Thursday, December 30, 2021

ஐடி துறையில் ஆள்பற்றாக்குறை

இது வெளியில் இருக்கும் மற்ற துறை ஆட்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் அல்லது பொருந்தும் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால்,  கொரோனாவுக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில் ஐடி துறை மிகப்பெரிய ஆள்பற்றாக்குறையை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... என்பது போல் இது செயற்கையாக  இல்லாமல் இது உலகம் முழுவதும் உண்மையாக உணரப்படும் ஒரு விசயம்.  திட்ட மேலாளர் (Project Manager),  வடிவமைப்பாளர், டெவலப்பர் (Developer) எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி தொழில்நுட்பம் சார்ந்த எல்லா ஊழியர்களுக்கும்  இப்போது ஏக கிராக்கி.

ஐடித் துறையின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர் அதிகாரி (இந்தியா) ஒருவரிடம்  நேற்று பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன்னுடைய 25 ஆண்டுகால அனுபவத்தில்  இப்படி ஒரு பற்றாக்குறையைத் தான் சந்தித்ததில்லை என்கிறார். உதாரணமாக ஒரு காலி இடத்தை நிரப்ப சுமாராக 5  பேருக்கு ஆபர்லெட்டர் கொடுத்தால் அதில் ஒருவர் மட்டுமே வந்து வேலையில் சேருவதாகச் சொல்கிறார். அதுவும் அவர்கள் அனைவருக்கும் நிறுவனம் தங்களால் இயன்ற உச்சகட்ட சம்பளத்தைத் தருவதாக ஒத்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.  இது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விசயம் அல்ல. சின்ன நிறுவனம் பெரிய நிறுவனம் என்றில்லாமல் இது எல்லா நிறுவனங்களிலும் எல்லா மட்டங்களிலும் எல்லா நாடுகளிலும் நடக்கிறது. இப்படி அமெரிக்காவில் மட்டும் கடந்த மாதம்  பல மில்லியன் பேர் தங்கள் வேலையை ராஜினா செய்துவிட்டு புதுவேலையில் சேர்ந்திருக்கிறார்கள். 

நான் ஒரே சமயத்தில் 5-க்கும் மேற்பட்ட ஐடி சேவை நிறுவன உயர் அதிகாரிகளுடன் தொழில் முறையில் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் அனைவரும் இதை முழுமையாக உணர்கிறார்கள்.

இந்த ஆள்பற்றாக்குறையால் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வேலையை அவர்களால் எடுத்து செய்ய முடியவில்லை. "எங்களால் செய்து முடித்துவிட முடியும்.." என ஒப்பந்தமிட்ட பல திட்டங்களைக் கடைசி நேரத்தில்  ஆட்கள் கிடைக்கவில்லை என திரும்ப ஒப்படைத்ததும். தொடங்கிய திட்டங்களைத் திறமையான ஆட்கள் இல்லாத காரணத்தால் பாதியிலேயே கைவிட்டு விட்டு கழண்டு கொண்ட கதையும் நடக்கிறது.

இதனால் பாதிக்கப்படுவது பெரும் பணபலம் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தான்.  கொரனாவுக்குப் பிறகு இயல்புநிலை மெள்ள திரும்பும் சூழலில் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. அதாவது,  கையில் பணத்தோடு அவர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். 

இதில் பயன்பெறுவது ? வேறு யார் ஊழியர்கள் தான். பலர் கைகளில் நான்கு, ஐந்து வாய்ப்புகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த ஒருவர் ஆண்டுக்கு 10 இலட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் பேசியபோது  தன்னை 3 நிறுவனங்கள் தலா 25, 28, 29 இலட்சங்கள் தருவதாக அழைத்திருக்கிறார்கள் என்கிறார். இத்தனைக்கும் அவருக்கு அனுபவம் குறைவு, புதிய தொழில்நுட்பங்களில் போதிய அனுபவம் கிடையாது.

