Saturday, October 30, 2021

வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கிறதா? - லேனா தமிழ்வாணன்

யூ-டியூபின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சித்ரா லட்சுமணன் திரைத்துறையோடு நின்றுவிடாமல் தற்போது "சோசியல் டாக்கீஸ் (Social Talkies)" என்ற பெயரில்  மற்ற துறை ஆளுமைகளையும் சந்தித்து வருகிறார்.  நல்ல அவசியமானதொரு முன்னெடுப்பு .

கடந்தவாரம் எழுத்தாளர் தமிழ்வாணனின் மூத்த புதல்வர் லேனா தமிழ்வாணனை சித்ரா  நேர்காணல் செய்திருந்தார். நிகழ்ச்சி வழக்கம் போல குழப்பங்கள் எதுவும் இல்லாமல் மிகக் கண்ணியமாகத் தெளிவாக இருந்தது. பல பயனுள்ள கேள்விகள்.  நிறைவாக இருந்தது. முக்கியமாக எழுத்துத் துறை பற்றியும், இணைய எழுத்து குறித்து லேனா மிகச் சரியாக அவதானித்து இருக்கிறார்.

அவருடைய பார்வையில், இன்று தமிழில் எழுத  மிகச் சரியான களம் பிளாக் (blog) எனும் வலைத்தளத்தைக் குறிப்பிட்டார். ஏனோ சமூக ஊடகங்களைத் தவிர்த்து விட்டார். (நம்பிக்கை இல்லை ? ) . அவரைப் போல வலைத்தளங்களை விரும்பும் பலருக்கு தமிழ்ச்சரம் (Tamilcharam) எனும் வலைத்திரட்டி இருப்பது குறித்து தெரியுமா எனத் தெரியவில்லை. அவரைத் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் பயன்படும்.


இல்லை என்றால் விடுங்கள். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த பெட்னா நிகழ்ச்சியில் பார்த்துக் கொள்ளலாம்.  சிகாகோவில்  கடந்த முறை சந்தித்தபோது அடுத்த முறை வர முயற்சி செய்கிறேன் எனச் சொல்லி இருக்கிறார்.

வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கிறதா? என்ற கேள்விக்கு  நேர்மையாக பதில் சொல்லி இருந்தார்.  நான் இரசித்த இன்னொரு விசயம் நிகழ்ச்சியின் இறுதியில் தன்னைப் போல தனக்குப் பிறகு தன்னுடைய வாரிசுகள் தனது எழுத்தையும் பதிப்பகத்தையும் ஏற்று நடத்த முடியாத சூழல் இருப்பதை மிக நேர்மையாக ஒத்துக்கொண்டது.

நிகழச்சிக்கான முகவரி:

https://www.youtube.com/watch?v=iUJyvCA1BYA&t=47s

Tuesday, October 19, 2021

சோசியல் மீடியா- இது நம்ம பேட்டை

கடந்த ஒராண்டுகளுக்கு மேலாக  சுமந்து திரிந்த  ஒரு சுமையை இறக்கி வைத்திருக்கிறேன். ஆமாம், சமூக ஊடகங்கள் குறித்து எழுதிக் கொண்டிருந்த புத்தக வேலை  இன்றோடு நிறைவு பெற்றது.  

ஆரம்பத்தில் ஒரு புத்தகம் எனத் தொடங்கிய வேலை, எடிட்டரின் கைகளுக்குப் போனபோது இரட்டிப்பானது. முழுமையாகப் படித்த எடிட்டர் அதில் இரண்டு புத்தகங்களுக்கான உள்ளடக்கம் இருப்பதைக் கண்டு கொண்டதால், புத்தகத்தை இரண்டாக பிரித்து எழுதிவிட்டேன். இரட்டைப் பிள்ளைகள் !  :)

முதல் புத்தகத்தின் இறுதி பிழைத்திருத்தம் முடித்து பின்னட்டைக் குறிப்பையும் சேர்த்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். 

பதிப்பகம் ? கடந்த முறை இர்மா(அந்த ஆறு நாட்கள்) நாவல்-ஐ வெளியிட்ட "ஜிரோ டிகிரி" தான் இந்த முறையும் வெளியிடுகிறது.

இது என்னுடைய முதல் புனைவில்லாத நூல் (non fiction) என்பதால்  ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால், அந்தச் சுவடே இல்லாமல் நூல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக அந்த மூத்த எழுத்தாளர் சொன்ன போது கூடுதல் நம்பிக்கை வந்திருக்கிறது.


முதல் புத்தகம் சமூக ஊடகங்களைப் புரிந்துகொள்ளவும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகின்ற மிகச் சிறந்த கையேடாக இருக்கும்.

