Saturday, September 26, 2020

இர்மா-அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினம்

"இர்மா-அந்த ஆறு நாட்கள் "குறித்து முகநூல் வாசகர்  Senthan Sethirayar  அவர்களுடைய  பதிவை இங்கே பகிர்கிறேன். நன்றி செந்தன் !!

//புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்பது பெரும்பாலும் ஈழ புலம்பெயர் இலக்கிய சூழலையொட்டியே அதிகம் இருக்கும். தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிணி தொழில்நுட்ப வேலைகளினால் கடந்த இருபது வருடமாக பெருமளவில் அதிகரித்ததென்றாலும், இயல்பிலேயே வாசிப்பு தன்மை அதிகமில்லாததால், நம் சமூகங்களிலிருந்து பெருமளவிலான படைப்புகள் உருவாவதில்லை. அப்படியான ஒரு சூழலில் எழுத்தாளர்  திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் “இர்மா - அந்த ஆறா(ஆறு) நாட்கள்”  எனும் புதினம் அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை பதிவு என்றே சொல்லலாம்.

எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் புத்தக வாசிப்பு பற்றிய பேஸ்புக் நேரலையை பார்த்தபிறகு அவருடைய “இர்மா - அந்த ஆறா (ஆறு) நாட்கள்” 


நாவலை கிண்டிலில் வாங்கினேன். மனிதர் ஏமாற்றவில்லை, கடந்த இரண்டு வருடங்களாக ஃப்ளோரிடா வாசியானதால், இங்கு மக்கள் ஹரிக்கேன் எனும் பெரும்புயலுக்கு எப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியும், அதே சமயம் தெற்கு ஃப்ளோரிடா பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பலரும் அவர்களின் இர்மா புயல் காலத்திய நினைவுகளை பகிர்ந்திருந்தது என கிட்டதட்ட இந்த புனைவு குறிக்கும் காலநிகழ்வுகளில் இயல்பாக பொருத்திக்கொள்ள முடிந்தது.

கதையின் மையம் என்பது வாழ்வின் நிலையில்லாமையை காட்டுகிறது, நிகழ்வுகள் யாவும் பரணி எனும் கதை நாயகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. பரணி வேலை நிமித்தமாக அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்தாலும், சொந்த ஊரின், மக்களின் நினைவுகள் பரணியின் மனதில் வரும் போது காட்டும் நிலையில்லாமையிலிருந்து, இர்மா எனும் ராட்சத ஹரிகேனினால் தன் வீட்டை விட்டு பாதுகாப்பு தேடி வேறு ஊருக்கு செல்லும் போது பரணிக்கு ஏற்படும் மனபோராட்டம் காட்டும் நிலையில்லாமை என்று தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் மிக விரிவாக அமெரிக்க வேலை சூழல், வீட்டு சூழல், குடியுரிமை பிரச்சனைகள், புலம்பெயர்ந்த ஒருவனின் பார்வையில் அமெரிக்க மக்கள் பற்றிய அவதானிப்புகள், அமெரிக்காவின் பொது நிர்வாக கட்டமைப்புகள், கருப்பின மக்களின் துயரங்கள் என்று பலவற்றையும் தொட்டு செல்கிறது. சில இடங்களில் அதுவே சற்று தோய்வாகவும் இருக்கிறது. ஆனால் அமெரிக்க புலம்பெயர் சூழலில் வாழாதவர்க்கும் சேர்த்தே எழுத்தப்பட்டது என்பதால்,இப்படி இருப்பதே புனைவினுள்ளே வாசகனை இழுக்க செய்கிறது. 

ஹரிக்கேன் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் ஊரைவிட்டு வேறு பாதுக்காப்பான ஊர்களுக்கு போகலாமா வேண்டாமா என்று நடக்கும் மன போராட்டம் என்பது ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழ்ந்திராதவற்கு விளங்காத ஒன்று. ஆனால் அப்படியான நாட்களில் பரணியின் எண்ணவோட்டம் என்பது இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் எண்ணவோட்டங்களை  அப்படியே பிரதிபலிக்கிறது. கடந்த   ஹரிக்கேன் சீசனில் வந்த புயலில் ஏறகுறைய இதே நிலைமை தான் எனக்கும். 

அமெரிக்காவுக்கு புலம்பெயரும் முதல்தலைமுறை தமிழர்கள் பலரின் நெருக்கடிகளை அப்படியே எழுதியிருக்கிறார். பரணி புயல்கால சமூக பணிகளுக்கு(volunteering) தன் பெயரையும் கொடுக்கட்டுமா என கேட்கும் போது அவன் மனைவி, வீட்டில் பிள்ளை குட்டிகளை வைத்து கொண்டு தங்கள் பாதுக்காப்பே கேள்விக்குறியாக இருக்கும் போது எதற்கு இந்த வேண்டாத வேலை என கடிந்துகொள்வது, என்ன தான் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க வீடு வாங்கி பிள்ளைகளோடு வாழ்ந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும் போது பலருக்கும் புலம்பெயர்ந்த நிலம் அன்னிய நிலமாகவே தம் காலமுழுதும் இருக்கும் என்பதை அழகாக சில சொற்களில் காட்சிபடுத்தியிருக்கிறார்.

அதே போல, தன் சக பணியாளர்கள் புயலுக்கு பிறகான மறுசீரமைப்பு வேலைகளில் கடுமையாக வேலை செய்யும் போது, தான் மட்டும் அட்லான்டாவில் பாதுக்காப்பாக இருப்பதில் பரணிக்கு ஏற்படும் குற்றயுணர்ச்சியை காட்டும் இடங்கள் அருமை.  

அமெரிக்க வாழ்க்கை பற்றி பரணியின் எண்ணங்களாக வரும் வார்த்தைகள் எல்லா புலம்பெயர் தமிழர்களின் எண்ணங்களே, இவ்வாழ்க்கையில் பல சமயங்களில் பெறுவதை விட இழப்பது அதிகமென்றே தோன்றும். இங்கே புதிதாக தமிழர்களை சந்திக்க நேர்ந்தால், பேச்சு அமெரிக்கா வந்ததினால் ஏற்படும் இழப்புகளை பற்றி பேசாமல் முடியாது. 

அதே சமயம், சில சமயங்களில் பரணியின் மனவோட்டங்களாக எழுத்தாளரின் எண்ணங்கள் வலிந்து திணிக்கப்பட்டது போன்று தோன்றவதையும் சொல்லியாக வேண்டும் , குறிப்பாக புயலை நினைத்து வருத்தப்படும் போது வாழ்கையை பற்றிய அவதானிப்புகள் ஏற்கனவே பல புதினங்களில் படித்தது போலவே இருப்பது, அட்லான்டா நோக்கி பயணப்படும் போது வரும் புலம்பெயர்தல் பற்றிய வர்ணனைகள், என்று, சில இடங்களில் சற்று ஆசுவாசபடுத்துகிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில் வரும் கருப்பர் இன சம்பந்தமான பதிவுகளும், புனைவும் தேவையில்லாமல் கருப்பர்கள் பற்றிய கருத்தை பதிவிட எழுதப்பட்ட இடைச்சொருகளாக தோன்றியதை தவிர்க்கமுடியவில்லை.

இதையெல்லாம் தாண்டி அமெரிக்க வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையும் மனவோட்டங்களையும் அதனுள்ளே இழையோடும் நிலையில்லாமையையும் இவ்வளவு விரிவாக வேறு யாரேனும் பதிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதற்காகவே அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினங்களில் ஒன்று.

ஒரே வருத்தம், பதிப்பித்த நூலில், மேலும் சில பின் இணைப்புகளை செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன், அவற்றை வாசிக்கமுடியாமல் போய்விட்டது. வாய்ப்பு கிடைத்தால் வாங்கி வாசிக்க வேண்டும். 

கிண்டிலில் வாங்க - https://www.amazon.com/அந்த-நாட்கள்-Tamil-ஆரூர்-பாஸ்கர்-ebook/dp/B07NBDM78S/ref=mp_s_a_1_1?dchild=1&keywords=இர்மா&qid=1592258584&sr=8-1

//

புத்தகத்தை இணையத்தில் (எழுத்து பிரசுரம்) வாங்க:

No comments:

Post a Comment