Friday, February 17, 2023

இர்மா - அமெரிக்க நகரத்தினை கண்முன் நிறுத்துகிறது

ஆரூர் பாஸ்கர் அவர்களின் 'இர்மா -அந்த ஆறு(றா) நாட்கள்' நூலை சமீபத்தில் வாசித்தேன்.

இது  2017-இல் அமெரிக்காவின் பிளாரிடா மாகாணம் எதிர்கொண்ட இர்மா எனும் ஹரிக்கேனின் (சூராவளி) பின்புலத்தில் எழுதப்பட்ட நூல். இந்த நூலில் காலத்தின் கோலம் நம் கையில் இல்லை என்பதையும், இயற்கையை அழித்து செயற்கை வசதிகளைத் தன் தேவைக்கேற்ப மனிதன் அமைக்கையில் அது சாது மிரண்டால் காடு கொள்ளா தென்பதைக் காட்டுவது போல இயற்கைச் சீற்றமாக பேரிடர் புரிகிறது என்பதையும் இந்தக் கதையின் வழி ஆசிரியர் புலப்படுத்துகிறார். 



அது மட்டுமல்லாமல், உடையில்,உணவில் அவர்களது (மேற்குலக) கலாச்சாரத்தை கண்மூடி பின்பற்ற நினைக்கும் நாம் யாவரும் குழந்தை வளர்ப்பையும், அத்துமீறாத தனிமனித சுதந்திரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. . ஆங்காங்கே விரவி தெளிக்கப்பட்ட விதைகளாய் ஆசிரியர் கையாளும் உவமைகளும் சிலப்பதிகார தற்குறிப்பேற்ற அணியும் பாரதி வைரமுத்துவின் வரிகளும் ஆசிரியர் வாழ்க்கை விருட்சம்தன் கிளைகளை அமெரிக்காவில் பரப்பினாலும் மனம்சார் பண்பாட்டு வேர்கள் இந்தியாவில்... அதிலும் தமிழகத்தில்தான் ஆழ ஊன்றியுள்ளது என்பதைக் காண... உணரமுடிகிறது. 

மொத்தத்தில்.... ஆரூரில் இருந்தபடியே... அமெரிக்க ஆறு/ஆறா நாட்களான இர்மாவின் இருட்டு நாட்களை... இறுக்கமான நாட்களை கதைநாயகன் தரணியின் மனவோட்டத்தின் வாயிலாக உணரமுடிகிறது! இயல்பான நடை. எளிமையான கதையோட்டம். காட்சிகளை நகர்த்திய விதம்  அமெரிக்க நகரத்தினை கண்முன் நிறுத்துகிறது. 

இனி ஒரு ஹரிக்கேனை அமெரிக்கா சந்திக்காதிருக்கட்டும். பிண மலைகளை  ஓரிடத்தில் சுனாமி காலத்தில் தமிழகத்தில் நடந்தது போல புதைக்காதிருக்கட்டும் என இயற்கையை இறைஞ்சியபடி முடிக்கிறேன். 

ஆசிரியருக்கு நல்வாழ்த்துகள் உரித்தாகுக! 

-*கவியருவி சக்தீ*

திருமதி க. சந்தானலட்சுமி பண்டரிநாதன்,

முதுகலைத்தமிழாசிரியர், திருவாரூர்

Buy Link

ஆரூர் பாஸ்கர்

No comments:

Post a Comment