Tuesday, August 13, 2019

அமெரிக்கத் தமிழ் பண்பலையில் நேர்காணல்

அமெரிக்கத் தமிழ் பண்பலையின் (US Tamil FM ) வானோலிக்கு தந்த நேர்காணல் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. எழுதுவது என்பது ஒரு கலை என்றால் பேசுவது இன்னொரு கலை.   இரண்டுக்கும் முறையாக பயிற்சி தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எழுத்தும் பேச்சும் இரண்டும் இரு வேறு உலகங்களாக இருக்கின்றன.
எழுத்தில், சிந்தித்து பல மணிநேரங்கள் மெனக்கெட்டு மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிய கட்டுரையைப் பேச்சில் எளிதாக 5 நிமிடங்களில் கேட்பவர்களுக்கு கடத்திவிட முடிகிறது.   எழுத்தில் சொற்களின் தேர்வு, நடை என்றால் பேச்சில் குரலும், போதிய இடைவெளி விடுவதும் சேர்ந்து கொள்கிறது. ஆனால், எழுத்தில் இருக்கும் கட்டட்ற சுதந்திரம் பேச்சில் இல்லை. குறிப்பாக பதற்றம். சொல்லவந்த விசயம் சரியாக சொல்லப்பட்டதா கேட்பவர்களால் சரியாக புரிந்துகொள்ளப்பட்டதா என எழும் அந்த சந்தேகம் இயல்பானதே.

பேச்சில் இருந்துதான் எழுத்து தோன்றியிருக்க வாய்ப்பிருந்தாலும் எழுத்தில் கேலோச்சிய ஒரு சில எழுத்தாளர்களே மேடைப் பேச்சிலும்  பரிமளித்திருக்கிறார்கள். ஜெயகாந்தன், சுஜாதா பேசிக் கேட்டவர்களுக்கு இது தெரிந்திருக்கும். அதற்கு மொழி கூட ஒருவித தடையாக இருந்திருக்கலாம். கொஞ்சம்  இதில் உள்ளே நுழைந்து பார்த்தால் எழுதுவதும் பேசுவதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருவதாக சொல்கிறார்கள். ஒரு ஆய்வில் பக்கவாதம் பாதிக்கப்பட்ட சிலரிடம் ஒருவன் ஓடும் படத்தைக் காட்டியபோது "அவன் ஓடுகிறான்" எனச் சரியாக சொன்னவர்கள் எழுதும் போது "அவன் ஓடுகிறது" என தவறாக எழுதினார்களாம்.

நாம் விசயத்துக்கு  வருவோம். வானொலி நிகழ்ச்சி கேள்வி பதில் என்பதனால்  மேடைப் பேச்சு போல் பெரிய முன் தயாரிப்புகள் எதும் தேவைப்படவில்லை. பதில் இயல்பாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் யோசித்து வைத்திருந்தேன். மற்றபடி எதிர்முனையில் இருந்த தொகுப்பாளர் மனோ எஃப்எம் பாணியில் சரளமாக பேசினார். நான் சிக்கலில்லாத எளிய பதிலை யோசித்து பேசியதாகவே நினைக்கிறேன். நீங்களே கேளுங்கள்.

நேர்காணல் ஒலிப்பதிவின் இணைப்பு:


(https://youtu.be/ZLSp0mR9OBA)
நன்றி  R.J.மனோ

1 comment: