பொதுவாக, இந்தியர்களின் பெயர்கள் கொஞ்சம் நீளமானது என்ற வகையில் நமது பெயர்கள் மேற்கு நாடுகளில் கிண்டலடிக்கப்படும். "பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில் தானே எல்லாம் இருக்கிறது" என்ற ஒரு கவிதையைக் கூட கேட்ட ஞாபகம் இருக்கிறது. அதற்காக நாம் எண் கணிதம் எனும் நியூமராலஜிக்குள் (numerology) நுழையவேண்டியதில்லை.
இத்தனைக்கும், மேற்கு நாடுகளில் முதல் பெயர் (First Name), குடும்பப் பெயர் (Last Name) ஏன் மிடில் நேம் (Middle Name) கூட வைத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. நமக்கு, அப்பா பெயரைக் குடும்பப் பெயராக பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலத்தினர் இன்னமும் ஜாதி பெயரைச் சுமந்து திரிகிறார்கள்.
நான் கவனித்தவரை, ஆந்திர நபர்களின் பெயர்கள் (குறிப்பாக ஆண்கள்) மிக மிக நீளமானவை. நா.முத்துக்குமாரின் "ஆடு மாடு மேல உள்ள பாசம், வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்..." எனும் திரைப்பாடல் வரிகள் போல. ஆந்திர மக்கள் இன்னமும் தாத்தா, பாட்டி பெயர், ஊர்ப்பெயர், குல தெய்வப் பெயர்களை எல்லாம் இணைத்துக் கொள்கிறார்கள்.
என்னுடன் வேலை செய்த ஒரு தெலுங்கு நபருடைய பெயர் 'ராஜிவ் கிருஷ்ணமாச்சாரியலு ஸ்ரீமத் திருமலை சதீஷ்'. அவரைச் சுருக்கமாக சதீஷ் என்போம். இவ்வளவு ஏன், இந்தியாவிலே நீண்ட பெயருள்ள இரயில் நிலையம் ஆந்திராவில் தான் இருக்கிறது. 'வெங்கட நரசிம்ம ராஜுவரிபேட்' (Venkata Narasimha Rajuvaripet) என்கிறது கூகுள்.
நமது வீடுகளில் நாராயணசாமி என்ற பெயரே கொஞ்சம் நீளமாக இருப்பதாகக் கருதி நாணு என்றோ, சிவக்குமாரை சிவா என்றோ காமாட்சியை காமு என சுருக்கி வசதிக்காக அழைப்போம். அந்த வகையில், நகரத்தார் வீடுகளில் விசாலாட்சியை, சாலா என்றும், சிவகாமியை சோகு என்றும், பழனியப்பனை பழம் என்றும் கூப்பிடுவார்களாம்.
பிளாக் எனும் வலைப்பூக்கள் வந்த சமயத்தில் பலர் வேதாளம், சிறுத்தகுட்டி, புலிக்குட்டி என்றெல்லாம் புனைப்பெயரில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று கூட 'போடா டேய்' என்ற பெயருடைய ஒருவர் நட்பு விடுப்பு கொடுத்திருந்தார். அந்த நாட்களில் இராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் போன்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது போல, பள்ளி நாட்களில் சுண்டெலி, கணக்குப்புலி, மூக்கொழுகி எனப் பட்டப் பெயர்கள் வாங்கியவர்கள் தானே நாமெல்லாம் ? :)
No comments:
Post a Comment