நாம் கொரோனா உச்சத்துக்குச் சென்றபோது எல்லா ஐடி ஊழியர்களையும் வீட்டில் இருந்து வேலை செய்யட்டும் பிறகு பார்க்கலாம் என மேம்போக்காக விட்டு விட்டோம். ஆனால், இப்போது அவர்களில் பலர் தாங்கள் திரும்ப அலுவலகத்துக்கு வந்து வேலை செய்வதில் விருப்பமில்லை என்கிறார்கள். இன்னும் சில நாடுகளில் ஊழியர்கள் ஒருபடி முன்னேறி இப்போது வேலை செய்ய விருப்பமில்லை. சில ஆண்டுகள் இடைவெளி விட்டுவிட்டுத் தொடரலாம் என நினைக்கின்றேன் என்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை தருவதாக சொன்ன ஒரு கம்பெனிக்கு மாறிவிட்டேன். சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கே வந்துவிட்டேன். இது வீட்டையும் பிள்ளைகளையும் கவனிக்க வசதியாக இருக்கிறது என்கிறார். தற்போது அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தபடி பணி செய்வதால் நிறுவனங்களுக்கு எப்படியோ வேலை நடக்கிறதுதான் என்பது உண்மைதான். ஆனால், அவை நீண்டகாலத்துக்கு உதவாது. 

ஒரு குழுவாக செயல்படுவது, நேரடியாக கண்களைப் பார்த்து, பேசுவது விவாதிப்பது, மற்றவர்களுக்கு உதவி, இணைந்து செயல்படுவது போன்ற பல நல்ல விசயங்கள் இல்லாமல் அனைத்து ஊழியர்களும் தனித் தனி தீவாக செயல்படுவது நீண்டநாள் பலனைத் தராது என்பதை அவர்கள் நன்றாக உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

புதிய புதிய தொழில் நுட்பங்களைக் கற்று திறமையை வளர்த்துக் கொண்டு மேலே வரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆட்கள் இப்போது வீட்டில்  வேறுவழியில்லாமல் அடைப்பட்டு கிடப்பது ஒருபுறம் என்றால் இருப்பது போதும் வீட்டில் இருந்தபடி ஏதோ ஒரு வேலையைப் பார்ப்போம் என்பது மறுபுறம். சிலர் தொழில்நுட்பத்தின் மெய்நிகர் தொடர்பு வழியாகவே விட்ட பழைய இடத்தைப் பிடிக்கலாம் என்றும் முயற்சி செய்கிறார்கள் (புதிதாக ஐடி துறைக்கு நுழைபவர்கள் ஒருபுறம்).

இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு எப்படித் தொடரும் என்பது யாருக்கும் சரியாக புலப்படவில்லை. எது எப்படியோ, ஐடி துறை வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

Thursday, December 16, 2021

ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி

சமீபத்தில் ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி நாவல் வாசித்தேன். 

அல்லிக்கேணி சற்று ஏறக்குறைய 1970 களின் இறுதியில்  சென்னை திருவல்லிக்கேணியில் வளரும் நண்பர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. இது ராம்ஜியின் முதல் படைப்பு என்பதைச் சற்று சந்தேகத்தோடுதான் பார்க்க வேண்டி இருக்கிறது எனச் சொல்லும் அளவுக்கு வாசகர்களைக் கட்டிபோடும் விறுவிறுப்பான எழுத்து நடை. அதிலும் குறிப்பாக, பகட்டில்லாமல் இயல்பாக இழையோடும் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது.

(எ.டு.) கதையோட்டத்தோடு  “அவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை. ஹரி பேசிய தெலுங்கு அவனுக்கே புரியவில்லை..'' என்பதையெல்லாம் வாசிக்கும் போது  சிரிப்பு வெடிக்க வைக்கிறது. அதுபோல,  ''மாமா- நீங்க உண்மையாகவே போலிஸ் ஸ்டேசனை இடிச்சிடுவீங்க ? '' எனும் கேள்விக்கு மாமா-வாக வருபவர் சொல்லும் பதிலைக் கேட்டு நீங்கள் கண்டிப்பாக சில நிமிடங்களாவது வயிறு குலுங்க சிரிப்பீர்கள் (page 61) என்பதற்கு நான் உத்திரவாதம் அல்ல.  எழுதிய ஆசிரியர் ராம்ஜியே உத்திரவாதம்.

அதே நகைச்சுவையோடு , பார்த்த உடனே மாற்றம் தெரியவில்லை என்றால் அது மாற்றமே இல்லை. "எப்படி இருக்கு?" என்று கேட்கவே கூடாது. உண்மையான மாற்றம் பார்த்தாலே தெரிந்துவிடும் (page 71) என்பது மாதிரியான அருமையான பல முத்துக்களும் உண்டு.



