Thursday, December 16, 2021

ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி

சமீபத்தில் ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி நாவல் வாசித்தேன். 

அல்லிக்கேணி சற்று ஏறக்குறைய 1970 களின் இறுதியில்  சென்னை திருவல்லிக்கேணியில் வளரும் நண்பர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. இது ராம்ஜியின் முதல் படைப்பு என்பதைச் சற்று சந்தேகத்தோடுதான் பார்க்க வேண்டி இருக்கிறது எனச் சொல்லும் அளவுக்கு வாசகர்களைக் கட்டிபோடும் விறுவிறுப்பான எழுத்து நடை. அதிலும் குறிப்பாக, பகட்டில்லாமல் இயல்பாக இழையோடும் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது.

(எ.டு.) கதையோட்டத்தோடு  “அவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை. ஹரி பேசிய தெலுங்கு அவனுக்கே புரியவில்லை..'' என்பதையெல்லாம் வாசிக்கும் போது  சிரிப்பு வெடிக்க வைக்கிறது. அதுபோல,  ''மாமா- நீங்க உண்மையாகவே போலிஸ் ஸ்டேசனை இடிச்சிடுவீங்க ? '' எனும் கேள்விக்கு மாமா-வாக வருபவர் சொல்லும் பதிலைக் கேட்டு நீங்கள் கண்டிப்பாக சில நிமிடங்களாவது வயிறு குலுங்க சிரிப்பீர்கள் (page 61) என்பதற்கு நான் உத்திரவாதம் அல்ல.  எழுதிய ஆசிரியர் ராம்ஜியே உத்திரவாதம்.

அதே நகைச்சுவையோடு , பார்த்த உடனே மாற்றம் தெரியவில்லை என்றால் அது மாற்றமே இல்லை. "எப்படி இருக்கு?" என்று கேட்கவே கூடாது. உண்மையான மாற்றம் பார்த்தாலே தெரிந்துவிடும் (page 71) என்பது மாதிரியான அருமையான பல முத்துக்களும் உண்டு.



இந்த நூலின் வழியாக 1980 களின் சென்னையை அதிலும் குறிப்பாக  அன்றைய திருவல்லிக்கேணி அங்கிருந்த குடும்ப, சமூகச் சூழலை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.  

நாவலில் கல்லூரி வயது பையன்கள் வழக்கம் போல ஊர் சுற்றுகிறார்கள். காதலிக்கிறார்கள். அடிதடிக்கு போகிறார்கள். படம் பார்க்கிறார்கள். பஞ்சாயத்து பண்ணுகிறார்கள். வர வேண்டிய பணத்தை வசூலித்துத் தருகிறார்கள் என்பது மாதிரியான  வீர பிரதாபங்களோடு நாட்கள் நகர்வது போல தெரிந்தாலும் அதன் மையச் சரடாக அவர்கள் அந்த வயதில் தங்களுடைய ஆளுமையை வளர்த்தெடுக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.

அந்த காலகட்டம் முடிந்து வேலை, சம்பாத்தியம் என வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி நகரும் போது அவர்கள் ஒவ்வோருவரும் எப்படி   தங்களுக்குத் தெரிந்த வழிகளில், சொந்த திறமையைப் பயன்படுத்தி அதே நகரில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக வாழ்வில் தங்களைச் சுற்றி நடந்த விசயங்களை உள்ளது உள்ளபடியே ரசிக்கும்படி பதிவு செய்வது  என்பது ஒரு கலை. அந்தக் கலை ராம்ஜிக்கு சிறப்பாக கை கூடி வந்திருக்கிறது.  வாழ்த்துகள் !

நூல் - அல்லிக்கேணி/ALLIKENI

ஆசிரியர் - ராம்ஜீ நரசிம்மன்/RAMJEE NARASIMAN

வெளியீடு - எழுத்து பிரசுரம்

விலை - ரூ. 249

https://www.zerodegreepublishing.com/products/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?_pos=1&_sid=f95bdcd88&_ss=r


No comments:

Post a Comment