மருத்துவம், கணினி போன்ற துறைசார் பின்புலத்தில் இருந்து தமிழில் எழுதபவர்கள் குறைவு. அதில் புனைவு எழுதபவர்கள் குறைவு.அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையில் இருந்து புனைவு எழுத வருபவர்கள் என்பது மிகக் குறைவு.
அந்த வகையில், மருத்துவர் மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய, ''பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்'' சமீபத்தில் கண்ணில் பட்டது. அமேசான் கிண்டிலில் வாசித்தேன்.
ஒரு சாமானியன் தனது வாழ்க்கையை வாழ்வது என்பது ஒரு வெள்ளைத் தாளில் 'வாழ்க்கை' என எழுதி அழைத்துவிடும் விளையாட்டு அல்ல. அவன் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்குக் கிடைத்த இந்த மனித இருப்பை அவன் மிகுந்த பிரயத்தனப்பட்டுத்தான் பயணித்து கடக்கவேண்டி இருக்கிறது. பிறப்புக்கும், இறப்புக்குமான இந்தப் பயணத்தில் தான் எத்தனை துயரம் ? எத்தனை துரோகங்கள், இடர்பாடுகள், கயமைகள் .. இவற்றை எல்லாம் அவன் சகித்துக்கொண்டுதான் இந்த வாழ்வை வாழ வேண்டியிருக்கிறது.
இந்த வாழ்வை எதிர்கொள்ள விரும்பாதவர்கள், இந்தக் கீழ்மைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புபவர்கள் தற்கொலை எனும் பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.
இதுபோன்றதொரு தற்கொலையில் தான் மயிலன் ஜி சின்னப்பனின்
‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ துவங்குகிறது. அந்த துர்மரணத்தின் மறுபக்கத்தை ஒரு நண்பன் அறிந்து கொள்வது தான் கதை. உண்மையில், வாழ்க்கையில் ஒருமுறையேனும் தற்கொலை எண்ணம் ஏற்படாதவர்கள் வெகு குறைவு என்பதே நிதர்சனம்.
மயிலனின் இந்தப் படைப்பு மருத்துவத்துறையின் உள்ளிருந்து இயங்குபவர்களின் சிக்கல்களைப் பல அடுக்குகளில் சொல்லிச் செல்கிறது . மருத்துவத் துறையை வெளியில் இருந்துப் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அதனுள் நடக்கும் பல விசயங்கள் அதிர்ச்சி தருகின்றன.
கதை துப்பறியும் நாவல்களைப் போல மேலோட்டமாக இல்லாமல் தத்துவார்த்தமான விசயங்களையும் அலசுகிறது. உண்மையில், ஒரு தற்கொலை என்பது மரணிப்பவர்களுக்குப் பூரண விடுதலையைத் தந்து விடுவது இல்லை. மரணித்தவனை அதுவரைத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தங்கள் நினைவுகளின் வழியாக ஏதோ ஒருவிதத்தில் அவனைப் பின்தொடரவே செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கீழ்மையான எண்ணங்களின் ஊடாகவே அவனுக்குத் துலக்கம் அளிக்கிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லும் கதை.
முதல் படைப்புகே உரிய ஓரிரு குறைகள் இருந்தாலும் (எ.டு. இறுதியில், இணைப்பாக ஆசிரியர் 'ஆசிரியராக' தன்மையில் சொல்லி இருக்கும் சில அத்தியாயங்கள். கண்ணில் படும் எழுத்துப் பிழைகள் -இது மயிலனின் தவறல்ல. இது பதிப்பக வேலை)
மற்றபடி, 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' மூழமாக தமிழ் எழுத்துலகுக்கு மயிலன் ஜி சின்னப்பன் எனும் ஒரு சிறந்த படைப்பாளர் கிடைத்திருக்கிறார் எனத் தயங்காமல் சொல்லலாம். வாழ்த்துகள் மயிலன் !
No comments:
Post a Comment