இந்த நூலின் வழியாக 1980 களின் சென்னையை அதிலும் குறிப்பாக  அன்றைய திருவல்லிக்கேணி அங்கிருந்த குடும்ப, சமூகச் சூழலை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.  

நாவலில் கல்லூரி வயது பையன்கள் வழக்கம் போல ஊர் சுற்றுகிறார்கள். காதலிக்கிறார்கள். அடிதடிக்கு போகிறார்கள். படம் பார்க்கிறார்கள். பஞ்சாயத்து பண்ணுகிறார்கள். வர வேண்டிய பணத்தை வசூலித்துத் தருகிறார்கள் என்பது மாதிரியான  வீர பிரதாபங்களோடு நாட்கள் நகர்வது போல தெரிந்தாலும் அதன் மையச் சரடாக அவர்கள் அந்த வயதில் தங்களுடைய ஆளுமையை வளர்த்தெடுக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.

அந்த காலகட்டம் முடிந்து வேலை, சம்பாத்தியம் என வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி நகரும் போது அவர்கள் ஒவ்வோருவரும் எப்படி   தங்களுக்குத் தெரிந்த வழிகளில், சொந்த திறமையைப் பயன்படுத்தி அதே நகரில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக வாழ்வில் தங்களைச் சுற்றி நடந்த விசயங்களை உள்ளது உள்ளபடியே ரசிக்கும்படி பதிவு செய்வது  என்பது ஒரு கலை. அந்தக் கலை ராம்ஜிக்கு சிறப்பாக கை கூடி வந்திருக்கிறது.  வாழ்த்துகள் !

நூல் - அல்லிக்கேணி/ALLIKENI

ஆசிரியர் - ராம்ஜீ நரசிம்மன்/RAMJEE NARASIMAN

வெளியீடு - எழுத்து பிரசுரம்

விலை - ரூ. 249

https://www.zerodegreepublishing.com/products/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?_pos=1&_sid=f95bdcd88&_ss=r


Tuesday, December 7, 2021

பெண்களின் இரகசியம்

என்கிரிப்சன் (Encryption) எனும் மறையாக்கம் பற்றி ஒரு புத்தகம் எழுதும் ஆசையில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவுக்கு தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தேன். பிறகு, ஏதோ காரணத்தால் தடம் மாறி சமூக ஊடகங்கள் பற்றி எழுதத் தொடங்கிவிட்டேன்.

சரி விசயத்துக்கு வருவோம்.  என்கிரிப்சன் குறித்த பழைய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்த போது அது தொடர்பான தகவல் கிடைத்த ஒரு இடம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அது வாத்ஸ்யாயனரின் "காமசூத்திரம்".

அதில்  பெண்கள் அறிந்திருக்க வேண்டிய 64 கலைகள் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது.  ஓவியம், சமையல், மசாஜ், வாசனை திரவியங்கள் தயாரித்தல் என நீளும் அந்தப் பட்டியலில் 45 வது இடத்தில் இருப்பது  "மிலேசிடா-விகல்பா" (Mlechita-vikalpa)எனும் இரகசிய எழுதும் கலை. அதைப் பயன்படுத்தி பெண்கள் இரகசியமாக தங்களுடன் தொடர்புகள் இருப்பவர்களுடன்  விவரமாக தகவல்களைப்  பரிமாற சொல்லித் தருகிறார் வாத்ஸ்யாயனா.




அப்போது கண்ணில் பட்ட இன்னொரு விசயம் நந்தியின் காமசூத்திரம்.
சிவனும் பார்வதியும் காமத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது சிவனின் வாயிற்காப்போனாக இருந்த நந்தி அந்த உரையாடலைக் கேட்டு, காமம் குறித்து 1000 அத்தியாயங்கள் அடங்கிய காம சூத்திரத்தை எழுதியதாக ஒரு ஐதீகம் இருக்கிறதாம்.  வாத்ஸ்யாயனா அந்த நந்தியின் நூல் தான் தன்னுடைய காம சூத்திரத்தின் மூல நூல் என்றும், அதன் சிறு பகுதியே இது என்றும் கூட சொல்லி இருக்கிறாராம்.  

ஓ.... காப்பிரைட் எனும் பதிப்புரிமை மீறல் விவகாரம் அன்றைக்கே தொடங்கிவிட்டதா சரிதான்... :)