இது வெளியில் இருக்கும் மற்ற துறை ஆட்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் அல்லது பொருந்தும் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், கொரோனாவுக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில் ஐடி துறை மிகப்பெரிய ஆள்பற்றாக்குறையை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... என்பது போல் இது செயற்கையாக இல்லாமல் இது உலகம் முழுவதும் உண்மையாக உணரப்படும் ஒரு விசயம். திட்ட மேலாளர் (Project Manager), வடிவமைப்பாளர், டெவலப்பர் (Developer) எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி தொழில்நுட்பம் சார்ந்த எல்லா ஊழியர்களுக்கும் இப்போது ஏக கிராக்கி.
ஐடித் துறையின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர் அதிகாரி (இந்தியா) ஒருவரிடம் நேற்று பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன்னுடைய 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி ஒரு பற்றாக்குறையைத் தான் சந்தித்ததில்லை என்கிறார். உதாரணமாக ஒரு காலி இடத்தை நிரப்ப சுமாராக 5 பேருக்கு ஆபர்லெட்டர் கொடுத்தால் அதில் ஒருவர் மட்டுமே வந்து வேலையில் சேருவதாகச் சொல்கிறார். அதுவும் அவர்கள் அனைவருக்கும் நிறுவனம் தங்களால் இயன்ற உச்சகட்ட சம்பளத்தைத் தருவதாக ஒத்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம். இது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விசயம் அல்ல. சின்ன நிறுவனம் பெரிய நிறுவனம் என்றில்லாமல் இது எல்லா நிறுவனங்களிலும் எல்லா மட்டங்களிலும் எல்லா நாடுகளிலும் நடக்கிறது. இப்படி அமெரிக்காவில் மட்டும் கடந்த மாதம் பல மில்லியன் பேர் தங்கள் வேலையை ராஜினா செய்துவிட்டு புதுவேலையில் சேர்ந்திருக்கிறார்கள்.
நான் ஒரே சமயத்தில் 5-க்கும் மேற்பட்ட ஐடி சேவை நிறுவன உயர் அதிகாரிகளுடன் தொழில் முறையில் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் அனைவரும் இதை முழுமையாக உணர்கிறார்கள்.
இந்த ஆள்பற்றாக்குறையால் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வேலையை அவர்களால் எடுத்து செய்ய முடியவில்லை. "எங்களால் செய்து முடித்துவிட முடியும்.." என ஒப்பந்தமிட்ட பல திட்டங்களைக் கடைசி நேரத்தில் ஆட்கள் கிடைக்கவில்லை என திரும்ப ஒப்படைத்ததும். தொடங்கிய திட்டங்களைத் திறமையான ஆட்கள் இல்லாத காரணத்தால் பாதியிலேயே கைவிட்டு விட்டு கழண்டு கொண்ட கதையும் நடக்கிறது.
இதனால் பாதிக்கப்படுவது பெரும் பணபலம் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தான். கொரனாவுக்குப் பிறகு இயல்புநிலை மெள்ள திரும்பும் சூழலில் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. அதாவது, கையில் பணத்தோடு அவர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் பயன்பெறுவது ? வேறு யார் ஊழியர்கள் தான். பலர் கைகளில் நான்கு, ஐந்து வாய்ப்புகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் ஆண்டுக்கு 10 இலட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் பேசியபோது தன்னை 3 நிறுவனங்கள் தலா 25, 28, 29 இலட்சங்கள் தருவதாக அழைத்திருக்கிறார்கள் என்கிறார். இத்தனைக்கும் அவருக்கு அனுபவம் குறைவு, புதிய தொழில்நுட்பங்களில் போதிய அனுபவம் கிடையாது.
நாம் கொரோனா உச்சத்துக்குச் சென்றபோது எல்லா ஐடி ஊழியர்களையும் வீட்டில் இருந்து வேலை செய்யட்டும் பிறகு பார்க்கலாம் என மேம்போக்காக விட்டு விட்டோம். ஆனால், இப்போது அவர்களில் பலர் தாங்கள் திரும்ப அலுவலகத்துக்கு வந்து வேலை செய்வதில் விருப்பமில்லை என்கிறார்கள். இன்னும் சில நாடுகளில் ஊழியர்கள் ஒருபடி முன்னேறி இப்போது வேலை செய்ய விருப்பமில்லை. சில ஆண்டுகள் இடைவெளி விட்டுவிட்டுத் தொடரலாம் என நினைக்கின்றேன் என்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை தருவதாக சொன்ன ஒரு கம்பெனிக்கு மாறிவிட்டேன். சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கே வந்துவிட்டேன். இது வீட்டையும் பிள்ளைகளையும் கவனிக்க வசதியாக இருக்கிறது என்கிறார். தற்போது அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தபடி பணி செய்வதால் நிறுவனங்களுக்கு எப்படியோ வேலை நடக்கிறதுதான் என்பது உண்மைதான். ஆனால், அவை நீண்டகாலத்துக்கு உதவாது.
ஒரு குழுவாக செயல்படுவது, நேரடியாக கண்களைப் பார்த்து, பேசுவது விவாதிப்பது, மற்றவர்களுக்கு உதவி, இணைந்து செயல்படுவது போன்ற பல நல்ல விசயங்கள் இல்லாமல் அனைத்து ஊழியர்களும் தனித் தனி தீவாக செயல்படுவது நீண்டநாள் பலனைத் தராது என்பதை அவர்கள் நன்றாக உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.
புதிய புதிய தொழில் நுட்பங்களைக் கற்று திறமையை வளர்த்துக் கொண்டு மேலே வரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆட்கள் இப்போது வீட்டில் வேறுவழியில்லாமல் அடைப்பட்டு கிடப்பது ஒருபுறம் என்றால் இருப்பது போதும் வீட்டில் இருந்தபடி ஏதோ ஒரு வேலையைப் பார்ப்போம் என்பது மறுபுறம். சிலர் தொழில்நுட்பத்தின் மெய்நிகர் தொடர்பு வழியாகவே விட்ட பழைய இடத்தைப் பிடிக்கலாம் என்றும் முயற்சி செய்கிறார்கள் (புதிதாக ஐடி துறைக்கு நுழைபவர்கள் ஒருபுறம்).
இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு எப்படித் தொடரும் என்பது யாருக்கும் சரியாக புலப்படவில்லை. எது எப்படியோ, ஐடி துறை வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
நடுவில் சற்றே தோய்வு... இப்போது மீண்டும் வளர்ச்சி...
ReplyDeleteஆமாம். தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் !
Deleteவீட்டில் இருந்து வேலை செய்யும் சுகம் கண்டுவிட்டால் வெளியில் சென்று வேலை பார்க்கப் பிடிக்கவில்லை தான். ஆனால் எனக்கு மனிதர்களுடன் நேரில் உரையாட பிடிக்கும். பணியிடத்திற்குச் செல்வதால் நண்பர்களுடன் உரையாடுவது, வெளியில் நடமாடுவது, அன்றைய காட்சிகளைக் கண்டு களிப்பது என பல விஷயங்கள் இருந்தாலும் வீட்டில் இருந்து வேலையைச் செய்யும் பொழுது கூடுதல் சோம்பேறித்தனமும், வீட்டு வேலைகளும் சேர்ந்து கொள்கிறது. எனக்கு இரண்டுமே பிடித்திருக்கிறது. என்ன, பனிக்காலத்தில் வேலைக்குச் சென்று வர தான் பிடிக்கவில்லை. பலரும் நீங்கள் சொல்வது போல் வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிப்பீர்களா என்று தான் முதலில் கேட்கிறார்கள்.
ReplyDelete