Sunday, October 4, 2020

350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மச் சாவு

ஓராயிரம் யானை கொன்றால் பரணி என வீரத்தின் பெயரால் அன்று  நம்நாட்டில் பல்லாயிரம் யானைகள் அழிந்தன. பிறகு ஆங்கிலேயர்கள்  காலத்திலும் வேட்டை மோகத்தால் பல்லாயிரக்கணக்கில் யானைகள் அழிந்தன. 




இப்போதும் நாம் பெரிதாகத் திருந்திவிடவில்லை.  யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுகிறோம். காடுகளை அழித்து விவசாய நிலங்களாக்குகிறோம். நீராதாரம் தேடி வரும் யானைகளைக் கூட வெடி வைத்துக் கொல்கிறோம். அத்தோடு விடாமல் காட்டில் மிச்சமிருக்கும் சொற்ப யானைகளையும் கூட அதன் தந்தங்களுக்காகவும், அடிமை வேலை செய்யவும் நாம் விரட்டிக்கொண்டு தான் இருக்கிறோம். 

நமது ஆசிய யானைகளின் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளில் மட்டும்   50 சதவிகிதமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள். இன்று உலக அளவில் சுமார்  40,000 ஆசிய யானைகள் மட்டுமே வனங்களில் எஞ்சியிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை இந்தியாவில் தான் இருக்கின்றன என்று வேண்டுமானால் நாம் கொஞ்சம் ஆறுதல் கொள்ளலாம்.

அதுபோல, ஆப்ரிக்கக் கண்டத்தில்  போட்ஸ்வானாவில் தான் அதிக அளவு யானைகள் (ஆப்பிரிக்க) இருக்கின்றன. அங்கே கடந்த மே, ஜூன், ஜூலை வரையான 3 மாதத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றன. 

இது குறித்து நடந்த விசாரணையின் முடிவில் யானைகள் நச்சுத்தன்மை உடைய நீரை அருந்தியதால் மரணமடைந்திருக்கின்றன என


அறிவித்திருக்கிறார்கள். கூடவே, இறந்த யானைகளின் தந்தங்கள் அப்படியே  இருப்பதால் இது  மனிதவேட்டை இல்லை என்பதை அரசு தரப்பில்  உறுதி செய்திருக்கிறார்கள். 

ஆனால், மற்ற காட்டு விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் யானைகள் மட்டும் இப்படிப் பரிதாபமாக இறந்திருக்கிறன. அதனால், இந்த விவகாரம் தற்போது சர்வதேச கவனம் பெற்று விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, மற்ற விலங்குகள் போல் அல்லாமல் யானைகள் மட்டுமே மனிதர்களின் விளைநிலங்களைத் தேடிப் போகும் குணம் கொண்டது என்பதை இங்கே வனவிலங்கு ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.


செய்தி இணைப்பு:

https://www.cnn.com/2020/09/21/africa/botswana-elephant-deaths-intl/index.html



2 comments: