புத்தகத்தை வாங்க
Monday, February 20, 2023
வனநாயகன் குறித்து-26 (..So interesting !!)
Friday, February 17, 2023
எஸ்டர்டே மருமகனே !!
பிடிக்கிறதோ இல்லையோ வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருபவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, தண்டோரா போதுவது போல போஃன் செய்து சொந்தங்களுக்கு தங்கள் வருகையை அறிவித்து நலம் விசாரிப்பது. அப்படியான ஒரு உரையாடலில் தாய் மாமா..
'மருமகனே ! மீனாட்சி தம்பி பையன் அமெரிக்காவில் என்ன படிக்கான் ?’
'ஒன்பதாவது மாமா’
'எல! அத நயன்த்து (9th)னு சொல்ல வேண்டியதுதானே. மாமாவுக்கு இங்லீசு தெரியாதுனு நினைச்சியோ’
'அப்படியெல்லாம் இல்ல மாமா ..’ நான் அவசரமாக மறுத்தேன்.
'பின்ன... மாமாவுக்கு உங்க அமெரிக்கன் இங்கிலீசு தெரியாட்டியும் கொஞ்சம் இந்த ஊரு இங்கலீசெல்லாம் தெரியுமாக்கும்..’
நான் யோசித்து முன் எச்சரிக்கையோடு 'சரி..நீங்க எப்ப ஹார்ட் செக்கப்புக்கு திருநவேலி போறீங்க ?’
'எஸ்டர்டே மருமகனே’, என்றபோது எனக்கு ஒரு நொடி இதயம் நின்றது போலிருந்தது.
இர்மா - அமெரிக்க நகரத்தினை கண்முன் நிறுத்துகிறது
ஆரூர் பாஸ்கர் அவர்களின் 'இர்மா -அந்த ஆறு(றா) நாட்கள்' நூலை சமீபத்தில் வாசித்தேன்.
இது 2017-இல் அமெரிக்காவின் பிளாரிடா மாகாணம் எதிர்கொண்ட இர்மா எனும் ஹரிக்கேனின் (சூராவளி) பின்புலத்தில் எழுதப்பட்ட நூல். இந்த நூலில் காலத்தின் கோலம் நம் கையில் இல்லை என்பதையும், இயற்கையை அழித்து செயற்கை வசதிகளைத் தன் தேவைக்கேற்ப மனிதன் அமைக்கையில் அது சாது மிரண்டால் காடு கொள்ளா தென்பதைக் காட்டுவது போல இயற்கைச் சீற்றமாக பேரிடர் புரிகிறது என்பதையும் இந்தக் கதையின் வழி ஆசிரியர் புலப்படுத்துகிறார்.
அது மட்டுமல்லாமல், உடையில்,உணவில் அவர்களது (மேற்குலக) கலாச்சாரத்தை கண்மூடி பின்பற்ற நினைக்கும் நாம் யாவரும் குழந்தை வளர்ப்பையும், அத்துமீறாத தனிமனித சுதந்திரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. . ஆங்காங்கே விரவி தெளிக்கப்பட்ட விதைகளாய் ஆசிரியர் கையாளும் உவமைகளும் சிலப்பதிகார தற்குறிப்பேற்ற அணியும் பாரதி வைரமுத்துவின் வரிகளும் ஆசிரியர் வாழ்க்கை விருட்சம்தன் கிளைகளை அமெரிக்காவில் பரப்பினாலும் மனம்சார் பண்பாட்டு வேர்கள் இந்தியாவில்... அதிலும் தமிழகத்தில்தான் ஆழ ஊன்றியுள்ளது என்பதைக் காண... உணரமுடிகிறது.
மொத்தத்தில்.... ஆரூரில் இருந்தபடியே... அமெரிக்க ஆறு/ஆறா நாட்களான இர்மாவின் இருட்டு நாட்களை... இறுக்கமான நாட்களை கதைநாயகன் தரணியின் மனவோட்டத்தின் வாயிலாக உணரமுடிகிறது! இயல்பான நடை. எளிமையான கதையோட்டம். காட்சிகளை நகர்த்திய விதம் அமெரிக்க நகரத்தினை கண்முன் நிறுத்துகிறது.
இனி ஒரு ஹரிக்கேனை அமெரிக்கா சந்திக்காதிருக்கட்டும். பிண மலைகளை ஓரிடத்தில் சுனாமி காலத்தில் தமிழகத்தில் நடந்தது போல புதைக்காதிருக்கட்டும் என இயற்கையை இறைஞ்சியபடி முடிக்கிறேன்.
ஆசிரியருக்கு நல்வாழ்த்துகள் உரித்தாகுக!
