Wednesday, August 21, 2019

மதுரையில் ஓடிய கடல் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -4)

இதன் முந்தைய பதிவு இங்கே..

சூலை-7 ஞாயிற்றுக் கிழமை 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்
இறுதி நாளாக இருந்தாலும். ஒரு விதத்தில் பிரகாசமான நாளாக இருந்தது.

தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அமெரிக்கப் பேரவை விழா, சிகாகோ தமிழ்ச்சங்க பொன்விழா, தொழிற் முனைவோர் கூட்டமைப்பு
என கோலகலமாக அரங்கங்களில் களைகட்டியிருந்த மக்கள் கூட்டம்
அன்று குறைந்து தமிழ் அறிஞர்களுக்கு பூரணமாக வழிவிட்டிருந்தது.

அதுபோல மற்ற நாட்களைப் போல உணவுக்காக நீண்ட வரிசையில்
காத்திருக்க வேண்டிய நெருக்கடியும் அன்று இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக காலை உணவு நேரம்
தமிழகத்தில் இருந்து வந்த பல விருந்தினர்களுடன் நெருக்கடி இன்றி
உரையாட வாய்ப்பாக இருந்தது. பேராசிரியர் ஞானசம்பந்தம், மருத்தவர் சிவராமன், எழுத்தாளரும், பதிப்பாசிரியருமான லேனா தமிழ்வாணன், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கவிஞர் சல்மா, பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், மக்கள் சிந்தனைப் பேரவை ஸ்டாலின் குணசேகரன் பலரைச் சந்தித்து உரையாட முடிந்தது.

காலை அமர்வுகள் 8:30 மணி முதல் 11:45 மணி வரை ஏற்பாடாகி இருந்தன. அந்த அமர்வுகளில் மொத்தமாக 17 ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.  இணை அமர்வு எனும் நேர நெருக்கடி இருந்ததால் முன்பே திட்டமிட்டு விருப்பமான சில  ஆய்வுக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன்.

அதுமட்டுமில்லாமல் ஆய்வரங்குகள் அடுத்தடுத்து இருந்ததால் பார்வையாளர்கள் தயக்கமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட அரங்குகளுக்குச் சென்று விருப்பமானவற்றைத் தேர்தேடுத்தார்கள். காலையில் நான் கலந்து கொண்ட ஆய்வரங்கங்கள் புகைப்படங்களுடன்..

1. "Unfurling the mysteries behind ancient port city Poompuhar and understanding the socio-cultural evolution of the Tamils" -  Dr. SM. Ramasamy / Dr. Saravanvel

ஆய்வின் நோக்கம்-  பண்டைய துறைமுக நகரமான பூம்பூகாருக்குப் பின் உள்ள மர்மங்களை அவிழ்த்து, தமிழர்களின் சமூக-கலாச்சார பரிணாமத்தைப் புரிந்துகொள்வது.

முதலில் கடல்கோள் (கடல் நீர்மட்ட உயர்வு) நிகழ்வால் இன்றுவரை  பூம்புகாரின் உண்மையான வயதைக் கணக்கிடுவது மர்மமாகவே தொடர்வதாக சொன்னவர்கள்.
பிறகு பழைய புகார் இன்றைய பூம்புகாரில் இருந்து  தள்ளி 30 கீ.மீ தூரத்தில்
கடலுக்குள் இருப்பதாக பல தரவுகளை முன்வைத்தனர். பிறகு பூம்புகார் குறித்த இலக்கியச் சான்றுகளைத் தாண்டி அறிவியல் பூர்வமான
சான்றுகளைத் தேடி கடலுக்கடியில் திட்டமிடப்பட்டுள்ள, நடைபெறும்  ஆராய்ச்சி பற்றியும் விளக்கினார்கள். அதுபோல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்டைய மதுரையில் கடல் ஓடியது. ஒரு காலத்தில் காவேரி சென்னை வரைப் பாய்ந்தது என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிட்டார்கள்.

முக்கியமாக பூம்பூகாரைக் கண்டடைவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற பூகோள மாற்றங்களை மிகச் சரியாக கணிப்பது அவசியம் எனும் கருத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் தமிழர்களின் அடையாளம் சிலப்பதிகாரம், பத்தினி தெய்வம் கண்ணகி என்றெல்லாம் பெருமை கொள்ளும் நாம் இதுவரை ஏனோ முறையான அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகளை (for physical evidence) மேற்கொள்ளாமல் இருப்பதை நினைத்து நாம் ஆதங்கப்படுவதைத் தவிர வேறுவழி இல்லை.







ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சாற்றுகள் குறித்து அடுத்த பதிவில்...

2 comments: