச கவனம் பெற்று விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, மற்ற விலங்குகள் போல் அல்லாமல் யானைகள் மட்டுமே மனிதர்களின் விளைநிலங்களைத் தேடிப் போகும் குணம் கொண்டது என்பதை இங்கே வனவிலங்கு ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.


செய்தி இணைப்பு:

https://www.cnn.com/2020/09/21/africa/botswana-elephant-deaths-intl/index.html