-*கவியருவி சக்தீ*
திருமதி க. சந்தானலட்சுமி பண்டரிநாதன்,
முதுகலைத்தமிழாசிரியர், திருவாரூர்
Buy Link
Sunday, February 12, 2023
முகநூல் - குழப்பம்
யார் அந்த நிலவு ? எனும் தலைப்பில் முகநூலில் நான் எழுதிய பதிவு
முன்பெல்லாம் முகநூலில் ஒரு பதிவிற்கு வரவேற்பு இல்லையென்றால் டக்கென இரண்டு விசயங்களை மட்டும் யோசிப்போம். (1). சொல்ல வந்த விசயம் சரியாக சொல்லப்படவில்லை அல்லது சரியான நேரத்தில் சொல்லவில்லை (2). படிப்பவர்கள் லைக் அல் கமெண்ட் விசயத்தில் தாராளமாக இல்லை என நினைப்போம்.
ஆனால், இதில் மூன்றாவதாக இன்னொரு விசயமும் ஒன்றும் இருக்கிறது. அது முகநூல் அந்தப் பதிவை எத்தனைப் பேருக்கு காட்டுகிறது என்பதைப் பொறுத்தும் இருக்கிறது. ஆமாம், அது திடுமென ஒரு பதிவை 5000 பேருக்கு மேல் காட்டுகிறது. இன்னொன்றை வெறும் 350 பேருக்கு மட்டும் காட்டி மற்றவர்களுக்கு காட்டாமல் நிறுத்தி வைக்கிறது. இந்தச் சூழலில் எழுதுபவனையும், பார்வையாளர்களையும் மட்டும் குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை.
Thursday, February 9, 2023
சென்னை காசி விநாயகா -அபார சுவை
'சென்னையில் பெரிய ஆடம்பரங்கள் இல்லாத வீட்டுமுறை சாப்பாட்டுக்கு இத்தனை வரவேற்பா?' (அதுவும் சைவ சாப்பாடு) என அனைவரும் வியக்கும் இடம் திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ். நான் அதன் 22 ஆண்டு வாடிக்கையாளர் என்பதில் கொஞ்சம் பெருமிதமும் கூட.
'அமெரிக்காவில் இருந்து வரும் போதெல்லாம் தவறாமல் அங்க போறீங்களே? அப்படி அங்க என்னதான் இருக்கோ?' எனக் கேட்பவர்களை வாயடைக்க ஒரே வழி, அவர்களையும் உடன் அழைத்து போவதுதான் என்றே நினைக்கிறேன்.
Saturday, February 4, 2023
ராயல்டி - நல்ல சகுனம்
காலையில் எழுந்த உடன் யாராவது ஃபோன் செய்து "உங்க வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைத்திருக்கிறேன்" எனச் சொல்வதைவிட வேறு நல்ல சகுனம் என்ன இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை. ஜீரோ டிகிரி ராம்ஜி முந்தாநாள் அழைத்து (ராயல்டி) அதைத்தான் செய்தார் (நிதி- கல்வி அறக்கட்டளைக்கு).
கூடவே, கடந்த ஆண்டில் என்னுடைய புத்தகங்களின் விற்பனை வரிசையும் அனுப்பியிருந்தார். அந்தப் பட்டியல்
1. அறத்துக்கு அப்பால் மீளும் அத்துமீறல்
2. சோஷியல் மீடியா -இது நம்ம பேட்டை
3. இர்மா (அந்த ஆறு நாட்கள்)
இப்படி என்னுடைய ஜீரோ டிகிரி புத்தகங்கள் எதுவும் உறங்கி போகாமல் விற்பனையாகிக்கொண்டிருப்பது என்பது மகிழ்ச்சி. மேலும் எழுத உற்சாகம் தருகிறது.
இந்த ஆண்டு பட்டியலில் கண்டிப்பாக ஜெஸிகா-வுக்கு முதலிடமாக இருக்கும்.
இருக்கட்டும். மகாகவி சொன்னது போலதான் "சாம்பல் நிறத்தொரு குட்டி, கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி என எந்த நிறமிருந்தாலும் அவையாவும் ஒரே தரம் அன்றோ" என்பதுபோல; ஒரு படைப்பாளியின் புனைவு (fiction), அபுனவை (nonfiction) என எதுவாக இருந்தாலும் அதில் அவருடைய ஆன்மா என்பது ஒன்றுதான். எழுத்தோடு பயணிப்போம் நட்புகளே!!.
கீழே, ஜீரோ டிகிரி வழியாக வெளியான என்னுடைய 4 நூல்களையும் வாங்கும் இணைப்பைக் தருகிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள் ..
Wednesday, February 1, 2023
ஜெஸி (எ) ஜெஸிகா கிங் - அச்சுப்பிரதியாக இணையத்தில்
நண்பர்களே,
ஜெஸி (எ) ஜெஸிகா கிங் நாவல் இப்போது ஜீரோடிகிரி தளத்தில் அச்சுப்பிரதியாக (இணையத்தில்) வாங்க கிடைக்கிறது.
அதற்கான இணைப்பு கிழே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
ஆரூர் பாஸ்கர்