Saturday, July 15, 2017

சுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-1

இந்தவருட கோடைவிடுமுறைக்கு வழக்கம்போல் குடும்பத்தோடு இந்தியா போகாமல் உள்நாட்டிலேயே செலவிடுவது என திட்டமிட்டு ஐந்து நண்பர்களின் குடும்பத்தோடு சுமோக்கி மலை (Smoky Mountains)   போயிருந்தோம். 

அதை முகநூலில் பகிர்ந்தபோது நண்பர்கள் பலர் சுமோக்கி "Smoky" குறித்து  விசாரித்திருந்தார்கள்.  ஒரு நண்பர் சுமோக்கியா ? இல்லை சுமோகியா? என்று கூடக் கேட்டிருந்தார்.

உண்மையில் சுமோக்கி மலை என்பதை "புகை மலை" என வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம்.   இந்த மலை மேல் இயற்கையான புகைவது போல்  பனிமூட்டம் எப்போதும் மூடிக்கொண்டிருப்பதால் "Smoky" என்கிறார்கள்.
மலை ஏறக்குறைய இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக 2 அமெரிக்க மாநிலங்களில் பரந்துவிரிந்து கிடக்கிறது.(வரைபடம்)

நாங்கள் இந்தவருடம் விடுதியில் தங்காமல்  மலையில் " கேபின்"  எனும் " மரவீடு"  வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம்.  சாதாரணமாக வீடு எனச் சொல்வதைவிடப் பெரிய
" பண்னை வீடு"  எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.   சகல வசதிகளோடு 5 படுக்கை அறையில்  25 பேர் தங்குவதற்குக் கூட தாராளமாய் இடமிருந்தது. 

விசாலமான சமையல் அறை, 25 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து
உணவருந்த டைனிங் டேபுள்.  கூடவே பிள்ளைகளுக்கென விளையாட்டு அறை. அதில் வீடியோ கேம்ஸ், ஏர் ஹாக்கி இத்யாதிகள். பெரியவர்களின் நேரப்போக்கிற்கெனச் சுடுநீர்
தொட்டி (jacuzzi) ,
பூல் டேபுள் (pool table), அறுங்கோணவடிவில் போக்கர் டேபுள் (poker table) வசதிகளும் இருந்தன.

சுமோக்கி மலைக்குச் செல்பவர்கள் இதுபோன்றதொரு கேபினை முயன்று பாருங்கள். கண்டிப்பாக விரும்புவீர்கள்.

 போக்கரை சீட்டாட்டம் என ஒதுக்குபவர்கள் "பூல் டேபுள்" பக்கம் ஒதுங்கி
பில்லியர்ட்ஸை ஒரு கை பார்க்கலாம். பில்லியர்ட் ஸை திரைப்படங்களில்
மட்டும் பார்த்து அதிசயித்த
என்னைப் போன்றவர்கள்
அதை  10 நிமிடங்களில் கற்றுக்கொண்டு எளிதாக விளையாடத் தொடங்கலாம். சிரமமில்லை.நல்ல நேரப்போக்கு.

இல்லையென்றால் வீட்டில் இருந்தபடியே எதிரே பரந்து விரிந்துக் கிடக்கும் மலையை ரசிக்கலாம். அதுபோல,  ஆர்வமுள்ளவர்ளுக்கு வெளியே மலையேற்றம், படகுச் சவாரி போன்ற பல விசயங்கள் இருக்கின்றன.

கோடையில் பச்சை ஆடைபோர்த்தியது போலிருக்கும் இந்த மலை "இலையுதிர் காலம்"எனும் பாஃல்  சீசனில் வண்ண பட்டு
போர்த்தியதுபோல் ரம்யமாயிருக்கும்.

இன்னோரு முக்கியமான விசயம்.  மலைமேல் இருக்கும் இந்த வீடுகளை இரவில் அழையா விருந்தாளிகளாக
கரடிகள்  எட்டிப்பார்க்க வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. மாலை நேரத்தில் சிறுவர்கள் வெளியே விளையாடும்போதும் கவனம் தேவை.

அப்படி எட்டிப்பார்க்கும் கரடிகள் குப்பைத் தொட்டிகளை வேட்டையாடவும் வாய்ப்பிருப்பதால் அதனை சகலபாதுகாப்புடன்
வைத்திருக்கிறார்கள் பாருங்கள். (படத்தில்)

அடுத்து, நண்பர்களுடன்மலையேறிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். காத்திருங்கள்.

4 comments:

  1. மர வீடு சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அசத்தல் தான். வருகைக்கு நன்றி!!

      Delete
  2. அட... என்னவொரு அழகான வீடு...

    ReplyDelete
  3. ஆம். பெரிய வீடுகளும் அழகே. வருகைக்கு நன்றி!!

    ReplyDelete