Tuesday, July 25, 2017

தீபன் - தமிழ்ப்படம்

எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்து ஜாக்யூஸ் அடியார்ட் எனும் பிரெஞ்ச் இயக்குநர்  இயக்கிய "தீபன்" எனும் தமிழ்ப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன்.  இந்தப்படம் 2015 கேன்ஸ் திரைவிழாவில் சிறந்தப் படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) பரிசு பெற்றது.

முதலில் படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறேன். இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது தப்பி கணவன், மனைவி, மகள் எனும் போர்வையில் பிரான்சில் அடைக்கலமாகும் மூன்று அந்நியர்களின் வாழ்க்கைக் கதை.

கதைப்படி கணவனாக நடிப்பவன் ஒரு  முன்னாள் தமிழ்விடுதலைப் போராளி, மனைவியாக, மகளாக நடிப்பவர்கள் போரில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள்.  இவர்கள் மூவரும் வெளிநாட்டில் நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டும் எனும் ஒற்றைப் புள்ளியில்  சந்திக்கிறார்கள்.

அவர்கள் வெளி உலகத்துக்கு ஒரு குடும்பமாகத் தெரிந்தாலும் அந்நியர்களாக இருப்பவர்கள் மனதளவில் ஒன்றாக இணைய முயற்சிப்பதன் சவால்களை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் ஒரு காட்சியில் பள்ளி செல்லும் இளையாள் எனும் அந்தச் சிறுமி  மற்றவர்களின் பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு முத்தமிட்டு
வழி அனுப்புவதை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு 'எனக்கும் மத்தவங்க மாதிரி உம்மா குடும்மா ' எனக் கேட்கும் அந்தக் காட்சி உருக்கம்.

இப்படி அறிமுகமில்லாத தேசத்தில்  முற்றிலும் புதிய மனிதர்கள்
அந்நிய மொழியை அறிந்திருக்கவேண்டியதன் கட்டாயம் என 
அக மற்றும் புறச் சூழலில் புலம்பெயர்பவர்களின் போராட்டம் உணர்வுப் பூர்வமாக நம்கண் முன் விரிகிறது.

பல போராட்டங்களுக்கு பின் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்களா என்பதை தெரிந்துக்கொள்ள படத்தைப் பாருங்கள். படத்தின் இரண்டாவது பாதியை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

மற்றபடி முன்னாள் போராளியாக ஷோபாசக்தி தன்  உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் நம் மனத்தைத் தொடுகிறார். அவரோடு இணைந்து நடித்திருக்கும் காளீஸ்வரி மற்றும் மகளாக வரும் சிறுமி குளோடின் வினாசித்தம்பி நடிப்பும் அபாரம். வாழ்த்துகள்.  தமிழ்ப் படங்களில் இவர்கள் பிரகாசித்தால் மகிழ்வேன்.

இந்தப்படத்தின் டிவிடி உபயம் உள்ளூர்  நூலகம்,  தமிழகத்தில்
வெளியானதா எனத் தெரியவில்லை.  

Saturday, July 22, 2017

சென்னை புத்தகத் திருவிழா -ராயப்பேட்டை YMCA

நண்பர்களுக்கு,

கிழக்கு பதிப்பகம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட  எனது  புதினம்
வனநாயகன்-மலேசிய நாட்கள்’ (நாவல்) ’சென்னை புத்தகத் திருவிழா’வில் (ஜூலை 21 முதல் 31வரை, ராயப்பேட்டை YMCAவில்) கிடைக்கும்.

டயல் ஃபார் புக்ஸ் (Dial For Books) ஸ்டால் எண்கள்- 104,105.  கிழக்கு ஸ்டால் எண்கள்- 95, 96.  நன்றி!!

அன்புடன்,
ஆரூர் பாஸ்கர்


இணையத்தில்:

இந்தியாவில் அமேசான் கிண்டில் வடிவில் வாங்க


இந்தியாவில் புத்தகமாக வாங்க

வெளிநாடுகளில் அமேசான் கிண்டில் வடிவில் வாங்க 

Friday, July 21, 2017

நீங்கள் வெகுளியா ? - அப்போ இதை முதல்ல வாசிங்க

"நாற்றம்" எனும் நல்ல சொல் அதன் இயல்பில் (மணம்) இருந்து திரிந்து கெட்ட வாடை எனும் பொருளில் தற்போது பயன்பாட்டில்
இருக்கிறது.

அதுபோல பயன்பாட்டில் இருக்கும் இன்னோரு சொல் "வெகுளி".
உலக நடப்பு அறியாத, கள்ளம் கபடமற்றவர்களை வெகுளி
எனச் சொல்கிறோம்.  அவன் 'சுத்த வெகுளி பய, அவன குத்தம் சொல்லாத ' என்பதெல்லாம் பேச்சுவழக்கில் மிகச் சாதாரணம்.

ஆனால், உண்மையில் வெகுளி என்பதற்கு கோபம் (சினம்) என்று பொருள்.

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்  இழுக்கா இயன்றது அறம் " என மனப்பாடம் செய்த  குறள் நினைவுக்கு வருகிறதா ?

ஆமாம், பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம் என்கிறது குறள்.

அந்த வகையில் பார்த்தாலும் நம்மில் பல வெகுளிகள் (கோபக்காரர்கள்) இருக்கத்தான் செய்கிறார்கள்.

Saturday, July 15, 2017

சுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-1

இந்தவருட கோடைவிடுமுறைக்கு வழக்கம்போல் குடும்பத்தோடு இந்தியா போகாமல் உள்நாட்டிலேயே செலவிடுவது என திட்டமிட்டு ஐந்து நண்பர்களின் குடும்பத்தோடு சுமோக்கி மலை (Smoky Mountains)   போயிருந்தோம். 

அதை முகநூலில் பகிர்ந்தபோது நண்பர்கள் பலர் சுமோக்கி "Smoky" குறித்து  விசாரித்திருந்தார்கள்.  ஒரு நண்பர் சுமோக்கியா ? இல்லை சுமோகியா? என்று கூடக் கேட்டிருந்தார்.

உண்மையில் சுமோக்கி மலை என்பதை "புகை மலை" என வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம்.   இந்த மலை மேல் இயற்கையான புகைவது போல்  பனிமூட்டம் எப்போதும் மூடிக்கொண்டிருப்பதால் "Smoky" என்கிறார்கள்.
மலை ஏறக்குறைய இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக 2 அமெரிக்க மாநிலங்களில் பரந்துவிரிந்து கிடக்கிறது.(வரைபடம்)

நாங்கள் இந்தவருடம் விடுதியில் தங்காமல்  மலையில் " கேபின்"  எனும் " மரவீடு"  வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம்.  சாதாரணமாக வீடு எனச் சொல்வதைவிடப் பெரிய
" பண்னை வீடு"  எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.   சகல வசதிகளோடு 5 படுக்கை அறையில்  25 பேர் தங்குவதற்குக் கூட தாராளமாய் இடமிருந்தது. 

விசாலமான சமையல் அறை, 25 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து
உணவருந்த டைனிங் டேபுள்.  கூடவே பிள்ளைகளுக்கென விளையாட்டு அறை. அதில் வீடியோ கேம்ஸ், ஏர் ஹாக்கி இத்யாதிகள். பெரியவர்களின் நேரப்போக்கிற்கெனச் சுடுநீர்
தொட்டி (jacuzzi) ,
பூல் டேபுள் (pool table), அறுங்கோணவடிவில் போக்கர் டேபுள் (poker table) வசதிகளும் இருந்தன.

சுமோக்கி மலைக்குச் செல்பவர்கள் இதுபோன்றதொரு கேபினை முயன்று பாருங்கள். கண்டிப்பாக விரும்புவீர்கள்.

 போக்கரை சீட்டாட்டம் என ஒதுக்குபவர்கள் "பூல் டேபுள்" பக்கம் ஒதுங்கி
பில்லியர்ட்ஸை ஒரு கை பார்க்கலாம். பில்லியர்ட் ஸை திரைப்படங்களில்
மட்டும் பார்த்து அதிசயித்த
என்னைப் போன்றவர்கள்
அதை  10 நிமிடங்களில் கற்றுக்கொண்டு எளிதாக விளையாடத் தொடங்கலாம். சிரமமில்லை.நல்ல நேரப்போக்கு.

இல்லையென்றால் வீட்டில் இருந்தபடியே எதிரே பரந்து விரிந்துக் கிடக்கும் மலையை ரசிக்கலாம். அதுபோல,  ஆர்வமுள்ளவர்ளுக்கு வெளியே மலையேற்றம், படகுச் சவாரி போன்ற பல விசயங்கள் இருக்கின்றன.

கோடையில் பச்சை ஆடைபோர்த்தியது போலிருக்கும் இந்த மலை "இலையுதிர் காலம்"எனும் பாஃல்  சீசனில் வண்ண பட்டு
போர்த்தியதுபோல் ரம்யமாயிருக்கும்.

இன்னோரு முக்கியமான விசயம்.  மலைமேல் இருக்கும் இந்த வீடுகளை இரவில் அழையா விருந்தாளிகளாக
கரடிகள்  எட்டிப்பார்க்க வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. மாலை நேரத்தில் சிறுவர்கள் வெளியே விளையாடும்போதும் கவனம் தேவை.

