Thursday, August 1, 2019

கல்கண்டு லேனா தமிழ்வாணன் தந்த ஆச்சர்யம்

கல்கண்டு பத்திரிகை பள்ளி நாட்களில் அறிமுகமான போது பத்து, பதினோரு வயது இருக்கும் என நினைக்கிறேன். அப்போது பக்கத்து வீட்டில் வாங்கிக்கொண்டிருந்தார்கள். அளவில் மிகச் சிறியதாக  இருக்கும் அந்தப்புத்தகம் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்க்கு கிடைத்ததாக ஞாபகம்.  அப்போது கல்கண்டு கையில் கிடைத்தால் ஆர்வமாக முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வாசித்துவிட்டுத் தான் கீழே வைப்பேன். அந்த அளவுக்கு விறுவிறுப்பான பல விசயங்கள் இருந்தன. இத்தனைக்கும் அவர்கள் சினிமாவுக்கு என ஒருபக்கம் மட்டுமே ஒதுக்கியிருந்ததாக நினைவு. அதில் முக்கியமாக என்னை மிகவும் கவர்ந்தது வெளிநாட்டுத் துணுக்குச் செய்திகளும் லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளும் தான்.

சொந்த ஊரை வீட்டு வெளியூர் போவதே பெரிய விசயமாக இருந்த அந்தநாட்களில் அவருடைய பயணக்கட்டுரைகள் மிகப்பெரிய திறப்பாக இருந்தன. அவர் ஒவ்வொரு வாரமும் ஜப்பான், சுவிச்சர்லாந்து என பறந்து
பறந்து எழுதும் கட்டுரைகளை வியப்போடும், ஆச்சர்யத்தோடும் படிப்பேன். கூடவே லேனா தனது அக்மார்க்கான கறுப்புக்கண்ணாடியுடன்  மிக நேர்த்தியாக உடையணிந்த வண்ணப் படங்களைப் பார்க்கும்போது
ஏக்கமாக இருக்கும் எனச் சொல்வதில்
எனக்கு பெரிதாக வெட்கமில்லை.
நான் இன்று அமெரிக்காவில் வசிக்கிறேன். ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் பல வெளிநாடுகளுக்கு ஊக்கத்தோடு பயணப்பட்டிருக்கிறேன். அந்தப் பயண ஆர்வத்துக்கு கல்கண்டு பத்திரிக்கையும், லேனாவும் ஒருவிதத்தில் காரணம் என்றே நினைக்கிறேன்.

சமீபத்தில் சிகாகோ மாநாட்டில் லேனா தமிழ்வாணனைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நல்லிரவிலும் வழக்கமான உற்சாகத்தோடு பேசினார். எனது வனநாயகன் நாவலைப்
பரிசளித்தபோது,  "அமெரிக்கா வந்தும் உங்களுக்கு தமிழ் ஆர்வமா.." எனப்  பாராட்டியர், "ஓ, கிழக்கு பதிப்பகமா ?  தரமான நூல்களை வெளியிடுவார்களே..." என சிலாகித்தார்.

இன்று மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாகியான அவர் அப்படி மனம் திறந்து என்னிடம் சொல்லியிருக்கத் தேவையில்லை.  அது அவருடைய வெளிப்படைத் தன்மையைக் காட்டுகிறது. இறுதியாக அவருடைய பயணக்கட்டுரைகள் என் வாழ்வில் மிகப்பெரிய தூண்டுதல் என்றபோது மகிழ்ச்சியாக சிரித்தபடி கைகுலுக்கி விடைபெற்றார். ஒரு எழுத்தாளனுக்கு  ஒரு வாசகன் இதைவிட வேறென்ன பெரிய பாராட்டைத் தந்துவிட முடியும் சொல்லுங்கள்.

நன்றி - முதல் படம் இணையம்.

2 comments:

 1. கல்கண்டு எனக்கும் பிடித்த ஒரு வார இதழ். நெய்வேலியில் இருந்த வரை வாசித்திருக்கிறேன் - முதல் பக்கம் முதல் கடைசி வரை - துணுக்குகளும், பயணக் கட்டுரைகளும் எனக்கும் பிடித்தவை.

  தலைநகர் தில்லி வந்த பிறகு கல்கண்டு மட்டுமல்லாது பல வார/மாத இதழ்களும் வாசிப்பது விட்டுப் போனது.

  அவருடன் நேரில் சந்தித்து நீங்கள் அளவளாவியதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. அன்றைய காலகட்டத்துக்கு அந்த உள்ளடக்கம் விரும்பப்பட்டது. இன்றைய தேவை வேறாக இருக்கிறது என்பதே நிதர்சனம்.

   வருகைக்கு நன்றி.

   Delete