Friday, August 30, 2019

திருநெல்வேலி திருடர்கள்

திருநெல்வேலி அருகே முதியவர்கள் இருவர் திருடர்களை  விரட்டயடிக்கும் வீடியோவை பல நண்பர்கள் பகிர்ந்திருந்தனர்.  தற்போது அந்த வீடியோ வைரலாகி வீரத்தம்பதிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன என்பதையும் கேள்விப்பட்டேன்.

இப்படி ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களைத் தீரத்தோடு போராடி ஜெயித்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால், உணர்ச்சி வேகத்தில் அவர்களைப் பாராட்டும் அதே வேளையில் இது போன்ற சம்பவங்களுக்கு பின்னால்  இருக்கும் ஆபத்து பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

கொஞ்சம் நிதாமாக பேசுவோம். உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள்  எதிர்பாராமல்  எந்தவொரு அவகாசமும் இல்லாமல் நடப்பவை.  யோசிக்க
போதிய நேரம் கிடையாது. அதனால் பெரும்பான்மையானவர்களுக்கு அந்த பதற்றத்தில் என்ன செய்வது, எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பிடிபடாது. அந்தப் பதற்றத்தையும் குழப்பத்தையும் பயன்படுத்தியே  முன் அனுபவம் உள்ள திருடர்கள்  நினைத்ததை முடித்துக்கொள்வார்கள். அந்தச் சமயங்களில் உடமையாளர்கள் ஒத்துழைக்காமல் தாக்க முற்பட்டாலோ இல்லை பிடிக்க முற்பட்டாலோ அவர்கள்  கொலை கூட செய்யக் தயங்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

இப்படி கொஞ்சம் மாற்றி யோசித்து பார்க்கலாமே.  திருட வந்தவர்களுக்கும் உடமையாளர்களுக்கும் நடந்த சண்டையை ஒருமுறை அதில்  ஒருவர்  முதியவரின் பின்னால் வந்து  கழுத்தை பலங்கொண்ட மட்டும் இறுக்குகிறார். மற்றோருவர் பெண்மணியிடம்  ஆக்ரோசமாக அருவாளை வீசுகிறார். இந்தப்போராட்டத்தில் யாரேனும் ஒருவர் படுகாயமடைந்திருந்தால் இல்லை நடக்கக்கூடாதது நடந்திருந்தால் என்ன சொல்லி இருப்போம் ? "எதுக்கு இந்த வேண்டாத வேலை, போனா போகுது காசு தானே, போனா சம்பாரிச்சுகலாமே" என்றுதானே ?. இல்லை திருடனே கொல்லப்பட்டிருந்தால். இன்றைய சூழலே சுத்தமாக மாறி இருந்திருக்குமே ? அந்த வீடியோவை சகஜமாக வெளியாக அனுமதித்திருப்பார்களா ?  இல்லை தற்காப்புக்காக செய்தோம் என உடமையாளர்கள் நிம்மதியாக  வீட்டில் இருந்துவிட முடியுமா  என்ன ? அந்த அளவுக்கு குடிமக்களுக்கு அனுசரணையான சட்டதிட்டங்கள் நம்மிடம் இன்று இருக்கின்றனவா என்ன ?

அதனால், உடமைகள் முக்கியம்தான் அதைவிட பாதுகாப்பு அதிமுக்கியம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தற்காப்பு  எனும் பெயரில் யாரும்   சாகச செயலில் இறங்காமல் இருப்பதே நல்லது.

அரசு வீரத்தம்பதியினருக்கு விருது வழங்கும் அதே வேகத்தை ஏன் அதைவிட கூடுதல் வேகத்தை இதுபோன்ற சமூகவிரோதிகளைப் பிடித்து தண்டனை பெற்றுத் தருவதில் காட்டவேண்டும்.  இதுபோல நேற்று சென்னையில் காதலியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனைத் 
பறித்து சென்றவனைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். காரணம் கேட்டால் "காதலியின் பரிட்சைக்கு பணம் காட்ட காசில்லை" என்றானாம்.
அது எந்த அளவு உண்மை எனத் தெரியவில்லை.  ஆனால், பெருகிவரும் வழிப்பறி,  திருட்டு கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களுக்கு குடி, போதை, சமூக ஏற்றத் தாழ்வு, வேலைவாய்ப்பின்மை என பலகாரணங்களைச் சொல்கிறார்கள் . உண்மை காரணங்களைக் கண்டுபிடித்து சீர் செய்யவேண்டியது அரசின் கடமை.

உதாரணமாக தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சமூகவிரோத வழக்குகள் எத்தனை. அது முந்தைய பத்தாண்டுகளைவிட எத்தனை மடங்கு அதிகம் போன்ற உண்மை  தரவுகளை வெளிப்படையாக
தவறில்லாமல் வெளியிடவேண்டும். அதை நீண்டகால நோக்கில்  களைய என்ன வழி என்பதையும் யோசிக்கவேண்டும். அதை விடுத்து வெகுஜன மக்களைத் கையில் தடி எடுக்கச் சொன்னால் அது காலப் போக்கில் பல புதிய பிரச்சனைகளுக்கு  வழிவகுத்துவிடும். அது  அனுமனின் வாலில் வைத்த தீ போல மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment