Wednesday, May 3, 2017

ஆடி (Audi) கார் விவசாயிகள்

விவசாயிகள் ஆடி கார் (Audi) வைத்திருப்பதற்கும், ஆடி கார் வைத்திருப்பவர்கள் விவசாயிகளாக இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ஆமாம், தமிழகத்தின் இன்றையச் சூழலில் ஒருவர் விவசாயம்
மட்டும் செய்து அந்த வருமானத்தில் ஆடி கார் வாங்குகிறார். 'வசதியாக'  வாழ்கிறார் என்பது ஆச்சர்யம் தான். அப்படி ஒருவரால் வசதியாக வாழமுடிந்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நானாகதான் இருப்பேன். ஏனேன்றால் முழுநேர வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பி படுதோல்வி அடைந்த குடும்பங்களை நான் மிகநன்றாக அறிவேன்.

இயற்கையை விலக்கிவிட்டு பார்த்தால் தோல்விக்கு முக்கியக் காரணம் அரசாங்கம் என நம்மால் தயங்காமல் கைகாட்ட முடியும். விவசாயிகளையும், விவசாயத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் பார்க்காமல் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்திய, நடத்தும் மனப்போக்கு என நம்மால் எளிதாகச் சொல்லிவிட முடியும்.

சரி, விசயத்துக்கு வருகிறேன்.   எங்கள் ஊரில் இருக்கும் ஒரு
'வசதியான' ஒரு விவசாயியைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.
அவருக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல கார்கள் உண்டு,  ஏன்,
காலனி வீடுகள், டிராக்டர்கள், ஏக்கர் கணக்கில் ரியல்எஸ்டேட்  என ஏக செழிப்பாயிருக்கிறார்.

இவையெல்லாம் கடந்த 15-20 வருடத்தில் சேர்த்தவைதான்.
வெளிநாட்டிலிருந்து ஒய்வுபெற்றுவந்த அவர் முதலில் கையிலிருந்த காசில் ஒரு தென்னந்தோப்பை விலைக்கு வாங்கினார். அடுத்து விவசாய லோன் போட்டு ஒரு டிராக்டர் வாங்கி பளபள பெயிண்ட் அடித்து "விவசாயத்துக்கு மட்டும்" என எழுதினார்.

அடுத்து அவர்  தோப்பில் பம்புசெட் போட்டு தென்னம்பிள்ளையைக்
கிளப்பியிருந்தால்,  இன்று  கண்டிப்பாக மழைக்காக வானத்தை பார்த்துக்கொண்டிருப்பார். ஆனால்,  அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் டிராக்டர்,மோட்டார், தோப்பை வைத்து செங்கல் பிஸினசில் குதித்தார். 

வெளியூரிலிருந்து ஆட்களை வரவைத்து தோப்பிலேயே தங்கவைத்து இரவு பகல் என விடாமல் லட்சக்கணக்கில் கல் அறுத்து அங்கேயே கொளுத்தினார்.  அவருடைய அதிஷ்டமும் அந்தத் தோப்பின் மண்வாகும் சேர்ந்து செங்கல் வியாபாரம் அவரைத் தூக்கிவிட்டது.  போதாத குறைக்கு கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வும் சேர்ந்துக் கொண்டது.  சொந்தமாக லாரி, டிராக்டர் என கிடுகிடுவென வளர்ந்துவிட்டார். கையிலிருந்த காசை வைத்து ஊரிலிருக்கும் பெரும்பான்மையான விவசாயிகளின் நிலத்தை வளைத்துபோட்டார்.  

செங்கல் அறுக்க நிலத்தடி நீரை  நீர்மூழ்கி, ஜெட் பம்பு
என சகலத்தையும் வைத்து  சுற்றியிருந்த  அப்பாவி விவசாயிகளின்
தண்ணீரையும் சேர்த்து  உறிஞ்சித் தள்ளினார். அதுவரை 20-30 அடிகளில் கிடைத்த நிலத்தடி நீர் இவரின் கைவரிசையால்  இன்று 
200-300 அடி என்றானது.  போதாத குறைக்கு தோப்பில் தென்னை மரங்களை முழுதாக வெட்டி சாய்த்து விட்டு  புல்டோசரால்
மண்னை விடாமல்  தோண்டியதால் இன்று நூற்றுக்கணக்கான அடி ராட்ச பள்ளம் வேறு.  அந்தத் தோப்பு இன்று  அணுகுண்டு வைத்து வெடித்தது போல பூமி பிளந்து கிடக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா.

இப்படியெல்லாம் விவசாய நிலங்கள் பாழ்படுவதைத் தடுக்க அரசாங்கத்திடம் தகுந்த வரையறை எதுவும்  இருப்பதாகத் தெரியவில்லை. இவரும் அதிகாரத்தின் முன் ஒருவகையில் விவசாயி தான். மண்னை வைத்து பிழைக்கிறாறே ? வேறென்ன சொல்ல.

மணலை ஆற்றிலிருந்தும் அள்ளியும், இயற்கை வளங்களை வெட்டி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொறுப்பை  ஆட்சியிலிருக்கும் பெரிய மீன்கள் செய்கிறார்கள்.  செங்கல்லுக்காக தென்னந்தோப்புகளில் ராட்சதகுழி பறிக்கும் வேலையை இவர்போன்ற சிறிய மீன்கள் மிகச் சரியாக செய்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டிருப்பது சுற்றி விவசாயம் செய்யும்  பரம்பரை விவசாயிகள் எனச் சொல்லதான் வேண்டுமா  என்ன ? அவர்கள் மழை பெய்யும், நதிநீர் இணைக்கப்படும்,  காவிரியில் தண்ணீர் வரும், பயிர்க்கடன்
தள்ளுபடி செய்யப்படும், விவசாயம் ஊக்குவிக்கப்படும் என பகல் கனவு காணும் வேளையில் செங்கல் விவசாயிகள் வெயிலுக்கு ஏசி காரில் கறுப்புக் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

3 comments:

  1. Yes. You are right. I agree 100%.. You can see these kind of people in each and every villages.
    Raj.

    ReplyDelete
    Replies
    1. Also, there is no regulation for these kind of devastation and spoilers.

      Delete