அப்படி எட்டிப்பார்க்கும் கரடிகள் குப்பைத் தொட்டிகளை வேட்டையாடவும் வாய்ப்பிருப்பதால் அதனை சகலபாதுகாப்புடன்
வைத்திருக்கிறார்கள் பாருங்கள். (படத்தில்)

அடுத்து, நண்பர்களுடன்மலையேறிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். காத்திருங்கள்.

Sunday, July 9, 2017

தமிழில் "மங்கலம்" என்றால் ?

பொதுவாக வீடுகளில் ' விளக்கை அல்லது தீபத்தை அணைத்து விடு' எனச்சொல்வதை அபசகுனமாக நினைப்பார்கள். அதற்கு பதிலாக  'விளக்கைக் கையமத்தி விடு ' இல்லை  'விளக்கைக் குளிர வைத்துவிடு ' இப்படி ஏதோ ஒன்றைக் குறிப்பாக சொல்லி  உணர்த்துவார்கள்.

இப்படி அபசகுனமான  விசயங்களை நல்ல வார்த்தைகளால் சொல்வதைத் தமிழில் "மங்கலம்" என்பார்கள். (சகுனத்திற்கு எதிர்மறை "அபசகுனம்", மங்கலம் X  "அமங்கலம்" )

இதுபோல நம்மில்  பல மங்கலங்கள் நாட்டில் இருக்கின்றன. ஆடிமாதத்தில் பெண்கள் தாலிக் கயிற்றை மாற்றிவிட்டு புதிய தாலி அணிந்து கொள்ளும் சடங்கை   'தாலிப் பெருக்கு' என்பார்கள்.

அதுபோல ஒருவருடைய மரணத்தைப் பற்றிச் சொல்லும் போதுகூட
'காலமானார்', 'இயற்கை எய்தினார்', 'இறைவனடிச் சேர்ந்தார்', 'மீளாத்துயில் அடைந்தார்'  எனச்  சொல்வதும் மரபே.

நச்சுள்ள நாகப்பாம்பையே "நல்லபாம்பு" எனச் சொல்லும் நாம்தான், நெருப்புனா வாய் சுட்டற போகுதா ? என்றும் கேட்கிறோம். :)

குறிப்பு- மங்களம் வட சொல்.  மங்கலம் தமிழ்ச் சொல்.

Saturday, July 1, 2017

மெட்ராஸ் தமிழ்

மெட்ராஸ் சென்னை ஆகிவிட்டதால் 'மெட்ராஸ் தமிழ்'   சென்னை தமிழாகி 
விட்டது என்றே நினைக்கிறேன்.    பொதுவாகவே   'சென்னை தமிழ்' 
நமக்கெல்லாம்  ஏதோ நகைச்சுவை என்றவகையிலேயே   திரைப்படங்களின் வழியாக அறிமுகமாகி இருக்கிறது ( நடிகர்கள் சோ, கமல், லூஸ் மோகன்
போன்றவர்கள் இதை மக்களிடம் நேரடியாக எடுத்துச் சென்றார்கள்).

உண்மையில் தமிழ்நாட்டுடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பகுதிகள் சேர்ந்திருந்த மெட்ராஸ் ஸ்டேடில் சென்னையை பூர்வீகமாக கொண்ட மக்களால் பேசப்பட்ட மொழி அது.

அதாவது வட்டார வழக்கு மொழி. தெலுங்கு,உருது,இந்தி, ஆங்கில மொழிகள் கலந்த கலவை அது . நடிகர் கமல் கூட இது குறித்து ஒரு பேட்டியில் விரிவாக பேசியதாக நினைவு. 

நமக்கெல்லாம் அறிமுகமான  ஒரு சென்னை வார்த்தை -பேமானி, அதன் மூலம் உருது. " பே இமானி"  (பே-இல்லாத, இமானி-நேர்மையானவன்) அதாவது நேர்மை இல்லாதவன்.

இன்று சென்னைக்கு  ஊர்புறத்திலிருந்து வீட்டுக்கு ஒருவர் வந்துவிட்ட சூழலில்
சென்னைக்கென்று  ஒரு தனித்தமிழ் இருப்பதாக தெரியவில்லை. வடசென்னைத் தவிர்த்து அந்த   'மெட்ராஸ் தமிழ்' சுத்தமாக வழக்கற்று போய்விட்டது என்றே நினைக்கிறேன்.

ஆனாலும்,  அதன் எச்சங்களாக இன்னமும் சில தமிழ் சொற்கள் சென்னையில் வித்தியாசமாக உச்சரிக்கப்படுவதை நீங்கள் கவனித்திருக்களாம்.

சட்டென நினைவுக்கு வரும் சில சொற்கள். கொய்யா- goiya, குடிசை- gudisai 
அதுபோலக் கும்பல்-gumbal.  இவையெல்லாம் தவிற்கப்படவேண்டிய ஒலிப்புப்பிழைகள்.