புத்தகத் தலைப்பு ? "சோசியல் மீடியா- இது நம்ம பேட்டை".  தலைப்பே  நல்ல ரகளையான வந்திருப்பதாக நினைக்கிறேன். இரண்டாவது புத்தகம் பற்றி வரும் நாட்களில் சொல்வேன்.

புத்தக விழா-வுக்குப் போகும் நண்பர்கள் ஒவ்வொரு முறையும் தங்களுக்குப் பிடித்தமானவர்களின் புதிய புத்தகங்களை வாங்கி வர வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இந்த முறை நான் கண்டிப்பாக  நண்பர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன்.

தொடர்ந்து உற்சாகப்படுத்தி துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !

Saturday, October 16, 2021

அது என்ன சோசியல் இன்ஜினியரிங் ?

இணையபாதுகாப்பு அதிகாரி(Cyber Security Officer) வீட்டில் நடந்த ஒரு சம்பவம்:

அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தை  சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு (National Cyber Security Awareness Month.) மாதமாக கொண்டாடுவதால், அது தொடர்பான பல கூட்டங்கள் இங்கு நடக்கின்றன.

அந்த வகையில், அமெரிக்காவின் மிகப் பெரிய சில்லரை வணிக நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடைய அனுபவத்தைக் கேட்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. அது  சைபர் விழிப்புணர்வு பற்றி இதுவரை நமக்கு  இருந்த புரிதலுக்கு புரிய பரிமாணம் தருவதாக இருப்பதால் பகிர்கிறேன்.

இதுவரை, குறுஞ்செய்தி, இமெயில்களில் வரும் லிங்குகளைக் கவனமாக சொடுக்குங்கள். சந்தேகத்துக்கு இடமான தளங்களுக்கு போகாதீர்கள். கிரெடிக்ட் அட்டை பயன்பாடு, தனிமனித தகவல் பரிமாற்றத்தில் கவனம் தேவை என ஒரு மிகப்பெரிய பட்டியல் வைத்திருந்தோம். அதில் இன்னொரு விசயம்.

சமீபத்தில் மேற்சொன்ன நபருடைய வீட்டுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்திருக்கிறது. பிரித்துப் பார்த்தால் ஆச்சர்யம். அதில் அவருக்குத் தெரிந்தவர்களுடைய பெயர் எதுவுமே இல்லை. ஆனால்,"கல்யாணத்தில் கலந்து கொள்ள இங்க போய் உங்க விருப்பத்தைச் சொல்லுங்க..."  எனச் சொல்லி ஒரு இணையதள முகவரி ஒன்றைத் தந்திருக்கிறார்கள். 

உடனே உசாரான நபர் உள்ளே கொஞ்சம் உள்ளே இறங்கி பார்த்தபோது, அது ஒரு போலி அழைப்பிதழ் என்றும் அந்த இணைப்பின் வழியாக அவருடைய ஃபோன் அல்லது கணினியில் மால்வேர்(Malware) எனும் தீம்பொருளை நிறுவ திட்டமிட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அவர் பாதுகாப்பு அதிகாரி என்பதால் உசாராகி விட்டார். ஆனால், பெரும்பாலான சாமானியர்கள் கவனக்குறைவாக ஆர்வத்தில்  அந்தத் தளத்துக்கு போய் ஏமாந்திருப்பார்கள் என்பது என்னவோ உண்மை.

அங்க தொட்டு, இங்க தொட்டு எங்கே வந்திருக்கிறார்கள் பாருங்கள் ?. இப்படித்தான்,  பெரிய செப்படி வித்தைகள் ஏதுவும் இல்லாமல் நம்முடைய ஆர்வத்தை மட்டும் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு விசயத்தைச் செய்து நம்மை ஏமாளி ஆக்கி விடுகிறார்கள் கயவர்கள். இதைத் தான் சோசியல் இன்ஜினியரிங் என்கிறார்கள்.

இணையம் பெருகிய இன்றைய டிஜிட்டல் உலகில், அலுவலகம் என்றில்லை. பள்ளி,கல்லூரி, வீடு என எங்கும் அனைவருக்கும் இந்தப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது. கவனமாயிருங்கள்.

முன்பே சொன்னது தான், போக போக வரும் நாட்களில் பாதுகாப்புக்காக  தூங்கும் போது கூட ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டும் போல..

இணைய_வழி_பாதுகாப்பு


 


தொலைதூரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக வேலை செய்வது என்று உங்கள் ஊழியர்களுக்குக் கற்பிப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது